அத்தியாயம் 82
விடியல் பொழுதில் தான் மோகனா மகிழபுரியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். அரண்மனை வாயிலில் அரசர் மகாராணியார் மற்றும் இளவரசருடன் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
மித்ரன் தன் தோளில் கிளியாக அமர்ந்திருந்த ரஞ்சனியிடம், தனது சந்தேகத்தை கேட்க தொடங்கினான்.
"ரஞ்சனி, நிஜமாக இவள் சூலாயுதத்தை அந்த தெருவில் நட்டு வைத்திருப்பாளா? அல்லது அதை கண்டு பயந்து இங்கு ஓடி வந்திருக்கின்றாளா? எனக்கு என்னவோ இவள் ஏதோ திட்டத்துடன் தான் இதை செயல்படுத்திக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது."
"எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது இளவரசே, அவளோடு பழகியதால், அவளைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பதால் கூறுகிறேன், மோகனா எந்தவித ஆதாயமும் இன்றி ஒரு செயலில் ஈடுபட மாட்டாள்."
"சரி ரஞ்சனி ஊர்வலம் அரண்மனையை நெருங்கி விட்டது, மோகனாவின் கண்களில் நீ படுவதற்கு முன்பு, எங்காவது சென்று ஒளிந்து கொள்."
பச்சைக்கிளி அவன் தோளிலிருந்து பறந்து சென்று, அரண்மனை கோட்டை சுவரின் மீது அமர்ந்து கொண்டது.
ஊர்வலம் அரண்மனைக்கு அருகே நெருங்கும்போதுதான் மித்ரனின் காதுகளில், மக்கள் முழங்கிக் கொண்டிருக்கும் கோஷம், தெளிவாக கேட்டது. ஏனோ அவனால் அதன் பிறகு அங்கு நிற்க முடியவில்லை, உடனே அங்கிருந்து அரண்மனையின் உள்ளே திரும்பி சென்று விட்டான்.
மக்கள் வெள்ளம் சூழ அரண்மனையை அடைந்த மோகனா பல்லக்கிலிருந்து இறங்கி, அரசரை நோக்கி வந்தால். அரசர் மற்றும் மகாராணியாரின் கால்களில் விழுந்து வணங்கியவள், அரசரிடம் தன் கையில் இருக்கும் தீர்த்தத்தை, பூஜை அறையில் வைத்துவிட்டு வருவதாக கூறி, ராணியாருடன் பூஜை அறைக்கு சென்றால், ரஞ்சனியின் உருவத்தில் இருக்கும் மோகனா.
அரச குடும்பத்தார் அரண்மனைக்குள் செல்ல, மக்கள் கூட்டம் கலைந்து சென்றது. ஆலோசனை மண்டபத்தில் அமைச்சர்கள் சூழ அமர்ந்திருந்த அரசரிடம், ஜோதிடரின் வேஷத்தில் இருந்த ராட்சசன் பேசத் தொடங்கினான்.
"அரசே பௌர்ணமி பூஜை நல்லபடியாக முடிந்தது, இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டு மக்களுக்காகவும் ரஞ்சனி தன் உயிரையே பணயம் வைத்து, இந்த பூஜையை செய்துள்ளார்."
மோகனாவுடன் வந்த வீரர்களும், அங்கு லந்தங்காட்டில் நடந்தவற்றை அரசருக்கு எடுத்துக் கூறினார்.
"இப்படிப்பட்ட பரந்த உள்ளம் கொண்ட ஒருவர், நமது நாட்டின் அரியணையை அலங்கரிப்பது தான் நல்லது என்று எமக்குத் தோன்றுகின்றது."
"என்ன கூறுகிறீர்கள் ஜோதிடரே? ரஞ்சனியை ரகுநந்தனுக்கு திருமணம் முடிக்க, அவர்களின் பெற்றோர்கள் உங்களிடம் தானே தேதி குறித்துச் சென்றார்கள்? மறந்து விட்டீர்களா?"
"நான் மறக்கவில்லை அரசே, ஆனால் ரகுநந்தன் தான் இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லையே? இப்போது இருக்கும் சூழ்நிலையில் இளவரசரின் திருமணத்தால் நமது நாட்டிற்கு நன்மை கிடைக்கும் எனில், நாம் ஏன் அதை மறுக்க வேண்டும்?"
வீரர்களை அவர்களின் இல்லத்திற்கு கிளம்புமாறு கூறிய அரசர், அமைச்சர்களை வெளியே காத்திருக்குமாறு கூறிவிட்டு, அவர்கள் சென்றவுடன் அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு,
"ஆனால் ஜோதிடரே இளவரசருக்கு தான் திருமணம் முடிந்து விட்டது."
ராட்சசனின் விழி வழியாக அங்கு ஆலோசனை மண்டபத்தில், அரசர் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருந்த மோகனா, அப்படியே வழியில் அதிர்ந்து நின்று விட்டாள்.
"என்ன ஆயிற்று ரஞ்சனி? எதற்காக நின்று விட்டாய்? பூஜை அறையில் தீர்த்தத்தை வைக்க வேண்டாமா?"
"அத்தை தாங்கள் இதை பூஜை அறையில் வைத்து விடுங்கள், நான் இப்போது வந்துவிடுகிறேன்."
மகாராணி கூறுவதை கேட்க அவள் அங்கு இல்லை, திரும்பி தனது அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
ராட்சசனின் வாய் வழியாக அரசருடன் அவளே பேசத் தொடங்கினாள்.
"என்ன கூறுகிறீர்கள் அரசே, இளவரசருக்கு திருமணம் முடிந்து விட்டதா?"
"ஆம் ஜோதிடரே எங்களுக்கு கூட தெரியாமல் அவன் சிறு வயதிலேயே, காட்டில் வாழும் ஏந்திழை அம்மையாரின் மகளை கந்தர்வ மனம் புரிந்து கொண்டான். அது மோகனா இறந்த தினத்தன்று தான் எங்களுக்கு தெரிய வந்தது. அதை உங்களின் குருநாதர் தான் அவர்களுக்கு ஆசீ வழங்கி நடந்தவற்றை எங்களுக்கு விளக்கினார்."
"எதற்காக இளவரசருக்கு திருமணம் நடந்ததை, ஒருவருக்கும் சொல்லாமல் வைத்திருக்கிறீர்கள்? அந்த காட்டில் வாழும் பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொள்ள தங்களுக்கு விருப்பம் இல்லையா?"
"என்ன ஜோதிடரே இப்படி கேட்டு விட்டீர்கள், மதுரவாணி கொற்றவை அன்னையை மந்திர கட்டில் இருந்து விடுவிக்க, அந்த அன்னைக்கு 48 நாள் பூஜை செய்து கொண்டிருக்கிறாள். அது ஒருவேளை மோகனாவின் ஆன்மாவிற்கு தெரிய வந்தால் அவளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும், அதனால் தான் இப்போதைக்கு யாரிடமும் சொல்லாமல் இளவரசருக்கு திருமணம் நடந்ததை மறைத்து வைத்திருக்கிறோம். 48 நாட்கள் முடிந்த பிறகு கொற்றவை தேவி கோயிலில் திருவிழாவை நடத்தி விட்டு, இவர்களின் திருமண விஷயத்தை மக்களுக்கு தெரிவித்து விடுவோம்."
"அரசே இப்போது யார் யாருக்கெல்லாம், இளவரசருக்கு திருமணம் முடிந்து விட்டது என்று தெரியும்."
"மகாராணி, பிரதீபன், ரகுநந்தன் மற்றும் ஏந்திழை அம்மையாருக்கு மட்டுமே இது தெரியும்."
தீவிரமாக யோசித்த ரஞ்சனி ராட்சசனுக்கு கட்டளைகளிட தொடங்கினாள்.
"ரத்தமாறா உடனே உனது உருவத்தை மாற்றிக்கொண்டு அரசரின் உடலினுள் புகுந்து விடு."
ரஞ்சனி கட்டளை இட்ட அடுத்த நொடியே, அந்த ராட்சசன் தனது நிஜ உருவத்திற்கு மாறி, அரசர் சுதாரிக்கும் முன்பே அவரின் உடலுக்குள் நுழைந்து விட்டான்.
பிறகு ஒரு மர்ம புன்னகையோடு ரத்தமாறனுக்கு தமது கட்டளைகளை அங்கிருந்தே தெரிவித்தால்.
அமைச்சர்களை ஆலோசனை மண்டபத்திற்குள் வரச் சொன்ன அரசர், ஜோசியர் கூறிய விஷயத்தில், அவர்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கூறினார். அவர்கள் ஜோசியர் எங்கே என்று கேட்டதற்கு, அவருக்கு ஒரு முக்கியமான வேலை கொடுத்து வெளியே அனுப்பி இருப்பதாக கூறினார்.
அமைச்சர்களும் நாட்டு மக்களின் கருத்துக்களையே அரசரின் முன்பு எடுத்துக் கூறினார். பிறகு தங்களுக்கும் அதுவே சரி என்று படுவதாக கூற,
"அமைச்சர் பெருமக்களே நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், அங்கு தோன்றியுள்ள சூலாயுதம், ரஞ்சனியின் பூஜையின் மகிமையால் அன்னை கொடுத்த வரமாக எண்ணத் தோன்றுகிறது. ரஞ்சனி நமது நாட்டினுள் பிரவேசித்த பிறகு தான், ஊருக்குள் இருந்த கெட்ட சக்திகள் விலகி, மக்கள் நிம்மதியாக இருக்க முடிந்திருக்கிறது என்கிறீர்கள் இல்லையா?"
"ஆம் மன்னா."
"அப்படி என்றால் இளவரசனுக்கும் ரஞ்சனிக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விடலாமா?"
அமைச்சர் பெருமக்களில் மூத்த அமைச்சர் முன்வந்து,
"மன்னா கொற்றவை தேவி திருவிழாவை, தாங்கள் வரும் அமாவாசை முடிந்து வைத்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறீர்கள். தேவியின் திருவிழாவிற்கு முன்பு நாம் எந்த நல்ல காரியமும் செய்வதில்லையே?"
மனதுக்குள்ளே அவரை திட்டினாலும் வெளியே சிரித்துக்கொண்டே,
"நீங்கள் கூறுவதும் சரிதான், அப்படி என்றால் அமாவாசை முடிந்து வரும் வளர்பிறை நாளில், சுப முகூர்த்தத்தில் இவர்கள் இருவரின் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்."
"சரி அப்படி என்றால் ரஞ்சினியை மகிழபுரியின், வருங்கால மகாராணியாக அறிவித்து விடலாமா?"
அவர்களில் இருந்த மூத்த அமைச்சர் மீண்டும் முன் வந்தார்,
"அரசே எதற்கும் இளவரசர் மற்றும் ரஞ்சனியிடம் இதைப் பற்றி ஒரு வார்த்தை கேட்டு விட்டு, பிறகு நாம் மக்களுக்கு அறிவிக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இதைப் பற்றி முடிவு எடுக்க வேண்டியவர்கள் அவர்கள் தான்."
"சரியாக கூறினீர்கள் அமைச்சரே, இப்போதே இளவரசனிடமும், ரஞ்சனியிடமும் இதை பற்றி பேசுகிறேன்."
No comments:
Post a Comment