Search This Blog

Followers

Powered By Blogger

Friday, August 8, 2025

மன்னவரே 79


 

              அத்தியாயம் 79


  கோபத்தில் வெடித்துக் கொண்டிருந்த ரங்கராஜ பூபதியை அமைதி படுத்திய ராஜகுரு, விஜயேந்திர பூபதியிடம் மூலிகைகளை எடுத்து வருமாறு கூறி விட்டு அவர் அங்கிருந்து நகர்ந்தவுடன், மோகனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியான குரலில் ரங்கராஜ பூபதியிடம் பேச தொடங்கினார்.


  "அமைதி கொள் ரங்கா, அந்த செம்பவள சிலைக்கு அடியில் இருக்கும் மந்திர தகடு நமது கைக்கு கிடைக்கும் வரை, அமைதியை கையாள்வது தான் நமக்கு நல்லது. இந்த உலகத்தையே நமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அது நமக்கு முக்கியமான ஒன்று


    எப்படி மோகனா, ரகுநந்தனை கருவியாக கொண்டு ரஞ்சனியை ஆட்டுவிக்கின்றாளோ? அதுபோல மித்ரனை மோகனாவின் வழிக்கு கொண்டு வருவதாக கூறித்தான், நமது காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும். உனக்கு இந்த ரத்னபுரி நாடு முக்கியமா? இல்லை ஒரு குடையின் கீழ் நீ இந்த உலகத்தை ஆள்வது முக்கியமா?"


அந்தப் பௌர்ணமி நிலவானது நடு இரவை நெருங்க நெருங்க மோகனாவின் முகம் விகாரமாக மாறத் துவங்கியது. அவளைச் சுற்றி அடுக்கடுக்காக ஒளி வட்டங்கள் தோன்ற தொடங்கின, அதிலிருந்து வரும் ஒளியானது அவளது உடலை நோக்கி பாயத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக மோகனாவின் ஆன்மாவிற்கு சக்திகள் கூடிக் கொண்டே சென்றது.


  அவளது சக்திகள் அதிகரிக்க அதிகரிக்க கெட்ட சக்திகள் யாவும்  மகிழபுரியை நோக்கி படையெடுக்கத் தொடங்கின. 


  மோகனாவின் கண்களுக்கு பிரதீபனிடம் ஒற்றன் ஒருவன் வந்து கூறும் செய்தி தெளிவாக தெரிகிறது. உடனே கண்களை மூடிய படியே ராஜகுரு மற்றும் ரங்கராஜ பூபதியிடம் இங்கிருந்து உடனே செல்லுமாறு கூறுகிறாள், அவர்கள் செல்லும்போது அவர்களுடன் ரகுநந்தனையும் அழைத்துச் செல்லுமாறு உத்தரவிடுகிறாள், அவர்கள் ஏன் என்று காரணம் கேட்க, பிரதீபன் கூடிய சீக்கிரம் லந்தங்காட்டிற்க்கு வர வாய்ப்புள்ளதாக கூறுகிறாள், இப்போதைக்கு நாம் எதிர்த்து நிற்பதை விட பதுங்கி இருப்பது தான் சரி என்று கூறி, விரைவாக செல்லுமாறு கூறுகிறாள்.


ரங்கராஜ பூபதி அவளிடம் மறுத்து பேச வாய் திறக்க, அவரது கையினை பற்றிய ராஜ குரு எதுவும் பேச வேண்டாம் என்று கண்களால் சைகை காட்டினார்.


  சிறிது நேரத்திலேயே அங்கிருந்த அனைவரும் லந்தங்காட்டில் இருந்து வெளியேற தொடங்கினர். ரகுநந்தனை சங்கிலியால் பிணைத்து வண்டியில் கட்டி இழுத்து வந்தனர். அவனைக் கண்ட ரஞ்சனியின் ஆன்மா, எப்படியாவது ரகுநந்தனை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்ற எண்ணி கொற்றவை தேவியை மனதில் துதித்துக் கொண்டே, கண்ணீரோடு அவனையே சுற்றி சுற்றி பறந்து வந்தது.


  குகையினுள் இருந்த மோகனா சிறிது நேரத்தில் தரைக்கு மேலே அமர்ந்த வாக்கிலேயே மிதக்க தொடங்கினாள். அந்தரத்தில் மிதந்து கொண்டே, தனது கைக்குள் இருந்த, மித்ரனது ஆடையினையும் அவன் தலை முடியையும் அக்னி குண்டத்தினை நோக்கி வீசினால், அடுத்த நிமிடம் மகிழபுரி அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்த மித்ரன் ஏரிக்கரையில் மயங்கி சரிந்தான்.


  அதே நேரத்தில், குருந்தங்காட்டில் தனது குடிலில் ஏந்திழை அம்மையாரின் அருகே படுத்திருந்த மதுராவிற்கு, அன்று ஏனோ தூக்கமே வரவில்லை, மனம் முழுவதும் பாரமாகவே இருந்தது, கண்களில் நிற்காமல் நீர் வடிந்து கொண்டே இருந்தது, காரணம் புரியாமல் விழித்தவள், மனது கேட்காமல் நேராக அந்த நேரத்திலும் கொற்றவை தேவி கோயிலை நோக்கி சென்றாள்.


  அந்த அன்னையை பார்த்தபடியே  மண்டியிட்டு கைகூப்பி வணங்கியவள், தொடர்ந்து அன்னையின் திருமந்திரங்களை உச்சரிக்க தொடங்கினாள்.


    மகிழபுரியிலிருந்து ரத்னபுரியை நோக்கி பயணத்தை தொடங்கிய பிரதீபன், மகிழபுரியின் எல்லையை தொடும் முன்பே பல அமானுஷ்யங்கள் காற்றில் மிதந்து கொண்டே மகிழபுரியை நோக்கி செல்வதை கண்டான்.


    அவனோடு வந்து கொண்டிருந்த நான்கு குதிரை வீரர்களையும் அவை இழுத்துச் சென்று விட்டன. அவைகள் இவனை நெருங்க முற்படும்போது, அவன் கைகளில் இருந்த தாயத்து அவற்றை சுட்டெரித்தது.


   மதுரா மந்திரங்களை உச்சரிக்க தொடங்கியதுமே ஆகாயத்தில் இருந்து வந்த பொன்னிற மின்னல் ஒன்று, பிரதீபனுக்கு முன்பு வந்து ஒரு ஓளி பந்து வடிவில் நின்றது. ஏற்கனவே தம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளை கண்டு அதிர்ந்தவன், திடீரென்று இந்த பொன்னிற ஒளி தோன்ற அதை உற்று கவனிக்கத் தொடங்கினான். 


    அதை நெருங்கும் அமானுஷ்யங்களை அது எரித்துக் கொண்டிருந்தது, அது எங்கோ வழிகாட்டி அழைத்துச் செல்ல பிரதீபனும், ஏதோ உந்துதலில் அதனை பின்தொடர தொடங்கினான்.


  அது நேராக ஏரிக்கரைக்கு அருகே மித்ரன் மயங்கி விழுந்திருந்த இடத்திற்கு சென்று நின்றது. மித்ரனை அந்நிலையில் அங்கு கண்ட பிரதீபன் பதறிப் போய் அவனை தூக்கினான். எவ்வளவு முயற்சித்தும் மித்ரன் கண் விழிக்கவே இல்லை. 


    அந்த ஒளியானது அவர்களை விட்டு செல்ல தொடங்கியது, உடனே பிரதீபன் மித்ரனை தனது தோளில் தூக்கி போட்டுக் கொண்டு அதுபோகும் வழியினையே பின் தொடர்ந்து சென்றான். அந்த ஒளியானது மகிழபுரியின் எல்லையில் உள்ள, குருந்தங்காட்டின் வடக்கு மூலையில் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இவர்கள் அங்கு நெருங்க நெருங்க சுற்றி இருந்த அமானுஷ்யங்கள் விலகிச் செல்ல தொடங்கின.


    பிரதீபன் மித்ரனை சுமந்தபடியே அந்த ஒளியினை நோக்கி செல்ல தொடங்கினான். அந்த ஒளியானது நேராக ஒரு வேப்ப மரத்தை நோக்கிச் செல்ல, உலகாளும் அன்னையவள் அந்த வேப்ப மரத்தின் அடியில், சிலை வடிவில் கண்களில் கருணை பொங்க, வலது கால் மடக்கி, இடது கால் கீழே தொங்க விட்டபடி, கைகளில் ஆதிமுத்திரையுடன் அமர்ந்திருந்தாள், அந்த அன்னையின் கண்களில் சென்று அது ஐக்கியமானது. 


  மித்ரனை அருகே தரையில் படுக்க வைத்து விட்டு, பிரதீபன் அந்த அன்னையின் முன்பு மண்டியிட்டு கைகூப்பி நின்றான்.


  அந்த நேரத்தில் சரியாக ரகுநந்தனும் ரஞ்சனியின் ஆன்மா பின் தொடர அரண்மனை ஜோதிடருடன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.


    ஆற்று நீரில் அடித்து வரப்பட்ட அரண்மனை ஜோதிடரை காப்பாற்றி, அவருக்கு ரகுநந்தனை லந்தங்காட்டிலிருந்து பத்திரமாக கூட்டி கொண்டு வரும் பொறுப்பை அன்னையவள் ஒப்படைத்தார். வழியில் எந்த துஷ்ட சக்தியும் அவரிடம் நெருங்காமல் இருக்க,  திருநீறு பிரசாதத்தோடு, ருத்ராட்சங்களையும் அவருக்கு வழங்கினார்


  அதன்படி ஜோதிடர் லந்தங்காட்டை நெருங்கும் வேளை ரத்தினபுரியில் இருந்த பிரதீபனின் படைகளும் அவருடன் இணைந்து கொண்டனர். அவர்கள் ஏற்கனவே ஜோதிடரை அறிந்திருந்த காரணத்தால் அவரோடு சேர்ந்தே ரங்கராஜ பூபதியின் படைகளை எதிர்க்க தயாராயினர். 


  லந்தங்காட்டுக்கு வெளியே சற்று தள்ளி, பூபதியின் படைகள் வரும் வரை காத்திருந்து விட்டு, அவர்கள் அருகே வந்ததும் மகிழபுரியின் படைகள் அவர்களின் மீது தாக்குதலை தொடங்கியது.


    அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜோதிடர், ரகுநந்தனை அவர்களிடமிருந்த மீட்டு,  அன்னை கூறிய படியே இந்த இடத்துக்கு அவனை அழைத்துக் கொண்டு வந்தார். ரஞ்சனி அவர்களுக்கு அருகே காற்றிலே மிதந்த படி அன்னையவளை கை கூப்பி வணங்கிக் கொண்டிருந்தாள்.


  ஜோதிடர் தனது கையிலிருந்து திருநீறு பிரசாதத்தையும் ருத்ராட்சங்களையும் அங்கிருந்து அனைவருக்கும் வழங்கினார். மித்ரனின் நெற்றியில் திருநீரு வைத்து ருத்ராட்சத்தை அவன் கைகளில் வைத்து அழுத்த, மித்ரனுக்கு நினைவு திரும்ப தொடங்கியது.


  ருத்ராட்சத்தை கையில் வாங்கியதும் அனைவருக்கும் ஒரு புதிய சக்தி கிடைத்தது போல இருந்தது.


  அப்போது அன்னை அசரீரியாக அவர்களிடம் பேச ஆரம்பித்தார்.


  "குழந்தைகளே இப்போது கெட்ட சத்தியின் கை ஓங்கி உள்ளது, அது எப்போதும் நிலையானது அல்ல, கவலை கொள்ள வேண்டாம், நிச்சயமாக இதற்கு ஒரு விடிவு காலம் வரும். அது உங்கள் கைகளில் தான் இப்போது உள்ளது.


  பிரதீபா, ரகுநந்தா நீங்கள் இருவரும் இப்போதே சிவன்மலைக்குச் சென்று, அங்கு அகத்தியர் பூஜித்து வந்த வீரபத்திரரின் வாளை, வரும் அமாவாசைக்குள் எடுத்து வர வேண்டும். சிவன் மலைக்குச் செல்ல ஜோதிடர் உங்களுக்கு வழி காட்டுவார், ஆனால் அந்த குகையினுள் சென்று வாளை எடுத்து வருவது உங்கள் இருவரின் பொறுப்பு. அது சுலபமான காரியம் அல்ல, ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது, கண்டிப்பாக உங்களால் அது முடியும் என்று, அந்த ஈசனின் அருள் எப்போதும் உங்களுடன் துணை நிற்கும். அதை எடுத்து வந்தால் தான் இங்குள்ள கெட்ட சக்திகளை அழிக்க முடியும்.


  மித்ரா, மோகனா ரஞ்சனியின் உடலில் புகுந்து யாகத்தை செய்து, உன்னை வசியத்துக்கு உட்படுத்தி விட்டால். நீ அதற்குள் சிக்க கூடாது என்றால் இந்த ருத்ராட்சம் என்றுமே உன் கையை விட்டு போக கூடாது. உன் மனைவியின் வேண்டுதல் காரணமாகத்தான் இப்போது நான் இங்கு எழுந்தருளி உள்ளேன். அந்த வாள் உனது கைக்கு வரும் வரை நீ வசியத்தில் உள்ளது போலவே நடித்து, மோகனா சொல்வதைப் போலவே கேட்டு நடந்து வா.


  அம்மா ரஞ்சனி இனி உன் கண்ணீருக்கு அவசியமே இல்லை, உன் உடல் இந்த பூமியில் உள்ளவரை தான் அவள் மித்ரனை நெருங்க முயற்சித்துக் கொண்டே இருப்பாள். இப்போது யாகத்தின் பலனாக, நிறைய சக்திகளை அவள் பெற்று விட்டதால், ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அவளால் காற்று வேகமாக, மறைந்து செல்ல முடியும்.


  நீ எப்போதும் அவளுடனே இருந்து, அவளுக்குத் தெரியாமல் அவளை கண்காணித்துக் கொண்டே இரு, ஏதாவது ஒரு தருணத்தில் அவள் உனது உடலை விட்டு வெளியேறும் போது, நீ அந்த உடலுக்குள் புகுந்து கொள். மித்ரா ஜோதிடரிடமிருந்து  இன்னொரு ருத்ராட்சத்தை வாங்கிக் கொள், என்று ரஞ்சனி தனது உடலினுள் தனது ஆன்மாவை புகுத்துகின்றாளோ, அன்று அவளது கைகளில் இந்த ருத்ராட்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது உனது பொறுப்பு. அதன் பிறகு மோகனாவால் அந்த உடலுக்குள் செல்லவே முடியாது.


    நல்லபடியாக சென்று வாருங்கள் குழந்தைகளே, இந்த அழகு நாச்சியின்  பூரண அருளாசி என்றுமே உங்களுக்கு உண்டு."


  மித்ரன் நண்பர்களை கட்டி தழுவிக் கொண்டு, அவர்களை ஜோதிடருடன் சிவன்மலைக்கு அனுப்பி வைத்தான். ரகுநந்தனால் ரஞ்சனியை உணர முடிந்தது ஆனால் அவள் எங்கிருக்கின்றாள் என்று கண்களால் காண முடியவில்லை, அதனால் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டே கிளம்பினான்.


  ரஞ்சனியும் கண்களில் அவனை முழுமையாக நிரப்பி கொண்டு, மித்ரனுடன் மகிழபுரியை நோக்கி பறந்து சென்றாள்.

No comments:

Post a Comment