Search This Blog

Followers

Powered By Blogger

Friday, August 8, 2025

மன்னவரே 78


 

              அத்தியாயம் 78


  ஏந்திழை அம்மையார் மதுரவாணியை குகைக்கோயிலில் இருந்து அழைத்து வருவதற்காக கிளம்பிக் கொண்டிருந்தார். திடீரென்று கொற்றவை தேவி கோயிலில் இருந்து ஏதோ சத்தம் வர அங்கு சென்று பார்த்த போது, எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் தூங்கா விளக்கு அணைந்து போயிருந்தது. 


  ஏற்கனவே வாணி அதிகாலையில் கூறிய அந்த கனவினை பற்றி நினைத்துக் சங்கடத்தில் ஆழ்ந்திருந்தவர், இப்படி திடீரென்று கொற்றவை அன்னையின் ஜோதி அணைந்து இருப்பதைக் கண்டு பதறிப் போனார்.


    ஏதோ ஆபத்து ஏற்பட போவதாக மனம் உணர்த்திக் கொண்டே இருந்தது, அது எந்த ரூபத்தில் யாரை சூழ போகிறது என்று தெரியவில்லை?  ஒருவேளை வாணி கூறியதை போல் இளவரசருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படப் போகின்றதோ என்று பயந்தவர், யாரும் பார்க்கும் முன்பு அன்னையின் தீபத்தை ஏற்றியவர், அவசரமாக குகைக்கோயிலை நோக்கி செல்லத் தொடங்கினார்.


   அவர் குகைக்கோயிலினுள் நுழையும் முன்பே மதுரவாணி குகையில் இருந்து கோபமாக வெளியேறிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அவர் ஒன்றை கவனித்தார், மதுரவாணியின் கழுத்தில் மகிழபுரியின் அரச முத்திரை பதித்த சங்கிலி ஊசலாடிக் கொண்டிருந்தது.


  சிந்தனை முடிச்சோடு வாணியை அவர்  பார்க்க, அப்போதுதான் அவளும் தன் கழுத்தில் இருந்த பதக்கத்தை கவனித்தால், மாட்டிக் கொண்ட சிறுபிள்ளை போல முழித்தவள், அன்னையிடம் இளவரசர் வந்ததையும் இனிமேல் இவ்வாறு வர வேண்டாம் என்று தான் கூறியதாகவும், அவள் அன்னையிடம் எடுத்துக் கூறினால்.


  அவள் கூறியவற்றை பொறுமையாக கேட்டவர், மதுராவை தாண்டி குகையினுள் நுழைந்தார். அந்த அன்னையை கைகூப்பி மனதார வணங்கிவிட்டு, மதுராவை அழைத்துக் கொண்டு எதுவும் பேசாமல், குடிலை நோக்கி, செம்பா பின் தொடர நடக்கத் தொடங்கினார்.


  மகிழபுரி அரண்மனையில் இருந்த பிரதீபனுக்கு, ரத்னபுரியில் இருந்து அவசர செய்தி ஒன்று வந்திருந்தது. மகிழபுரியைச் சேர்ந்த வீரர்கள் பலர் லந்தங்காட்டிற்கு வெளியே மயங்கி கிடப்பதாகவும், அந்த காட்டினுள் ரத்தினபுரியின் முன்னாள் அரசர் ரங்கராஜ பூபதி தற்போது அங்கு பதுங்கி இருப்பதாகவும் ஒற்றர்ப்படை தலைவனிடம் இருந்து செய்தி வந்திருந்தது.


   இந்த செய்தியை கேள்விப்பட்டதுமே ரஞ்சனி, ஒருவேளை காட்டிற்கு வெளியே உள்ள வீரர்களில் தன் அத்தானும் இருப்பாரோ என்று எண்ணியவள், உடனே லந்தங்காட்டை நோக்கி பறந்து சென்றாள்.


    பிரதீபன், ரங்கராஜ பூபதி என்னும் விஷப்பாம்பை விட்டு வைப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உணர்ந்து, தனது தாயின் உடல் நிலையை எண்ணி வருந்தாமல், அரசரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு உடனடியாக ரத்னபுரியை நோக்கி செல்ல ஆயுத்தமானான்.


  மகிழபுரியிலிருந்து கிளம்புவதற்கு முன்பு, தனது தாயரை சந்தித்து ஆசி பெற வந்திருந்தான். மேனகா தேவி ஏதோ குளறல் மொழிகளாக பேச, அவர் பேசுவது புரியாது விழித்து நின்றான். அருகில் நின்றிருந்த கவிதாயினிக்கும் தனது அத்தையின் சைகைக்கான அர்த்தம் விளங்கவில்லை. இருந்தும் அவர் ஏதோ முக்கியமான தகவலை பிரதீபனிடம் பகிர்ந்து கொள்ள துடிக்கிறார் என்பது மட்டும் புரிந்தது.


  அதற்கு மேலும் தாமதிக்காமல் தன் தாயின் கால்களை தொட்டு வணங்கி விட்டு, பிரதீபன் அங்கிருந்து சென்று விட்டான். மேனகா தேவி கடைசி முயற்சியாக தனது கையில் இருந்த தாயத்தை கண்களால் குறிப்பு காட்டி, கவிதாயினிக்கு விளக்க  முயற்சித்தார்.


    அந்த தாயத்தை கண்ட பிறகு தான் கவிதாயினிக்கு ஞாபகம் வந்தது, அது பிரதீபனின் உடைமையிலிருந்து கிடைத்தது என்று, தனது அத்தை அதை அவனிடம் சேர்ப்பிக்கவே முயற்சிக்கிறார் என்பதை ஒருவாறு புரிந்து கொண்ட கவிதாயினி, மேனகா தேவியிடம் இருந்து தாயத்தைப் பெற்றுக் கொண்டு, அரசரிடம் விடை பெற்றுக் கொண்டிருக்கும் பிரதீபனை நோக்கி சென்று, அவனது அன்னை கொடுத்து அனுப்பியதாக கூறி அவனது கைகளில் அந்த தாயத்தை கட்டி விட்டால். 


  அதை பார்த்த உடனேயே பிரதீபனுக்கு ஞாபகம் வந்துவிட்டது, இது தனக்கு குருந்தங்காட்டில் கிடைத்த தாயத்து என்று, அதை கைகளில் கட்டிய உடனேயே உடலில் ஒரு புதுவித மாற்றத்தையும் அவன் உணர்ந்தான். மித்ரன் அப்போது அங்கே இல்லாத காரணத்தால், அவனைத் தவிர மற்ற அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு ரத்னபுரியை நோக்கி தனது பயணத்தை தொடங்கினான்.


  லந்தங்காட்டில் உள்ள குகையில் கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கண்கள் சொருக மயக்கத்தில் நின்றிருந்தான் ரகுநந்தன். அவனுக்கு சற்று தள்ளி கை கால்களில் ஏற்பட்ட ரத்த சிராய்ப்புகளுடன் இருந்த ரத்னபுரியின் முன்னாள் அரசரான ரங்கராஜ பூபதிக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜகுரு. சற்று நேரத்திற்கு முன்புதான் மோகனாவின் கோபத்திற்கு ஆளாகி தூக்கி வீசப்பட்டிருந்தார்.


    ரங்கராஜ பூபதி போரில் தோல்வியை தழுவிய பிறகு, ரத்னபுரியை விட்டு தப்பித்து சென்று, அருகில் உள்ள அண்டை நாட்டு மன்னர்களிடம் தமக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டான். மகிழபுரியை சுற்றியுள்ள சிறு சிறு அரசர்களையும், மூளை சலவை செய்து தனது படை பலத்தோடு சேர்த்துக் கொண்டிருக்கின்றான். தற்போது பௌர்ணமி பூஜையை ஒட்டி லந்தங்காட்டிற்கு வருகை புரிந்திருக்கிறான்.  


    மோகனா ரஞ்சனியின் உடலில் இருந்து கொண்டு, காலகோடனின் சிலைக்கு முன்பு அமர்ந்து பௌர்ணமி பூஜையை செய்து கொண்டிருந்தால்.


  அவளோடு வந்த வீரர்களை மயக்க நிலைக்கு ஆட்படுத்தி, லந்தங்காட்டுக்கு வெளியே விட்டு வந்திருந்தாள்.


குகைக்கு பூஜைக்காக வந்திருந்த ரங்கராஜ பூபதி, வந்த வேலையை மட்டும் பார்த்து கொண்டு சென்றிருக்கலாம். அதை விட்டுவிட்டு தனது ராஜ்ஜியத்தை கைப்பற்றி தன்னை இப்படி ஒளிந்து கொள்ள வைத்த மகிழபுரியின் பரம்பரையையே கருவருப்பேன், அந்நாட்டின் இளவரசனை காலகோடருக்கு முதல் பலியாக கொடுப்பேன் என்று முழங்க, மோகனா பார்த்த கோப பார்வையில் தூக்கி வீசப்பட்டார்.


    ரகுநந்தன் சிறிது சிறிதாக தன் கண்களை திறந்து பார்த்தபோது உடம்பு முழுவதும் ரத்தத்தை பூசிக்கொண்டு தலைவிரிக் கோலமாக காலக்கோடனின் சிலையின் முன்பு அமர்ந்திருந்த, ரஞ்சனியின் உருவத்தை கண்டான்.


    பூந்தளிர் மேனியவளின் அங்கம் எங்கும் ரத்தம் சொட்ட, ராட்சச தோற்றத்தோடு காட்சி அளிக்கும் அவளை காண்கையில் மனம் நொந்து போனான். 


  தன்னவளை இனி எங்கு எப்படி காண்பேனோ என்று எண்ணுகையில் மனம் வலித்தது. தனக்கு அருகில் ஏதோ சத்தம் கேட்க அப்போதுதான் தலையை திருப்பி அங்கு இருப்பவர்களை பார்க்க தொடங்கினான். ராஜகுருவும் விஜயேந்திர பூபதியும், ரங்கராஜ பூபதியிடம் அமைதியாக வாதிட்டு  கொண்டிருந்தார்.


"என்ன ரங்கா இது? நான் தான் பொறுமையாக இரு என்று கூறினேனே எதற்காக மோகனாவிடம் வார்த்தையை விட்டாய்? அதற்கான விளைவைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்..."


  "என்ன ராஜகுரு நீங்களும் புரியாமல் பேசுகின்றீர்கள்? நான் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது? நமக்கு உரிமையான ரத்தினபுரி தேசம், தற்போது மகிழபுரி அரசுக்கு உட்பட்ட அடிமை நாடாகி விட்டது. இதற்கு முக்கிய காரணமான அந்த மித்ரனை கொல்ல  எண்ணினேன். அது தவறா?"


    "ரங்கா மோகனா தான் தெளிவாக கூறி விட்டாலே, அமாவாசை முடியும் வரை பொறுத்திருக்க சொல்லி? நீயும் எதற்காக இப்படி அவசரப்பட்டு கொண்டிருக்கின்றாய்?"


  கேட்டுக் கொண்டிருந்த ரகுநந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது இன்னும் என்னென்ன சதி வேலையில் இவர்கள் ஈடுபட போகின்றார்களோ? இதனால் ஏற்படகூடிய விளைவுகளை எப்படி சமாளிப்பது? முதலில் இங்கிருந்து எப்படியாவது தப்பித்து சென்று, இவர்களின் சூழ்ச்சியை அம்பலப்படுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

No comments:

Post a Comment