அத்தியாயம் 69
ரத்தினபுரிக்கு அருகில் உள்ள லந்தங்காட்டில் உள்ள ஒரு குகையில், காலக்கோடரின் ராட்சச சிலைக்கு முன்பிருந்த மண்டை ஓடுகள் வெடித்துச் சிதறியது. இதை கண்டு அங்கு பூஜிக்கும் குருமார்கள் அதிர்ந்துபோய் ராஜகுருவிடம் சென்ற விஷயத்தை கூற, பதறி வருகிறார் குகையினை நோக்கி.
மண்டை ஓடுகள் சிதறி கிடந்ததை கண்டு ஏதோ நடக்கக்கூடாத ஒரு விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தவர், தனது ஞான திருஷ்டியால் என்ன நடந்தது என்று பார்க்க தொடங்கினார்.
தன் மன கண்களால் அங்கு நடந்தவற்றை அறிந்து கொண்டவர், அதிர்ந்து போய் அப்படியே தரையில் அமர்ந்து விட்டார்.
விஷயம் அறிந்து வந்த ரத்னபுரியின் அரசர் சிதறி கிடந்த மண்டையோடுகளை கண்டு கொண்டே, அதிர்ந்து போய் அமர்ந்திருக்கும் தமது ராஜகுருவை நோக்கி சென்றார்.
தரையில் அமர்ந்திருந்த ராஜகுருவிடம் என்ன நடந்தது என்று அரசர் விசாரிக்க, அவர் கூறிய செய்தியை கேட்டு திகைத்து நின்றார்.
ராஜகுரு கூறியவற்றை கேட்டுக்கொண்டே குகையினுள் நுழைந்த விஜயந்திர பூபதி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார்.
"ஐயோ! மகளே, மோகனா...என்னை விட்டு பிரிந்து விட்டாயா? மகாராணியாக உன்னை காண விரும்பினேனே? இப்படி உன்னை பிணக்கோலத்தில் காணவா நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்?"
ஆம் மோகனா இறந்து விட்டாள். செம்பா அவளை தூக்கி வீசியபோது அந்த ஆயுதத்தோடு தரையில் உருண்டவளின் உடலில், அந்த ஆயுதம் ஏறியது. அதனோடு சேர்ந்தே உருண்டவள் ரஞ்சனிக்கு சற்று தொலைவில் தான் போய் விழுந்தாள். தனது முடிவு நெருங்கி விட்டது என்பதனை உணர்ந்தவள், ஒரு முடிவோடு மந்திரங்களை ரஞ்சனியின் கண்களை பார்த்தபடியே முணுமுணுக்க ஆரம்பித்தால்.
அடுத்த நிமிடமே கண்களை திறந்தபடியே ரஞ்சனி தரையினில் விழுந்தால். மோகனாவின் உடலில் இருந்து வழியும் ரத்தம் ரஞ்சனியை நோக்கி பாய்ந்தது. தனது உடலில் சொருகி இருந்த ஆயுதத்தை இன்னும் பலமாக உள்ளே தள்ளினால் மோகனா, ரஞ்சனியின் கண்களை கண்டபடியே மந்திரங்களை கூறிக் கொண்டிருந்தாள்.
மோகனாவின் ரத்தமானது ரஞ்சனியை முழுவதுமாக நனைத்திருந்தது. கை கெட்டும் தூரத்தில் இருந்த ரஞ்சனியை எட்டிப் பிடிக்க நினைத்த மோகனா கையை நீட்டிட, அந்நேரமே ரஞ்சனியை கண்களில் நிறைத்தபடியே அவளின் உயிர் பிரிந்து விட்டது.
மதுராவை தேடி வந்த மித்ரன், இவர்கள் தரையில் கிடக்கும் நிலையினை கண்டு அதிர்ந்து நின்றான். இருவருக்கும் ஏதோ ஆபத்து என்று எண்ணி அவர்களை நெருங்க முனைந்த போது, மோகனாவின் உடலில் இருந்து வெளியேறிய கரும்புகை சூழ்ந்த ஒளிவட்டமானது, ரஞ்சனியை நோக்கி வந்தது.
அதை கண்டு திகைத்தவன் பின்னோக்கி அடிகளை எடுத்து வைக்க, அந்த ஒளிவட்டம் ரஞ்சனியை நெருங்கும் முன்பே, ருத்ராட்ச மாலை பறந்து வந்து அந்த புகையின் மீது விழுந்தது.
சாந்த குரு அடிகளார்தான் அந்த கரும்புகையின் மீது ருத்ராட்ச மாலையை வீசி இருந்தார். ருத்ராட்சம் அந்த கரும்புகையின் மீது விழுந்த அடுத்த நொடி, மோகனாவின் அலறல் சத்தம் அந்த காட்டையே அதிரசெய்தது.
அந்தக் கரும்புகையானது சட்டென்று உயிரே எழும்பி மேலே சென்று, காட்டை விட்டு பறந்து செல்ல, ருத்ராட்சம் தரையினில் விழுந்தது.
அப்போதுதான் மித்ரன் கொற்றவை தேவி கோயிலின் மண்டபத்தில் செம்பாவையும் மதுராவையும் கண்டான். உடனே அவர்களை நோக்கி ஓடினான்.
தம்மை நோக்கி யாரோ வருவதை உணர்ந்து கோபத்துடன் திரும்பிய செம்பா, மித்ரனை கண்டு அடங்கி நின்றது. செம்பாவை தாண்டி கொண்டு மதுரவே நோக்கி சென்றவன், படுத்திருந்த அவள் தலையினை தனது மடியினில் வைத்து அவளை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தான்.
ஏந்தழை அம்மையார் மயங்கி இருந்தோரில் ஒவ்வொருவராக அப்போதுதான் தெளிய வைத்து கொண்டிருந்தார். திடீரென்று இந்த அலறல் ஒலி கேட்க ரகுநந்தனும் பிரதீபனும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினர். மயக்கம் தெளிந்தவர்களும் அவசரமாக அவர்களை பின்தொடர்ந்தனர்.
அங்கு பெண்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடப்பதை கண்டு நண்பர்கள் இருவரும் அதிர்ந்து நின்றனர். இவர்கள் அவர்களை நோக்கி செல்ல அடி எடுத்து வைக்க, சாந்தகுரு அடிகளார் அவர்களை தடுத்து நிறுத்தினார்.
"பிரதீபா நீ அவர்களை நெருங்காதே,ரகுநந்தா ரஞ்சனியை உடனே அந்த ரத்தத்தில் இருந்தும் மோகனாவின் பார்வையில் இருந்தும் சற்று தள்ளி படுக்க வை."
ரகுநந்தன் அவர் கூறியவாறே ரஞ்சனியை மோகனாவின் பார்வையில் இருந்தும் அவள் ரத்தம் தோய்ந்த இடத்தில் இருந்தும் சற்று தள்ளி படுக்க வைத்தான்.
இவர்களைத் தொடர்ந்து வந்த மற்றவர்கள் மோகனாவின் நிலையை கண்டு திகைத்தனர். மேனகா தேவி இதை கண்ட உடனே மயங்கி விழுந்து விட்டார்.
பிரதீபனும் மகாராணி தாரகை தேவியும் தான் மேனகா தேவியை இருபுறமும் தாங்கி பிடித்துக் கொண்டனர்.
சிவனடியாரை கண்ட மன்னர் பார்த்திபேந்திரன் அவர் முன்பு தலைவணங்கி நின்றார்.
"பார்த்திபேந்திரா, உடனே உன் படை வீரர்களை அனுப்பி கொற்றவை தேவியின், தீர்த்த குளத்தில் இருந்து, இரண்டு குடம் தண்ணீரைக் கொண்டு வரச் சொல்."
மன்னரும் சிவனடியாரின் சொல்படியே வீரர்களை அனுப்பி,தீர்த்த குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தார்.
இப்போது அங்கு வந்த ஏந்திழை அம்மையாரை நோக்கி சிவன் அடிகளார்,
"தேவி இந்த பெண்ணை எந்த கெட்ட துர்சக்தியும் நெருங்க கூடாது, என்று மனதில் அந்த அன்னையை வேண்டி, இந்த தீர்த்த நீரை அவள் மீது ஊற்றி, இந்த தாயத்தை அவள் கைகளில் கட்டுங்கள்."
ஏந்திழை அம்மையாரும் சிவனடியாரை வணங்கி, அவர் சொன்னது போலவே செய்தார்.
"அரசே எக்காரணம் கொண்டும் இந்த தாயத்தானது இந்த பெண்ணின் கைகளை விட்டு நீங்க கூடாது. அப்படி ஏதேனும் நடந்துவிட்டால் வரப்போகும் பேராபத்திலிருந்து மகிழபுரியை யாராலும் காப்பாற்ற முடியாது, உலகை ஆளும் எம் ஈசனாலும் முடியாது."
பிரதீபனின் நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. தனது உயிருக்கும் மேலான தங்கை இறந்ததை எண்ணி வருந்தவதா? அல்லது என் தங்கையை பற்றி முழுவதுமாக உண்மை தெரிந்தால் அன்னையின் நிலை என்னவாகுமோ என்று அதனை எண்ணி வருந்துவதா? என்று மனதினுள் போராடிக் கொண்டு இருந்தான்.
சிவனடியார் மோகனாவின் உடலை நெருங்க கூடாது என்று கூறியதால், தூரத்தில் இருந்தே தன் தங்கையின் நிலையைப் பார்த்து, கண்ணீர் மழை பொழிந்து கொண்டிருந்தான்.
No comments:
Post a Comment