அத்தியாயம் 70
பறந்து சென்ற அந்தக் கருப்பு புகை லந்தக்காட்டில் உள்ள காலகோடரின் குகையை நோக்கித்தான் சென்றது, ஆக்ரோஷத்தோடு அங்கிருந்த பொருட்களை விலாசியபடியே காலக்கோடரின் சிலையின் முன்பு கோபமாக நின்றது.
விஜயேந்திர பூபதி தனது மகளின் இந்த நிலையை கண்டு, தலையில் அடித்துக் கொண்டு கத்தி அழத் தொடங்கிவிட்டார்.
தனது தந்தையின் கவலை தோய்ந்த முகத்தைக் கண்டு தான், மோகனாவின் ஆன்மா சற்று நிதானத்திற்கு வந்தது.
"தந்தையே எனது உடல் தான் அழிந்து விட்டது எனது ஆன்மா அதே திடத்தோடு தான் உள்ளது, நான் மீண்டும் எழுந்து வருவேன். அதற்கான வேலையை நான் ஏற்கனவே தொடங்கி விட்டேன். தயவு கூர்ந்து தங்கள் கவலை கொள்ள வேண்டாம், தங்களை இவ்வாறு காண என்னால் முடியவில்லை."
"மோகனா என்ன கூறுகிறாய்? உனது உயிர் உன் உடலை விட்டு பிரிந்து விட்டதே, இதற்குப் பிறகு வேறு என்ன செய்ய முடியும்"
"முடியாத காரியத்தை கூட, இந்த மோகனா நினைத்தால் முடித்து வைப்பாள் ராஜகுரு. என் உயிர் பிரிவதற்கு முன்பே கூடுவிட்டு கூடு பாயும் மந்திரத்தை ரஞ்சனியின் கண்களை பார்த்து கூறி முடித்து விட்டேன்."
"எனது ரத்தமும் அவள் உடலின் மீது முழுவதுமாக படும்படி செய்து விட்டேன், கடைசியாக எனது ஆன்மா அவளின் உடலின் உள்ளே செல்வதற்கு முன்பு, அந்த முட்டாள் சிவனடியார் வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டான்.
நாளைய விடியலுக்கு முன்பு நான் அவளது உடலில் சென்று சேர வேண்டும். இல்லை என்றால் எல்லாமே கெட்டுவிடும். எப்படியும் கொற்றவையின் சக்தி அந்த காட்டை விட்டு வெளியே வர முடியாது ஆகையால் ரஞ்சனியின் உடலை மகிழபுரியில் வைத்துத்தான் எனது வசமாக்க வேண்டும்."
"நீ ரஞ்சனியின் உடலை கைப்பற்ற முயற்சி செய்வாய் என்று அந்த சிவனடியாருக்கு தெரிந்திருக்கும், அதை தடுப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை ஏற்கனவே அவன் செய்ய தொடங்கி இருப்பான். பிறகு எவ்வாறு நாம் ரஞ்சனியின் உடலை கைப்பற்றுவது."
"எனக்கும் தெரியும் ராஜகுரு, நான் கூறும் திட்டத்தை அப்படியே செயல்முறை படுத்துங்கள், பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்."
பிரதீபனின் நிலையை கண்டு வருந்திய அரசர் பார்த்திபேந்திரர், அவனை தேற்ற முயன்றார்
"பிரதீபா நீயே இப்படி உடைந்து போனால் எப்படி? பிறகு எவ்வாறு உன் அன்னையை தேற்றுவாய்?"
"முடியவில்லை மாமா என் தங்கையின் இறப்பை நினைத்து வருந்துவதா? இல்லை என் அன்னையின் உடல்நிலையை எண்ணி வருந்துவதா? ஒரு குழந்தையைப் போல் தானே அவளை நாங்கள் பார்த்துக் கொண்டோம். என் தாய் வாழ்வதே எங்களுக்காக தானே, இவளுக்கு ஏன் இப்படி புத்தி வழி தவறிப் போனாது, இவளைப் பற்றிய உண்மை என் அன்னைக்கு தெரிந்து விட்டால், ஐயோ! அதற்குப் பிறகு அவர் உயிரோடு இருக்கவே மாட்டாரே."
தன்னிலை மறந்து உடைந்து போய் அழ தொடங்கிய அவனை, தாய்மாமாவான அவர் தாயாக மாறி அரவணைத்துக் கொண்டார்.
பிரதீபனின் கலக்கத்தை கண்ட சாந்தகுரு அடிகளார், அவனை தேற்ற முயன்றார்.
"பிரதீபா, விதியின் செயலை யாரால் மாற்ற முடியும். மோகனா இப்படி ஆனதற்கு நீயோ உன் தாயோ பொறுப்பாக முடியாது. இதற்கு முழுக்க முழுக்க உங்கள் தந்தைதான் காரணகர்த்தா ஆவார்."
பிரதீபன் அதிர்ந்து நின்றான்,
"என்ன? என் தங்கை இப்படி ஆனதற்கு காரணம் என் தந்தையா?"
"ஆம் பிரதீபா, சிவனடியார் கூறுவது உண்மைதான். அதற்கு சாட்சியம் உண்டு, இவ்வளவு நாள் அரண்மனைக்கு கீழே சுரங்க பாதையை உருவாக்கி உன் தந்தை அடிக்கடி உன் தங்கையை சந்தித்து வந்துள்ளார் அவள் மாந்திரீகத்தில் ஈடுபட்டதற்கும் அவர்தான் காரணம்.
இன்று காலையில் தான் உன் தங்கையின் ரகசியங்களை அறிந்த அவளது அந்தரங்க வேலையாளான யோகினியை பிடித்தேன். அவள் ரத்னபுரியை சேர்ந்தவள், உன் தந்தையால் உன் தங்கைக்கு காவலாக அனுப்பி வைக்கப்பட்டவள்,அவள் மூலமாகத்தான், இங்கு இப்படி ஒரு போர் நடக்க இருப்பதை தெரிந்து கொண்டு தான், சிறு படையுடன் காட்டினுள் நுழைந்தேன்."
ஆம் யோகினி நேற்று மாட்டிக்கொண்டது அரசரிடம் தான். அரசாங்க பொறுப்புக்களை இளவரசனிடம் அரசர் ஒப்படைத்து விட்டாலும், அங்கங்கு சில ரகசிய ஒற்றர்களை வைத்து, அவர்களின் மூலம் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்துக் கொண்டிருந்தார், அப்படித்தான் யோகினியும் சிக்கினாள்.
அரசருக்கு ரத்தினபுரியைச் சேர்ந்த ஒற்றர்கள் மகிழபுரியில் பணிபுரிந்து கொண்டே, ஒற்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களை அவர்களுக்கே தெரியாமல், வேறு உபயோகம் இல்லாத வேலைக்கு இளவரசரின் மூலம் பணிக்கு மாற்றப்படுவதும் தெரியும். ஆனால் அந்த ஒற்றர் குழுவுக்கு தலைவியாக இருந்து கொண்டு, மோகனா தான் இந்த கூட்டத்தையே வழி நடத்தி வருகிறாள் என்று, அவர் நினைத்து கூட பார்க்கவில்லை.
ஒருவேளை, நாளை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு செல்வதாக இருந்த முடிவை மாற்றினால், இவர்கள் வேறு ஏதாவது திட்டம் தீட்ட கூடும் என்று கோயிலுக்கு செல்லும் திட்டத்தில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தி, குருதங்காட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதி படி அவர்களைக் காக்க ஒரு சிறு படையுடன் எதிரிகளை எதிர்க்க தயாரானார்.
அவர் அறியாத ஒன்று என்றால் அது மித்ரன் மற்றும் மதுராவுக்கு இடையில் இருந்த உறவை பற்றிதான். அரசருக்கு இளவரசர் அடிக்கடி ஏரி பக்கம் செல்வதும் பிறகு தண்ணீரில் குதித்து காணாமல் போவதாக ஏற்கனவே ஒற்றர்கள் அவரிடம் கூறியிருந்தனர். இளவரசன் ஏதோ மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வதாகத்தான் அரசர் இதுவரை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் மித்ரன் தனது உயிர் மூச்சானவளை காணத்தான் அந்த ஏரிக்கு சென்று வருகிறான் என்று அவருக்கு எப்படி தெரியும் பாவம்!
"பிரதீபா இனி இது பற்றி பேச ஒன்றுமில்லை, முதலில் ஒரு நல்ல தமையனாக உன் தங்கைக்கு செய்ய வேண்டிய ஈமக்காரியங்களை முதலில் செய்து முடி."
"சுவாமி தாங்கள்தான் அவளை நெருங்கவே கூடாது என்று கூறி விட்டீர்களே, பிறகு எப்படி இவளை இங்கிருந்து எடுத்துச் செல்வது?"
"இல்லை பிரதீபா மோகனவை இங்கே தான் தகனம் செய்ய வேண்டும்."
அதைக் கேட்டு ஏந்திழை அம்மையார் தான் அதிர்ச்சியுடன் சிவனடியாரை பார்த்து பேச தொடங்கினார்.
"சுவாமி கோயிலுக்கு அருகில் எவ்வாறு இந்த உடலை தகனம் செய்வது? அப்படி செய்தால் தீட்டாகி விடுமே? பிறகு கொற்றவை தேவிக்கு மந்திர கட்டு இட்டது போல் ஆகிவிடுமே?"
"தேவி இப்போது இங்கு நடந்த கன்னி பலியே கொற்றவை தேவிக்கு மந்திர கட்டு இட்டது போலத்தான். அந்த அன்னையால் இனி இந்த காட்டை விட்டு வெளியே வர முடியாத படி, மந்திர கட்டால் அவளை கட்டுப்படுத்தியது போலத்தான்."
"சுவாமி என்ன சொல்கிறீர்கள்? அப்படி என்றால் கெட்ட சக்திகள் இனி சுதந்திரமாக நடமாடுமே? இப்படி ஒரு கெட்ட சம்பவம் ஏன் தான் நடந்தது?"
"இந்த கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கின்றது தேவி, நல்ல வேலையாக இந்த பலி கோவிலினுள் நடக்கவில்லை, மோகனாவின் இந்த இறப்பானது கோவிலினுள் நடந்திருந்தால், அந்த அன்னை கர்ப்ப கிரகத்தை விட்டே வெளியே வர முடியாத படி மந்திர கட்டால் பிணைக்கப்பட்டு இருப்பாள்."
"சுவாமி எப்படி அன்னையை மந்திர கட்டில் இருந்து விடுவிப்பது? அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? தயை கூர்ந்து அதற்கான வழிமுறையை கூறுங்கள்? அன்னை மந்திர கட்டில் இருப்பது பெரும் அபத்தங்களை ஏற்படுத்தும்."
"48 நாட்கள் விரதம் இருந்து அன்னைக்கு சுமங்கலி பூஜை செய்து, ஈரேழு தேசங்களில் இருந்து கொண்டு வரப்படும் தீர்த்த நீரினால், அபிஷேகம் செய்ய வேண்டும். நாள் தவறாமல் பூஜை புனஸ்காரங்களால் மூலவர் சன்னதியில் குங்கும பூஜை நடந்து கொண்டே இருக்க வேண்டும்."
"சுமங்கலி பூஜையா? அதை திருமணம் ஆனவர்களால் தானே செய்ய முடியும். மூலவர் சன்னதிக்கு நானும் என் மகளும் மட்டுமே செல்ல முடியும், பிறகு எவ்வாறு இந்த பூஜைகளை செய்வது?"
"உன்னால் செய்ய முடியாது ஆனால் உன் மகளால் இந்த பூஜையை செய்ய முடியும் அல்லவா?"
"வாணிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று கூற வருகிறீர்களா? அன்னை இப்படி மந்திர கட்டில் இருக்கும் வேளையில் எவ்வாறு நல்ல காரியம் செய்வது? அப்படியே செய்வதாயினும் திடீரென்று மணமகனுக்கு எங்கு செல்வது?"
"உனது மகள் உனக்கு அந்த வேலையையே வைக்காமல், ஏற்கனவே தனது மணமகனை தேர்ந்தெடுத்து, பத்து வருடங்களுக்கு முன்பே மாலையும் சூட்டிவிட்டால்."
"என்ன கூறுகிறீர்கள் சுவாமி என் வாணிக்கு திருமணம் முடிந்து விட்டதா?"
No comments:
Post a Comment