Search This Blog

Followers

Powered By Blogger

Wednesday, July 23, 2025

மன்னவரே 68


 

             அத்தியாயம் 68


     ஏந்திழை அம்மையார் தங்களது குடில்களைச் சுற்றி காட்டுத்தீ பற்றி எரிவதோடு புகை மூட்டத்தால் சூழப்பட்டிருப்பதை கண்டார், அதில் மயக்க மூலிகை கலந்திருப்பது போன்று நெடி வர முந்தானையால் தன் மூக்கை சுற்றி மறைந்து கொண்டு, தீயை அணைக்க தொடங்கினார். 


  அவர் குடிலின் அருகில் வந்து இறங்கிய மறு நொடியே, செம்பா மதுரா இருக்கும் இடத்தை உணர்ந்து, அவளை நோக்கிச் சென்றது.


  ஏந்திழை அம்மையார், ஓரளவுக்கு தீயை கட்டுப்படுத்தி விட்டு, சில மூலிகைகளை பறித்து வந்து, மயங்கி இருந்தவர்களை தெளிய வைக்க தொடங்கினார்.


  சற்று தொலைவில் மேக காடு வாழும் மனிதர்களும் மகிழபுரியை சேர்ந்த படைவீரர்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருப்பதை கண்டு, இங்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஒருவாறு உணர்ந்து கொண்டார்.


  தனது மகளுக்கு ஏதோ ஆபத்து என்று தாய் மனது உணர்த்திய போதிலும், கண் முன்னே இருக்கும் உயிர்களை காப்பாற்றுவதே தனது முதல் கடமை என்று, அவர்களை தெளிய வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் தனது மனதில் அந்த கொற்றவை தாயிடம், தமது மகளை காத்தருளுமாறு உளமார வேண்டினார்.


  தன்னிடம் இருந்த மூலிகைகளை கைகளால் நசுக்கி, மயங்கி இருப்பவர்கள் மூக்கிற்கு அருகே வைத்து அவர்களை வாசம் பிடிக்க வைத்தார். 


மலையடிவாரத்தில் எதிரிகளுடன் போராடியதால் ஏற்பட்ட சோர்வினையும் புறந்தள்ளிவிட்டு, இங்கு இருக்கும் உயிர்களை காப்பாற்ற, தன்னால் முடிந்த அளவு வேகமாக மூலிகைகளை பறித்து, மயங்கி விழுந்தவர்களின் மூக்கிற்கு அருகில் வைத்தார்.


  பிரதீபனால் நம்பவே முடியவில்லை, தனது தங்கையின் இந்த மாற்றத்தை, அவனும் பார்த்துக் கொண்டுதானே இருந்தான்.


    மந்திரம் போட்டு தங்களை சுற்றியுள்ள மரங்களை, எரிய வைத்ததோடு அல்லாமல், அவளின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு அந்த ராட்சச உருவம் அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு அவள் பின்னால், கொற்றவை தேவி கோயிலை நோக்கி நடந்து சென்றதை பார்த்து அதிர்ந்து போனான். 


      தன் நண்பர்கள் கூறியபோது அவர்களை நம்பாமல், கோபித்துக் கொண்டு வந்த தனது மடமையை எண்ணி வருந்தினான். 


      தந்தை இல்லாத குறை தெரிந்து விடக்கூடாது என்று, ஒரு குழந்தையைப் போல தானே அவளை வளர்த்து வந்தேன், ஏன் அவளது சிந்தனை இப்படி துர்த்திசையில் சென்றது? ஆண்டவா இது என்ன சோதனை? இவளின் சுயரூபம் அன்னைக்கு தெரிந்தால், அவர் தன் உயிரை அக்கணமே மாய்த்து கொள்வாரே? என்று உள்ளம் நொந்தான்.


    அவன் கீழே விழுந்து கிடந்ததை கண்டு ரகுநந்தன் அவசரமாக அவன் அருகினில் வந்து, அவனை எழுப்பி நிறுத்தினான்.


  அந்தப் புகையானது கண் எரிச்சலை ஏற்படுத்த ஒரு சில வினாடிகள் கண்களை இறுக மூடி திறந்த மித்ரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மதுராவை சுற்றி முற்றி தேடியன் அவளை காணாது கலங்கி நின்றான். தன்னால் முடிந்த மட்டும் அவளது பெயரை கூறி காடே அதிரும்படி கத்தினான்.


  "மதுரா..."


  அந்த சத்தத்தில் தன்னிலைக்கு திரும்பிய பிரதீபன், அவன் கைகளை மோகனா சென்ற திசையை நோக்கி நீட்டி,


  "மித்ரா...கொற்றவை தேவி கோவில்."


    அவனது குறிப்பை உணர்ந்து கொண்ட மித்ரன், வேகமாக கொற்றவை தேவி கோயிலை நோக்கி ஓடினான்.


  ஜோதிடரின் குருதேவரான சாந்தகுரு அடிகளார் சாரியாக அந்த நேரத்தில் தான் அங்கு வந்து சேர்ந்தார். அங்குள்ள நிலைமையை கண்டு அதிர்ந்தவர், விதியின் ஆட்டம் தொடங்கிவிட்டதை உணர்ந்து, இறைவனை வேண்டிகொண்டு கொற்றவை தேவி கோயிலை நோக்கி வேகமாக சென்றார்.


  அவர் அந்த இடத்தை அடைந்த போது ஒரு கன்னி பெண்ணின் உயிர் பிரிந்து, கன்னி பலி  நடந்து முடிந்திருந்தது.


    மதுராவை தூக்கிச் சென்ற அந்த ராட்சச உருவம், கொற்றவை தேவி கோயிலை நெருங்காமல், சற்று தூரத்திற்கு முன்பே நின்று விட்டது.


  "தேவி இதற்கு மேல் என்னால் அந்த கோயிலை நெருங்க முடியாது. இந்த பெண்ணுக்கும் நாம் கொடுத்த மந்திர மருந்து வேலை செய்வதை நிறுத்திவிடும். அவள் எழுந்து விட்டாள், நாம் நினைத்த காரியம் எளிதாக நிறைவேறாது. இங்கேயே அவளை பலியிட்டு விட்டு சடலத்தை கோயிலின் உள்ளே சென்று போட்டு விடுவோம்"


  "ம்ம்ம் அவளை இங்கே படுக்க வை, நமது மாந்திரீக மையை அவளை வெட்டப் போகும் ஆயுதத்தில் பூசு."


  அவள் கூறியதை கேட்டு திடுக்கிட்டு போனவன்,


  "தேவி என்ன கூறுகிறீர்கள்? அப்படி செய்தால் இவளின் ஆன்மா..."


  "ஏவலுக்கு வேலை செய்யும் துர்சக்தியாக மாறிவிடும். அது தெரிந்து தான், மையை அந்த ஆயுதத்தில் பூசச் சொல்கிறேன். எவ்வளவு தைரியம் இருந்தால் என் அத்தானை நெருங்குவாள், இனி இவள் என்றும், என் ஏவலுக்கு வேலை செய்யும் ஒரு அடிமை."


  மோகனாவிற்கு பின்னே அவளை தொடர்ந்து வந்த ரஞ்சனி, இவர்கள் பேசுவதை கேட்டு அதிர்ந்து, அப்படியே கால்களை மடக்கி கீழே அமர்ந்து விட்டாள்.


  அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்த மோகனாவிற்கு, அப்போது தான் ரஞ்சனி தங்களுடன் வந்தது தெரிந்தது.


  தன்னை யாராவது பின் தொடர்கிறார்களா என்று கவனிக்காமல் விட்ட, தனது கவனக்குறைவை எண்ணி, தன்னையே திட்டிக் கொண்டால்.


  இவளிடம் விவரித்துக் கொண்டிருக்க இது நேரம் இல்லை என்பதை உணர்ந்தவள், தன் மடியில் இருந்து ஒரு பொடியை எடுத்து, ஒரு மந்திரத்தை முணுமுணுத்து ரஞ்சனியின் மீது வீசினால்.


    ரஞ்சனி அப்படியே அமர்ந்தவாக்கிலேயே, அந்த இடத்தினில் சிலையாகிப் போனாள்.


"என்னை மன்னித்துவிடு தோழி, சிறிது நேரத்திற்கு நீ இவ்வாறு இருப்பது தான் நல்லது. ம்ம்ம் ஆயுதம்?"


    அவள் கட்டளை போல் கேட்டதுமே, அந்த ராட்சச உருவம் மதுராவை தரையில் படுக்க வைத்து விட்டு, ஆயுதத்தில் மாந்திரீக மையை தடவி, மோகனாவின் கைகளில் கொடுத்தது.


      மோகனா காலகோடரை மனதில் நினைத்து வேண்டிக் கொண்டு, மதுராவை வெட்ட ஆயுதத்தை ஓங்கிய அடுத்த நொடி, அந்த ஆயுதத்தோடு சேர்த்து, ரஞ்சனி இருந்த இடத்தை நோக்கி தூக்கி வீசப்பட்டால்.


    செம்பா தான் மோகனாவை தூக்கி வீசி இருந்தது, தனது மதுராவை கொல்ல துணியும் அயோக்கியர்களை கண்டு, மூர்க்கமாக அவர்களை தாக்கியது. அங்கு நின்றிருந்த ராட்சச உருவத்தை தமது தும்பிக்கையால் தூக்கி வீசி, கால்களால் அவனை மிதித்து கொன்றது.


  கீழே தரையில் படுத்திருந்த மதுராவை மெதுவாக தனது தும்பிக்கையினால் ஏந்தி கொண்ட செம்பா, கொற்றவை தேவி கோயில் மண்டபத்திற்க்கு சென்று, அங்கு அவளை படுக்க வைத்தது.

No comments:

Post a Comment