Search This Blog

Followers

Powered By Blogger

Monday, July 21, 2025

மன்னவரே 67


 

             அத்தியாயம் 67


    மலையடிவாரத்தில் ஒரு பகுதியினர் ஏந்திழை அம்மையாரையும் பாதுகாப்பு வீரர்களையும் தாக்கிக் கொண்டிருக்க, காட்டுக்கு வெளியிலிருந்து இன்னொரு குழு காட்டினை நோக்கி ஆயுதங்களோடு, குருந்தங்காட்டினுள் அடி எடுத்து வைத்தது.


  அவர்கள் குருந்தங்காடு மக்கள் வாழும் குடில்களை நெருங்கும்போது, அவர்களைச் சுற்றி மரங்களின் இடையே பதுங்கி இருந்த  படைவீரர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு தாக்க ஆரம்பித்தனர்.


  படைவீரர்களை தாண்டிக் கொண்டு ஒரு சிலர் குடில்களை நோக்கி முன்னேற, அவர்களை தடுத்து நிறுத்தியபடி வந்து நின்றான் மித்ரன்.


      மேகக் காட்டை சேர்ந்த மனிதர்கள், ஆயுதங்களோடு காட்டிற்கு வெளியே பதுங்கி இருப்பதை அறிந்ததுமே, மித்ரன் தமது நம்பிக்கைகுரிய படைவீரர்களை கொண்டு, சிறு குழுவை உருவாக்கி, அவர்களோடு நேற்று இரவே மரங்களின் இடையே வந்து மறைந்து கொண்டான்.


  சத்தம் கேட்டு வெளியே வந்த மதுராவை பார்த்து உரக்க கத்தினான் மித்ரன்,


    "மதுரா இவர்கள் மேகக் காடு வாழும் மனிதர்கள், ஆயுதங்களோடு நம்மை தாக்க முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். விரைவாக  பெண்களையும் குழந்தைகளையும் இந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி  பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்."


    மதுரா விரைவாக அங்குள்ள முதியவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களையும் ஒரு குடிலின் உள்ளே அனுப்பி, வீரர்களை அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தினாள்.


    மலையடிவாரத்தில் எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்த ஏந்திழை அம்மையார், அவர்கள் நெருப்பு வளையத்தை வீசி யாருக்கோ ரகசிய தகவல் அனுப்ப, சுதாரித்துக் கொண்டார்.


      இதுவரை அவர்களை முன்னேற மட்டும் விடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர், முழுமூச்சாக அவர்களுடன் போராடத் தொடங்கினார்.


    ஒரு சில நிமிடங்களிலேயே அவர்களை வீழ்த்தியவர், செம்பாவிடம் விரைவாக குடிலை நோக்கி போகுமாறு கட்டளையிட்டார். செம்பாவும் அவரின் குரலிலேயே அவசரத்தை புரிந்து கொண்டு, விரைவாக குடிலை நோக்கி நகரத் தொடங்கியது. 


  மதுரா, மித்ரனை நோக்கி வரும்போது, மேகக் காட்டை சேர்ந்த மனிதர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டிருந்தது. தனது அம்புகளையும் வாளினையும் எடுத்துக் கொண்டு அவர்களோடு போராட தொடங்கினாள்.


    மித்ரன் எதிரியின் மீது ஒரு கண்ணும் தன் மணவாட்டியின் மீது மற்றொரு கண்ணுமாகவே எதிரிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். 


    ஏந்திழை அம்மையார் அவளுக்கு கொடுத்த போர் பயிற்சிகள்,தற்போது அவளுக்கு உதவிகரமாக இருந்தது. எளிதாக வாளினை சுழற்றியும், தூரத்தில் முன்னேறி வரும் எதிரிகளை அம்பெய்தும் வீழ்த்திக் கொண்டிருந்தவளை கண்டு, முகத்தில் புன்னகை தவழ, ரசித்து கொண்டே சண்டையிட்டுக் கொண்டிருந்தான் மித்ரன்.


    அந்த ராட்சச உருவங்கள் மதுராவை நெருங்கி சென்றாலும், அவளின் மீது தங்களின் ஆயுதம் படாதவாறே, அவளை சமாளிக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். 


    அதனை கண்ட மித்ரனுக்கு, நெற்றி சுருங்க அவனின் சிந்தனை ரேகைகள் விரிந்தது.


    அவர்கள் குடில்களை நோக்கி முன்னேறாமல் மதுராவை மட்டுமே தங்களது குறிக்கோளாக கொண்டு, அவளை சுற்றி வளைக்க முனைந்து கொண்டிருந்தனர். 


    அந்த கும்பல்களுக்கு இடையே புகுந்த மித்ரன், அவளுடன் சேர்ந்து நின்று, இருவருமாக அவர்களை எதிர்த்து போராட தொடங்கினர்.


          எதிர்த்து நின்ற மேகக்காடு மனிதர்களுடன் போராட, குருத்தங்காட்டு மக்களால் இயலவில்லை. அவர்களில் ரத்தினபுரியை சேர்ந்த போர் வீரர்களும் கலந்திருந்ததால், அவர்களின் போர் திறனை எதிர்த்து இவர்களால் போராட முடியவில்லை.


  ஒரு கட்டத்தில் தீரனும் மதுராவும் மட்டுமே தனித்து அவர்களுடன் போராடிக் கொண்டிருக்க, அப்போது சரியாக அரசருடன், சிறுபடையும் அங்கு வந்து சேர்ந்தது.


  தமது இளவரசருக்கு ஆபத்து என்று தெரிந்ததும், அப்படை வீரர்கள் அங்கிருந்த மேகக்காடு மனிதர்களை எதிர்த்து சண்டையிட்டனர்.


    அரசருக்கும், அவரோடு வந்த அனைவருக்கும், மித்ரனை அங்கு கண்டது ஆச்சரியமாக இருந்தது. அத்தோடு அவன் மதுராவோடு சேர்ந்து எதிரிகளை பந்தாடிக் கொண்டிருந்தது, அவர்களின் புருவத்தை உயரச் செய்தது. 


  இருவரும் ஒருவருக்கொருவர் உதவி கொண்டே சுற்றி இருந்தவர்களை, அடித்து வீழ்த்திக் கொண்டிருந்தனர். 


    மதுராவை பின்னால் இருந்து தாக்க வந்தவர்களிடமிருந்து அவளை பாதுகாக்க, அவளின் இடுப்பை வளைத்து தூக்கி, மறுபுறம் விட்டுவிட்டு, அவர்களுடன் எதிர்த்து போராடிக் கொண்டிருந்தான் மித்ரன். 


      அவர்களின் இந்த அன்னியோன்யத்திலேயே, இது அவர்களது முதல் சந்திப்பு அல்ல என்பது தெளிவாகப் புரிந்தது.


    பெண்களிடம் எப்போதும் எட்டி நின்று பேசும் தமது மகன், கன்னி பெண்ணான மதுரவாணியோடு சேர்ந்து, எதிரிகளை பந்தாடிக் கொண்டிருந்ததை பார்த்து தாரகை தேவிக்கு சட்டென்று மூளையில் மின்னல் வெட்டியது. 


      ஒருவேளை தான் நினைப்பது போல இருக்குமோ? என்று அவர் முகத்தில் புன்னகை அரும்பியது. சட்டென்று தன்னுடன் மோகனாவும் வந்திருப்பது நினைவு வந்தவராக , அவளை நோக்கி திரும்பினார்.


    பிரதீபனும் இந்த காட்சியை கண்டுவிட்டு, தனது ஆருயிர் நண்பனான மித்ரனின் மனது புரிந்துவிட, எவ்வாறு தன் தங்கை இதை தாங்கிக் கொள்ளப் போகிறாளோ என்று எண்ணியவாறு, மோகனாவைத் தான் திரும்பிப் பார்த்தான்.


    அவளின் அகம் படும் பாடு, அவள் முகம் செந்தனலாய் சிவந்திருந்ததிலேயே தெரிந்தது. எப்போதும் அலங்காரத்தோடு திகழும் அவளின் அழகு வதனமது, அதிக கோபத்தாலும் ஆத்திரத்தாலும் விகாரமாக காட்சியளித்தது.


  சிறு நொடி பிரதீபனது சிந்தனை சிதற, எதிரி வீரன் தாக்கியதால், சுருண்டு மோகனாவின் காலடியிலேயே விழுந்தான்.


  எதிரியால் தாக்கப்பட்டு கீழே விழுந்தது கூட தெரியாமல் மோகனாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்


அவள் கோப முகத்தோடு ஏதோ சில மந்திரங்களை உச்சரிப்பது, அவனுக்கு தெளிவாக கேட்டது.


    சட்டென்று அருகில் உள்ள மரங்கள் எல்லாம் தீப்பிடித்து எறிய, அவள் முகம் தற்போது ஒரு இகழ்ச்சி புன்னகையை சிந்தியது.

 

    தீ பற்றிக் கொண்டதும், அந்த ராட்சச உருவங்கள் தங்கள் அங்கிகளில் மறைத்து வைத்திருந்த இலைகளை, அந்த தீயினை நோக்கி வீசினர். சட்டென்று அந்த இடமே புகை மண்டலமாக மாற தொடங்கியது.


    புகை வர ஆரம்பித்ததுமே, அதில் மயக்கம் வருவதற்கான இலைகள் உள்ளதை உணர்ந்து கொண்ட நண்பர்கள் மூவரும், தமது மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டனர். ஆனால் மற்றவர்கள் இவற்றை அறியாததால் புகை பரவ பரவ ஒவ்வொருவராக மயங்கி சரிந்தனர்.


      இந்த திடீர் மாற்றத்திலிருந்து அவர்கள் சுதாரிக்கும் முன்பே, மதுராவிற்கு பின்னால் நின்றிருந்த ராட்சச உருவம் ஒன்று, தன் கைகளில் ஒரு திரவத்தை தடவி, மதுராவின் மூக்கில் வைத்து அழுத்த, அடுத்த நொடியே அவள் மயங்கி சரிந்தாள்.

   

    மயங்கி சரிந்த மதுராவை தன் தோள்களில் தூக்கி போட்டுக் கொண்ட அந்த ராட்சச உருவம், மோகனாவின் கண்ணசைவில் அவளின் பின்னால், கொற்றவை தேவி கோயிலை நோக்கிச் சென்றது.


    காட்டினில் நுழைந்ததுமே இந்த யுத்த காட்சியை கண்டு, பயந்து போன ரஞ்சனி, அங்கிருந்து சற்று தள்ளி வந்து விட்டாள். 


  அதனால் அங்கிருந்த அந்த புகை மூட்டமானது அவளை எட்டவில்லை. சிறிது நேரத்தில் ஒரு ராட்சச உருவம் யாரோ ஒரு பெண்ணை தனது தோளில் போட்டுக் கொண்டும், மோகனாவை அழைத்துக் கொண்டும் செல்வது போல் தோன்ற, மோகனாவிற்கு ஏதோ ஆபத்து என்று பயந்து போனவள், அவர்களை பின்தொடர தொடங்கினாள்.

No comments:

Post a Comment