அத்தியாயம் 66
தனது அறையில் சிந்தனையுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் மோகனா.
"தேவி தற்போது என்ன செய்வது? தாங்கள் வரவில்லை என்றால், எப்படி பலி பூஜை நடக்கும்? எப்போதும் போல ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிவிட்டு அங்கு செல்வதை தவிர்த்து விடுங்கள்."
"இல்லை யோகினி, நான் அவர்களுடன் செல்லவில்லை என்றால் என் மீது ஏற்பட்டுள்ள சந்தேகம் வழுப்படும். ஏற்கனவே அந்த ராணியாருக்கு என் மீது சந்தேகம் உருவாகியுள்ளது. தற்போது ஏந்திழைக்கும் அவளது மகளுக்கும் ஒரு பிரச்சனை என்றால், அவள் சந்தேக கண்ணை என் மீது தான் திருப்புவாள். நமது இடத்தில் அந்த ஏந்திழையின் மகளை பலி கொடுத்து அவளது பிரேதத்தை கொற்றவை கோயிலில் போடலாம் என்று இருந்தோம், இப்போது கொற்றவை கோவிலிலேயே வைத்து அவளை பலியிட்டு விடுவோம். யோகினி நமது திட்டத்தில் சிறு மாற்றம், இதைப் பற்றி அந்த மலைவாசிகளுக்கு தெரியப்படுத்தி விடு."
என்று கூறி சில பல திட்டங்களை மோகனா, யோகினியிடம் உரைத்தாள்.
"அரண்மனை முன் வாசல் வழியே செல்ல வேண்டாம். என் அண்ணன் கண்களிலோ அல்லது என் அத்தானின் கண்களிலோ விழுந்து விட்டால் தேவையில்லாத சந்தேகம் உண்டாக வாய்ப்புள்ளது. அதனால் நீ சுரங்கப்பாதை வழியே செல். முடிந்தால் திரும்பி வா, இல்லை என்றால் அவர்களுடனே இரு. நான் இங்கு அரண்மனையில் ஏதாவது கூறி சமாளித்துக் கொள்கிறேன்."
யோகினி மோகனாவின் அறைக்குள் இருக்கும் சுரங்கப்பாதை வழியே சென்றாள். அவள் மலைவாசிகளிடம் மோகனா சொன்ன திட்டங்களை கூறிவிட்டு, அரண்மனைக்கு திரும்பும் போது, எதிர்பாராத ஒருவரிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டாள்.
காட்டில் ஏந்திழை அம்மையாருக்கு ஏனோ மனது நெருடலாகவே இருந்தது. ஒருவித அவஸ்தையை உணர்ந்தவர், அந்த இரவு வேளையிலும் கொற்றவை தேவியின் கோயிலை நோக்கிச் சென்றார். அந்த தேவியின் முன்பு அவரை நோக்கியப்படியே அமர்ந்து விட்டார்.
தன் அன்னையை குடிலினுள் காணாமல் அவரை தேடி வந்த மதுரா, கொற்றவை தேவி கோயிலில் தனது அன்னையைக் கண்டு, வழக்கம் போல தனது தோழனான செம்பா அவளை பின்தொடர, அவரை நோக்கிச் சென்றாள்.
"தாயே என்னவானது? எதற்காக உறங்காமல் இந்த நேரத்தில், தேவியின் கோயிலில் வந்து அமர்ந்திருக்கிறீர்கள்?"
"வாணி ஏதோ மனதிற்கு தப்பாக படுகின்றது. எதுவோ நடக்க கூடாத ஒன்று நடக்கப் போவதாக, உள்ளம் எச்சரிக்கை செய்கின்றது. என் மனம் ஒரு நிலையிலேயே இல்லை, அதுதான் இந்த தேவியை தேடி வந்தேன். இம்மக்களுக்கு ஏதோ தீங்கு நடைபெற போவதாக உள்ளம் உரைக்கின்றதே என்ன செய்வேன்."
"தாயே இந்த அன்னையின் அருள் நமக்குள்ளவரை, யாரால் நம்மை என்ன செய்து விட முடியும். தங்களின் மனதின் பிரம்மையில் இருந்து வெளியே வாருங்கள். தற்போது உங்களுக்கு நல்ல உறக்கம் தான் தேவை, என்னோடு வாருங்கள் குடிலுக்கு செல்வோம்."
ஏந்திழை அம்மையார் கொற்றவை தேவியை நோக்கி மனதார வணங்கி விட்டு, குடிலை நோக்கி மதுராவுடன் சென்றார்.
அரண்மனையில் அரசர் பார்த்திபேந்திரர் அனைவரையும் அதிகாலையிலேயே கொற்றவை கோயிலுக்கு செல்ல கிளப்பிக் கொண்டிருந்தார். அதிகாலை பூஜையில் அனைவரும் சென்று கலந்து கொள்ளலாம் என்றும், அவரும் உடன் வருவதாகவும் கூறினார்.
மோகனா இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் காலம் தாழ்த்தி அங்கு சென்று சேர்வதற்குள் அனைத்தும் முடிந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது திடீரென்று உடனே கிளம்புமாறு கூற, என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தால். சரி வருவது வரட்டும் என்று அவளும் அவர்களுடன் தயாராகி வந்தாள்.
இவர்களுடன் சேர்ந்து கோயிலுக்கு செல்ல, சிறுபடையே தயாராக இருந்தது. போன முறை போல ஏதும் தவறாக நடந்து விடக்கூடாது என்று அரசர் இந்த காவலர் படையை உருவாக்கி இருந்தார்.
மேனகா தேவி, தாரகை தேவி, ரஞ்சனி, மோகனா, பார்த்திபேந்திரர், பிரதீபன் மற்றும் ரகுநந்தனுடன் சிறுபடையும் கோயிலை நோக்கி, அந்த அதிகாலை வேளையில் சென்றது. மித்ரனுக்கு அவசர வேலை ஒன்று வந்ததால், அவர்களுடன் பின்னர் வந்து இணைந்து கொள்வதாக நேற்று இரவே கூறி சென்றிருந்தான்.
ஜோதிடர் அரசருக்கு, நடக்கப்போகும் ஆபத்தை எடுத்துரைக்கும் முன்பே, விதியானது தனது ஆட்டத்தை தொடங்கி விட்டது.
காட்டினில் ஏந்திழை அம்மையாரின் குடிலின் கதவு அவசரமாக தட்டப்பட்டது.
விவசாய நிலத்தில் காவல் காக்கும் வீரர்களில் ஒருவர், ரத்தக்காயங்களுடன் அவரின் முன்பு நின்று கொண்டிருந்தார்.
ஏந்திழை அம்மையார் அவரிடம் என்ன ஏது என்று கேள்வி கேட்கும் முன்பே, மடமடவென்று அங்கு நடந்தவற்றை கூற ஆரம்பித்தார்.
"தாயே மேகக் காடு வாழும் மக்கள் எங்களை தாக்க ஆரம்பித்து விட்டனர். நாங்கள் எவ்வளவு போராடியும் ஏதோ வினோதமான மந்திரங்களை முணுமுணுத்தும், கற்களை எங்களின் மீது தூக்கிப் போட்டும் விளைநிலங்களில் முன்னேறிக் வந்து கொண்டுள்ளனர். நமது வீரர்கள் அவர்களுடன் போரிட முடியாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர்."
"என்ன? ஆனால் எப்படி? நான் தான் மந்திர நடுகல்களை, எல்லையில் பாதுகாப்பிற்க்காக நட்டு வைத்திருக்கின்றேனே?"
"ஆம் தேவி, ஆனால் அவர்கள் அதனை தூக்கி வீசிவிட்டு, நம் காட்டினை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் உடனே அங்கு வந்து அவர்களை தடுக்க வேண்டும், இல்லையென்றால் நம் காட்டினுள் புகுந்து பல சேதாரத்தை ஏற்படுத்தி விடுவார்கள்."
"தாயே இன்னும் எதற்கு தாமதம். உடனே மலை அடிவாரத்தை நோக்கி செல்லலாம் வாருங்கள்."
"வாணி நீ இங்கேயே இரு. நான் அங்கு சென்று பார்த்து வருகிறேன்."
"ஆனால் தாயே…"
"நான் சொல்வதை புரிந்து கொள் வாணி. ஒருவேளை அங்கு எங்களால் தாக்கு பிடிக்க முடியாவிட்டால், இங்கு உள்ளவர்களை காப்பது உனது கடமையாகும்."
"சரி தாயே, ஆனால் நீங்கள் செம்பாவையும் உடன் அழைத்துக் கொண்டு செல்லுங்கள்."
"மகளே பத்திரம், நமது மக்களின் பாதுகாப்பு இப்போது உன் கையில். எங்களை மீறி ஓரிருவர் உட்புகுந்தாலும் அவர்கள் உயிரோடு இந்த காட்டை விட்டு செல்லக்கூடாது. நமது மக்களை பாதுகாப்பது உனது கடமையாகும்..."
ஏந்திழை அம்மையார் செம்பாவின் மீது ஏறி, மலையடிவாரத்தை நோக்கி சென்றார்.
அவர் மலையடிவாரத்தை நெருங்கும் போது, பாதுகாப்பு குழுவில் உள்ள பாதிப்பேர் மாண்டிருந்தனர். ஒரு சிலர் இரத்த காயங்களோடு அவர்களை முன்னேற விடாமல் எதிர்த்து போரிட்டுக் கொண்டிருந்தனர்.
அவரும் பாதுகாப்பு வீரர்களோடு சேர்ந்து,மேக காடு வாழும் மக்களை எதிர்த்து போரிடத் தொடங்கினார். அவர் வருகை புரிந்த ஒரு சில நாழிகைக்கு பின் மேக காட்டைச் சேர்ந்த ஒருவன், நெருப்பு வளையத்தை வானினை நோக்கி வீசினான்.
அப்போதுதான் ஏந்திழை அம்மையார் ஒரு விஷயத்தை கவனித்தார். அவர்கள் எதிர்த்துப் போரிடுவதை விட தன்னை இங்கே நிறுத்தி வைப்பதற்காக போரிட்டு கொண்டிருப்பதாக தோன்றியது.
ஏனெனில் அவர்கள் காட்டினை நோக்கி முன்னேற, ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. அத்தோடு ரகசிய குறியீடு போல, ஒரு நெருப்பு வளையத்தை, வானினை நோக்கி வீசியது, அவர் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது.
அதே நேரம் அந்த நெருப்பு வளையத்தை கண்ட காட்டிற்கு வெளியே இருந்த மேக காட்டினை சேர்ந்த மானிடர்களும், அவர்களை போலவே வேடம் பூண்ட ரத்தினபுரியை சேர்ந்த வீரர்களும் காட்டினை நோக்கி, தமது ஆயுதங்களுடன் முன்னேற தொடங்கினர்.
No comments:
Post a Comment