அத்தியாயம் 65
கொம்பு என்பது ஒரு தூம்பு வகை பழங்கால தமிழர்களின் இசை கருவி. இது ஒரு ஊது கருவி. கொம்பு பண்டைய காலத்தில் விலங்குகளின் கொம்புகளை பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும் தற்காலத்தில் உலோகங்களாலும் உருவாக்கப்படுகிறது.
நாட்டுப்புற இசையிலும் கோயில்களிலும் இந்த கொம்பு வகை இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது தற்காலத்தில் பித்தளை வெண்கலம் போன்ற உலோகங்களால் கொம்பு செய்யப்படுகிறது. பித்தளையால் செய்யப்பட்ட கொம்பை விட வெண்கலத்தால் வார்க்கப்பட்ட கொம்பில், ஒலி அதிர்வு கூடுதலாக இருக்கும்.
இதை இசைப்பவர்கள், தமது முழு பலத்தையும் பயன்படுத்தி அடிவயிற்றில் இருந்து ஊதுவதன் மூலம், யானை பிளிறுவது போன்ற ஓசை கொம்பில் உருவாகின்றது.
அத்தகைய ஓசையை கேட்டு தான், ரகுநந்தன் அவசரமாக தனது அத்தை வீட்டில் இருந்து வெளியேறினான்.
நண்பர்கள் குருகுலத்தில் இருந்தபோது அவசரகால செய்தியை தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள, இந்த கொம்பு ஒலியை தான் உபயோகித்தனர். அதையே தான் வியாபாரியின் வீட்டில் வேலையாளாக இருக்கும் உளவாளியிடம் கொடுத்திருந்தான் மித்ரன்.
ரகுநந்தன் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியை விட்டு சற்று தள்ளி, குகை போன்ற அமைப்பில் இருந்த ஒரு இடத்திற்குள் நுழைந்தான்.
அங்கு அவனுக்கு முன்பே மித்ரன், வியாபாரியிடம் வேலையாளாக இருந்த உளவாளியுடன் பேசிக் கொண்டிருந்தான்.
"என்ன ஆனது மித்ரா அப்படி என்ன அவசர செய்தி?"
மித்ரன் சிந்தனையில் இருக்க, வேலையால் ரகுநந்தனுக்கு பதில் கூற ஆரம்பித்தான்.
"ஏதோ சதி திட்டம் ஒன்று நாளை அரங்கேற உள்ளது. அந்த வியாபாரி தமது பெட்டிகளில் நிறைய ஆயுதங்களை பதுக்கி எங்கேயோ அந்த யோகினியுடன் புறப்பட்டு சென்றான். நாட்டில் அங்கங்கு அவனுக்கு உதவி செய்த பணியாளர்களை தங்கள் கண்டுபிடித்து அவர்களை வேலையில் இருந்து மாற்றி விட்டதால், அவன் தெருவை சுற்றிக்கொண்டு காட்டை ஒட்டிய பாதையில் சென்றான். நான் அவர்களுடன் செல்ல எவ்வளவோ முயற்சித்தேன் ஆனால் அவர்கள் இருவர் மட்டும் ஒரு வண்டியில், அந்த பொருட்களை வைத்து வியாபாரத்திற்கு செல்வது போல் சென்றனர்.
நானும் அவர்கள் அறியாமல் அவர்களை பின்தொடர்ந்து தான் சென்றேன். சிறிது நேரத்தில் ராட்சச உருவம் கொண்ட இருவர் வந்து அந்த பெட்டிகளை எடுத்துக்கொண்டு சென்றனர். அந்த ராட்சச உருவம் கொண்ட மனிதர்களின் நெற்றியில் உள்ள குறிகள், அந்த மலை மீது வாழும் மேக காடு மக்கள் இட்டுக் கொள்ளும் குறியீடு போல இருந்தது."
"மேக காட்டில் வாழும் மக்களுக்கும் மோகனாவிற்கும் என்ன சம்பந்தம்? சில காலமாக மேக காட்டு மக்கள் மாந்திரீகங்களில் ஈடுபட்டு வருவதாக கேள்விப்பட்டேன், நம் குருநாதர் கூட ஒரு சில ஊர்களில் மாந்திரீக வேலைக்காக அவர்கள் அப்பாவி பொதுமக்களை பலி கொடுக்க முனைந்த போது துரத்தி அடித்தாரே!"
"மித்ரா மறந்து விட்டாயா? அன்று கூட காட்டில் அந்த யானையை மோகனா ஏதோ பொடியை தூவி, மந்திரங்களை முணுமுணுத்து மூர்ச்சை அடையச் செய்தாளே. அதுவும் மாந்திரீக வேலையாக இருக்குமோ"
"என்ன?...என்ன கூறிக் கொண்டிருக்கிறாய் ரகுநந்தா? எனது தங்கை மந்திரங்களை கூறி யானையை மூர்ச்சை அடைய செய்தாளா?"
அந்த இடத்தில் அந்த நேரத்தில் பிரதீபனை மித்திரனும் ரகுநந்தனும் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. இந்த கொம்பின் ஒலியை அவன் கேட்டாலும், தங்களது ஊரில் ஒலிப்பதால் இதை அவன் குறிப்பில் எடுத்துக் கொள்ள மாட்டான் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் அவன் சரியாக அதை கண்டுபிடித்து, அவர்கள் வழக்கமாக கூடும் இடத்திற்கு வருவான் என்று நினைக்கவே இல்லை.
"மித்ரா இங்கு என்னதான் நடக்கின்றது? எதற்காக மோகனாவை பற்றி இவ்வாறு கூறிக் கொண்டிருக்கிறீர்கள்?"
பிரதீபனிடம் இதற்கு மேலும் உண்மையை மறைக்க விரும்பாமல், நடந்த அனைத்தையும் அவனிடம் கூறினார்.
"மித்ரா என் தங்கை சற்று கண்டிப்போடு நடந்து கொள்பவள் தான். ஆனால் அதற்காக இப்படிப்பட்ட செயல்களில் எல்லாம் ஒரு நாளும் ஈடுபட மாட்டாள். ஒருவேளை அந்த யோகினியே என் தங்கையின் அனுமதி இல்லாமல் தனியாக இவ்வாறு செய்திருக்கலாம் அல்லவா?"
"பிரதீபா, நாங்கள் இதைப் பற்றி தீர விசாரிக்காமல் முடிவுக்கு வந்திருப்போம் என்று நினைக்கின்றாயா?"
"வாழ வேண்டிய பெண்ணின் மீது, இப்படிப்பட்ட பழி சொற்களை வீசுகிறீர்களே? உங்களுக்கு இரக்கமே இல்லையா? குழந்தையடா அவள். மித்ரா உனக்கு என் தங்கையை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றால், அதை நேரடியாக கூறிவிடு. அதற்காக இவ்வாறான பழிச் சொற்களை அள்ளி அவள் மீது வீசாதே."
"பிரதீபா, உன் தங்கையின் மீது வைத்த பாசத்தின் காரணமாக, இந்த நண்பர்களின் மீது வைத்த நம்பிக்கையை இழந்து விட்டாயா? மித்ரனை பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் நீயா, அவனைப் பற்றி இப்படியெல்லாம் பேசுகின்றாய்?"
"உனக்கு எங்கள் மீது சந்தேகம் என்றால், நாளை கொற்றவை தேவி கோவிலுக்கு உன் தங்கையையும் உடன் அழைத்து வா. அவளால் சில நாழிகைகள் கூட, தேவியின் கோயிலுக்குள் இருக்க முடியாது. பிறகு நீயே அறிந்து கொள்வாய், உண்மை எதுவென்று."
"ரகுநந்தா போதும் நிறுத்து, பிரதீபா அமைதி கொள், உன் நிதானத்தை இழக்காதே. நாங்கள் கூறியவை அனைத்தும் உண்மை, பொறுமையாக நாங்கள் கூற வருவதை சற்று புரிந்து கொள்ள முயற்சி செய் நண்பா."
"வேண்டாம் நான் எதையும் கேட்க விரும்பவில்லை."
பிரதீபன் அங்கிருந்து கோபமாக கிளம்பி விட்டான்.
"நாம் இந்த கொம்பின் ஒலியை ரகசிய குறியாக வைத்திருக்கக் கூடாது என்று, எனக்கு இப்போது தோன்றுகிறது ரகுநந்தா."
"விடு மித்ரா, பிரதீபனை பிறகு சமாதானப்படுத்திக் கொள்ளலாம். இவன் கூறிய செய்தியை பற்றி முதலில் கவனிப்போம்."
"ம்ம்ம். அவர்களுக்குள் வேறு ஏதாவது சம்பாஷனை நடந்ததா? யோகினியும் அந்த வியாபாரியும் அவர்களிடம் அவற்றைக் கொடுத்துவிட்டு வேறு எங்கு சென்றனர்?"
"யோகினி அவர்கள் மூவரிடமும் ஏதோ கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அந்த ராட்சச உருவங்களுடன் வியாபாரியும் கிளம்பிவிட, யோகினி அவர்கள் செல்லும்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அரண்மனைக்கு திரும்பி விட்டாள்."
மித்ரன் சிறிது நேரம் யோசித்து விட்டு, ரகுநந்தனிடம் திரும்பி, தனது திட்டங்களை விவரிக்க தொடங்கினான்.
அதே நேரம் தன் தங்கையின் வீட்டுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, படுக்கையில் படுத்திருந்த அவரது அத்தையை பார்க்க சென்றிருந்த மேனகா தேவி, நாளை கொற்றவை தேவி கோவிலுக்கு அண்ணியாருடன் போவதாக கூறினார்.
திருமணம் முடிவாக உள்ள நிலையில், ரஞ்சனியும் கொற்றவை தேவி கோயிலுக்கு சென்று, அந்த தேவியின் ஆசி பெற்று வந்தால், நன்றாக இருக்கும் என்று தெய்வநாயகி பாட்டி கூற, நாளை ரஞ்சனியையும் உடன் அழைத்துச் செல்வதாக கூறி சென்றார் மேனகா தேவி.
அரண்மனைக்கு வந்த பிரதீபன், நாளை கொற்றவை தேவி கோவிலில் உனது திருமணத்திற்காகவும் பூ கேட்க போகிறோம். அதனால் எங்களோடு நீயும் வந்தே ஆக வேண்டும் என்று கட்டளை போல் மோகனாவிடம் கூறிச் சென்றான்.
No comments:
Post a Comment