அத்தியாயம் 63
"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவர்களின் திருமணம் நடைபெறுவது உசிதம்."
"ஏன் ஜோசியரே இவ்வாறு கூறுகிறீர்கள்? ஜாதகத்தில் ஏதேனும் குறை உள்ளதா?"
"அப்படி இல்லை தளபதி, தங்களது அன்னைக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறினீர்கள். அதனால் தான் இவ்வாறு கூறினேன்."
"எப்படி இருந்தாலும் கொற்றவை தேவி திருவிழா முடியாமல் எந்த ஒரு காரியத்தையும் தொடங்க முடியாது. அதனால் சிறிது நாட்கள் பொறுத்திருப்போம். சரி நாங்கள் வருகிறோம் ஜோதிடரே."
ஜோதிடர், அவர்கள் விடை பெற்றுச் சென்றதும் திரும்பவும் சோழிகளை உருட்டிப் பார்த்தார்.
"தாயே இது என்ன சோதனை கன்னிப் பலி ஒன்று நடக்கப் போவதாக சோழி கூறுகின்றதே! இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாயிற்றே."
ஜோதிடர் தனது குருதேவரான சாந்தகுரு அடிகளாரை மனதில் நினைத்து வேண்டினார்.
"குருதேவா இந்த பிரச்சினையில் இருந்து, இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும். இது அழிவின் ஆரம்பம் தான் என்று எனக்கு தோன்றுகின்றது. கெட்ட சக்திகள் நாட்டுக்குள் ஊடுருவ இதுவே முதன்மையான காரணமாக அமையப்போகின்றது. வரப்போவது தெரிந்தும், அதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது புரியாமல் தவிக்கின்றேன். தயை கூர்ந்து எங்களுடன் இருந்து எங்களை காப்பாற்றி தாருங்கள்."
நாளை காலையிலேயே அரண்மனைக்கு சென்று அரசரை சந்தித்து, நாட்டிற்கு வர போகும் ஆபத்தை பற்றி கூற வேண்டும் என்று அவர் முடிவு எடுத்துக் கொண்டார்.
அதே நேரம் அகத்தியர் மலையில் தியானத்தில் ஈடுபட்டிருந்த சாந்தகுரு அடிகளார், தமது கண்களை திறந்து, தமக்கு எதிரில் உள்ள சிவலிங்கத்தை நோக்கினார்.
சிவலிங்கத்தின் மீது இருந்த மலர்கள் ருத்ராட்ச மாலையோடு கீழே விழ, அதை கண்டு புன்னகை புரிந்தவர்,
"ஆண்டவா உமது கட்டளையை ஏற்று அங்கு செல்கிறேன். நான் அங்கு சென்று சேரும் முன் எந்த ஆபத்தும் அங்கு நெருங்காமல் இருக்க வேண்டும்."
சிவலிங்கத்தின் பாதத்தில் இருந்த மலர்களையும் ருத்ராட்ச மாலையையும் கைகளில் எடுத்துக் கொண்டு, மகிழபுரியை நோக்கி, தமது பயணத்தை தொடங்கினார், சாந்தகுரு அடிகளார்.
மேனகா தேவி தனது அண்ணியாரிடம் மடலில் வந்துள்ள சேதியையும், தனது மனதில் உள்ள குழப்பத்தையும் கூறி அதற்கான தீர்வு வேண்டி கொற்றவை தேவை கோவிலுக்கு செல்லலாமா, என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
தாரகை தேவியார் அங்கிருந்த மித்ரனிடம் திரும்பி, நாங்களும் உடன் வரலாமா என்று அவனிடம் அனுமதி வேண்டினார்.
ஏற்கனவே மதுராவை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என்ற சிந்தனையில் இருந்தவன், இப்போது குடும்பமாக கிளம்பளாம் என்ற தன் அன்னையின் கோரிக்கைக்கு, என்ன சொல்வதென்றே தெரியாமல் தலையை மட்டும் சரி என்று ஆட்டி வைத்தான்.
தனது அறையில் மோகனா தன் சேவகியான யோகினிக்கு நாளை செயல்படுத்த வேண்டிய காரியங்களைப் பற்றி கட்டளையிட்டு கொண்டிருந்தாள்.
"நாளை அரண்மனையில் இருந்து இவர்கள் எல்லோரும் வெளியேறும் முன்பே, அந்த காட்டினில் இருந்து தாயும் மகளும் வெளியேறி இருக்க வேண்டும்.
அரண்மனையில் இருந்து இவர்கள் வெளியேறிய அடுத்த நிமிடம், நான் நமது இடத்திற்கு வந்து விடுவேன். அங்கு அந்த ஏந்திழையின் மகளை வசியப்படுத்தி, அவள் கையாலேயே, கொற்றவை தேவியின் அருள் பெற்ற அவளை, காலக்கோடருக்கு பலியாக்குகிறேன்."
யோகினி தயங்கி தயங்கி மோகனாவிடம் தனது சந்தேகத்தை கேட்டாள்.
"தேவி எனக்கு ஒரு சிறு குழப்பம், அதை தங்களிடம் கேட்கலாமா?"
"கேள், குழப்பத்தோடு ஒரு காரியத்தில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றிக்கனியை பறிக்க இயலாது, உனது சந்தேகத்தை கூறி தெளிவுபடுத்திக் கொண்டு காரியத்தில் இறங்கு."
"நாம் இப்போது ஏந்திழையையும் அவளின் மகளையும் பலி கொடுத்து விட்டால், எவ்வாறு நமக்கு கொற்றவை தேவி திருவிழாவின் போது இங்கு வர அனுமதி கிடைக்கும்? இது தெரிந்தும் எதற்காக அனுமதி கேட்டு அரசருக்கு மடல் எழுதச் சொன்னீர்கள்?"
மோகனா புன்னகைத்துக் கொண்டே அவளைப் பார்த்து கூற தொடங்கினாள்.
"இப்போது காட்டுவாசி மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை யார் செய்ததாக முதலில் எண்ணுவார்கள்?"
"நமது ரத்னபுரியைத்தான் கூறுவார்கள்."
"நாம் இங்கு கொற்றவை தேவி திருவிழாவிற்கு வருவதற்காக அனுமதி கேட்டு அரசரிடம் மடல் அனுப்பி உள்ளோம். எனவே, இப்போது சந்தேகம் யார் பக்கம் திரும்பும்?"
"மடல் அனுப்பிவிட்டு பின்னாலேயே, இவர்களை நாம் கொல்ல துணிவோம் என்று அவர்கள் நினைப்பார்களா? அல்லது அரசர் தான் அவ்வாறு எண்ணுவாரா?"
"இல்லை தேவி இப்போது புரிகிறது, நமது ராஜ்யத்தின் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகத்தான் முதலிலேயே மகிழபுரி அரசருக்கு நமது ரத்தினபுரி அரசரின் மூலம் மடல் அனுப்பி விட்டீர்கள். இப்போது அந்த ஏந்திழையின் மகளை பலி கொடுக்கப் போகிறீர்கள்."
"ஆம் நடக்கப் போகும் இந்த நாடகத்தில், நமது ரத்னபுரி ராஜ்ஜியத்தின் பெயர் ஏதாவது ஒரு இடத்தில் வெளியே வந்து விட்டாலும், நான் இவ்வளவு நாள் இந்த ராஜ்ஜியத்தில் கட்டி காத்த எனது நற்பெயரும், என் அத்தானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் கனவாகவே கலைந்து போய்விடும்.
சற்று நிதானமாகத்தான் மறைந்திருந்து எதிரிகளை நாம் வேட்டையாட வேண்டும். சரி யோகினி, பேச்சை விடுத்து நீ காரியத்தில் கண் வை."
கொற்றவை தேவி கோவிலை சுற்றி வாழும் குருந்தங்காட்டை சேர்ந்த மக்கள் அனைவரும், தமது வாழ்வாதாரத்திற்காக மலையடிவாரத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர்.
அந்த மலையின் உச்சியில், மேகங்கள் தொட்டுச் செல்லும் இடத்தில், சில மக்கள் வாழ்ந்து வந்தனர். அது மேக காடு என்று அழைக்கப்பட்டது. அங்கு வாழும் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக அங்குள்ள பழங்களை உண்டும், தேன் எடுத்தும் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடியும் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர்.
ஒரு சில சமயம் குருந்தங்காட்டை சேர்ந்த மக்கள் விளைவித்துள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்று விடுவர்.
அவர்களிடமிருந்து தமது விளைநிலங்களை காப்பாற்ற குருந்தங்காட்டை சேர்ந்த மக்கள், அந்த மலை அடிவாரத்தில் ஒருவர் மாற்றி ஒருவராக, குழுவாக காவலுக்கு நிற்பர்.
ஒரு சில சமயம் காவலுக்கு இருப்போரை தாக்கி விட்டும், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி விட்டும், பாதி அவர்களின் தேவைக்கு என்று எடுத்துக் கொண்டு சென்று விடுவர்.
இவர்களின் அட்டகாசம் எல்லை தாண்டும் போது, ஏந்திழை அம்மையார் வந்து, அவர்களுடன் சண்டையிட்டு, அவர்களை விரட்டி அடிப்பார்.
அந்த மலை மீது வாழும் மக்கள் தங்களது வழித்தடங்களுக்கு, மலையின் மறுபக்கத்தை தான் உபயோகித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் சில காலமாக மாந்திரீகங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருவதாக கேள்விப்பட்டதால், ஏந்திழை அம்மையார் மந்திர நடுகல்களை, மலையடிவாரத்தின் எல்லையில் நட்டு வைத்து, தமது மக்களை அவர்களிடமிருந்து காத்து வந்தார்.
No comments:
Post a Comment