அத்தியாயம் 62
"தாயே தங்களுக்கு குழப்பமாக இருந்தால், நாளை அத்தானுடன் நீங்களும் சென்று, இதுகுறித்து கொற்றவை தேவி கோயிலில் பூ கேட்டு வரலாமே?"
"நல்ல யோசனை தான் மோகனா. நான் இது குறித்து அண்ணியாரிடமும் மித்ரனிடமும் கலந்தாலோசித்து விட்டு வருகிறேன்."
மேனகா தேவி தன் அண்ணியை காணச் செல்ல, மோகனா தன் அண்ணனிடம் புலம்பினாள்.
"ஏன் அண்ணா, இந்த சிறு சிறு விஷயங்களை கூட அவர்களிடம் சொல்லிவிட்டு தான் நாம் செய்ய வேண்டுமா? இது என்னதான் வழக்கமோ போ, நான் சொன்னாலும் அம்மா கேட்க மாட்டேன் என்கிறார்கள், நீயாவது அவர்களிடம் இப்படி இருக்க வேண்டாம் என்று கூறினேன்."
பிரதீபன் புன்னகையுடன் அவள் தலையினை வாஞ்சையாக தடவி விட்டு,
"மோகனா நாம் இருவரும் ஏதாவது முடிவெடுத்தால், முதலில் யாரிடம் வந்து கூறுவோம்? அன்னையிடம் தானே? நமது அன்னைக்கும் அத்தை தான் அன்னையைப் போன்றவர். அதனால்தான் அன்னை அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.
நமது தந்தை செய்த தவறை இதுவரையிலும் ஏதாவது ஒரு நாளாவது சுட்டிக்காட்டி, நம்மை இழிவாக பேசியிருக்கின்றாரா? அவரது பிள்ளைகள் போல தானே நம்மையும் பார்க்கிறார். இனி இது போல் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே."
ஒரு நல்ல தமையனாக, தனது அன்பு தங்கைக்கு நல்ல புத்திமதிகளை சொல்லி விட்டு, பிரதீபன் அங்கிருந்து சென்றான்.
ரத்தினபுரி ராஜ்யத்தை அரசாண்டு வந்த நாகேந்திர பூபதி, உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாகி விட ,அவரின் புதல்வர் ரங்கராஜ பூபதி தற்போது அரசாண்டு கொண்டிருக்கிறார்.
"ராஜகுரு எதற்காக மோகனா கொற்றவை திருவிழாவிற்கு மகிழபுரி அரசனிடம் அனுமதி கேட்கச் சொன்னால்? ஏற்கனவே அங்குள்ள நம் நாட்டு வியாபாரிகளை சந்தேகக் கண் கொண்டு நோட்டமிட்டு வருகிறார்கள். இப்போது நம் நாட்டில் இருந்து அனுமதி கேட்டால் கொடுப்பார்களா?
அனுமதி கிடைத்தவுடன் நமது படைகளை மகிழபுரிக்கு கொஞ்சம் கொஞ்சமாக அனுப்ப வேண்டும் என்று வேறு கூறுகிறாள். இது ஒன்றும் கடைசி பூஜை இல்லையே இன்னும் ஒரு பூஜை மீதம் உள்ளதே?
தாங்கள் தானே கூறினீர்கள் அங்கு கொற்றவையின் அருளாசி உள்ளவரை, நம்மால் அந்த நாட்டில் உள்ள செடிகளை கூட அசைக்க முடியாது என்று, இப்போது எதற்காக இந்த ஏற்பாடு எல்லாம் அவள் கூறியபடி செய்யச் சொல்கிறீர்கள்?"
"சரிதான் அரசே இது கடைசி பூஜையில்லை தான் இன்னும் ஒரு பூஜை உள்ளது. ஆனால் அடுத்த பூஜையை அடுத்த வருடம் செய்ய தேவையில்லை, இந்த பௌர்ணமி முடிந்து வரும் அமாவாசை திதியில் தான் செய்ய வேண்டும்.
இந்த பௌர்ணமி பூஜைக்கு முன் ஒரு கன்னிப் பெண்ணின் ரத்தத்தை, கொற்றவை தேவி கோயிலை சுற்றி, வேலி போன்று தெளித்து, அவளை மந்திரக்கட்டுக்குள் அடைக்க வேண்டும்.
அப்படி நாம் செய்து விட்டால் அம்மாவாசை திதியில் நாம் வழங்கப் போகும் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலியை, அந்த காட்டினுள் கொடுத்து காலக்கோடரின் சக்தியை அந்த ராஜ்ஜியம் முழுவதும் பரப்பலாம்.
கடைசி பூஜை முடிந்து விட்டால் மோகனாவிற்கு காலக்கோடரின் சக்திகள் அனைத்தும் வந்துவிடும். பிறகு அந்த கொற்றவையே, மந்திர கட்டை உடைத்துக் கொண்டு நம்மை எதிர்த்து வந்தாலும் கூட, அவளால் நமது சக்தியை எதிர்த்து தாக்கு பிடிக்க முடியாது. அந்த சமயத்தில் நமது படைகள் அங்கே இருந்தால் சுலபமாக மகிழபுரியை சுற்றி வளைத்து விடலாம் ஆகையால் தான் கூறுகிறேன்."
"ராஜகுரு அப்படி என்றால்..."
"ஆம் அரசே மகிழபுரி ராஜ்ஜியம், காலகோடரின் கட்டுப்பாட்டிற்குள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. பௌர்ணமி பூஜைக்காக மோகனா வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்."
"ராஜகுரு, நாம் பலி கொடுக்க வேண்டிய அந்த கன்னிப் பெண்ணை எவ்வாறு மகிழபுரிக்கு மோகனாவுடன் அனுப்பி வைப்பது.
வியாபாரிகள் போல் வேடம் இட்டவர்களுடன் அவளை வேலையாளாக அனுப்பி வைக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போதே வீரர்களை அனுப்பி நாட்டிலுள்ள கன்னிப்பெண்களை அழைத்து வர சொல்கிறேன்."
"தேவையில்லை வேந்தே, நாம் கொடுக்கப் போகும் பலியானது, அந்த கொற்றவை தேவியினுடைய காட்டில் தான் வளர்ந்து கொண்டிருக்கிறது."
"அப்படியா? யார் அது ராஜகுரு?"
"ஏந்திழையின் வளர்ப்பு மகள், பிறப்பிலேயே கொற்றவை தேவியின் அருளை பெற்றவள். அவளைத்தான் நாம் இந்த பௌர்ணமி பூஜைக்காக பலி கொடுத்து, அந்த கொற்றவையை மந்திர கட்டுக்குள் வைக்கப் போகிறோம்."
"ஆஹா கொற்றவையை மந்திர கட்டுக்குள் வைக்க, அவளின் பக்தர்களையே பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்ன ஒரு அருமையான திட்டம்!
ஆனால் எவ்வாறு அந்த காட்டில் நுழைவது? அப்படியே நுழைந்தாலும் ஏந்திழையை மீறி எவ்வாறு அவளது மகளை பலி கொடுப்பது?"
"அதற்கான நாடகம் நாளையே அரங்கேறும். இது முழுக்க முழுக்க மோகனாவின் விருப்பம். தனது தந்தையே விட்டு பிரிய காரணமாக இருந்த குடும்பத்தில் பிறந்த குழந்தை, உயிருடன் இருக்கக் கூடாது என்று நினைக்கிறாள். இந்த நாடகத்தை வழிநடத்த போகிறவளும் அவள்தான்."
ரஞ்சனியின் வீட்டில் அவளது அப்பாவின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஒன்று கூடிய அவர்களின் உற்றார் உறவினர் வீடு எங்கும் பரவி இருந்தனர். மகாராணியார் கூட, தனது நாத்தனாரின் அத்தை முறை என்பதால், வந்து பார்த்துவிட்டு தான் சென்று இருந்தார்.
ரகு நந்தனின் தாயும் தந்தையும் கூட அங்கு தான் இருந்தனர். வைத்தியர் வந்து பார்த்துவிட்டு பாட்டியின் இறுதி காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறியதால், அவர் தனது பேரனுக்கும் பேத்திக்கும் திருமணம் செய்து வைத்து பார்க்கும் ஆசையினை, தன் பிள்ளைகள் இருவரிடமும் பகிர்ந்து கொண்டார்.
ரஞ்சனியின் தந்தையும் ரகுநந்தனின் தந்தையும் அன்றே, ராஜாங்க ஜோதிடரை சென்று கண்டு வந்தனர்.
அவர்களின் ஜாதகத்தை கணித்த ஜோதிடரின் முகமானது குழப்ப ரேகைகளால் சூழப்பட்டு இருந்தது.
"இருவருக்கும் பொருத்தம் அமோகமாக உள்ளது நீங்கள் திருமண வேலையை தாராளமாக தொடங்கலாம். வரக்கூடிய பௌர்ணமி நாள் சுபமுகூர்த்த தினமே. அந்நாளிலேயே நீங்கள் இவர்களின் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்."
"கொற்றவை தேவியின் திருவிழா வருகிறது, அது முடிந்து வரும் வளர்பிறை நாளிலே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்."
"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவர்களின் திருமணம் நடைபெறுவது உசிதம்."
No comments:
Post a Comment