Search This Blog

Followers

Powered By Blogger

Sunday, July 13, 2025

மன்னவரே 60


 

              அத்தியாயம் 60


    "எங்கே சிரித்துக் கொண்டே என்னை பார்த்து, சென்று வாருங்கள் பிராண நாதா என்று கூறு பார்க்கலாம்."


 மதுரா அவனைப் பார்த்து முறைக்க,


  "இன்றே உனது தாயாரை நான் காண வேண்டும் என்று நினைக்கிறாய் போல, சரி பார்த்துவிட்டே செல்கிறேன். அதோ அவரே வந்து கொண்டிருக்கின்றாரே."


  ஏந்திழை அம்மையார் மூலிகை மூட்டையுடன் குகைக்குள் நுழைந்து கொண்டிருந்தார். மதுரா மித்ரனை நோக்கி கைகளை கூப்பி,


    "என் பிராணனை எடுக்கும் நாதரே தயவு செய்து இங்கிருந்து செல்லுங்களேன்."


  "ஆமாம் உன் பிராணனை என் உயிருக்குள் பொத்தி வைத்துக்கொண்ட உனது நாதன் நான் தான்."


  "புலவரே தங்கள் புலமையின் அழகை இன்னொரு நாள் ஆற அமர வந்து என்னிடம் காட்டுவீர்களாக, இப்போது கிளம்புங்கள்."


  "வாணி அங்கு யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய்?"


   "அன்னையே அது…அது..."


    "ஓஹோ...வழக்கம் போல குளத்தினல் தெரியும் உன் பிம்பத்துடன் கதை அளக்க தொடங்கி விட்டாயா? இந்த மூட்டையில் உள்ள இலைகளை பிரித்து வை. செம்பாவிடம் இன்னொரு மூட்டை உள்ளது அதை நான் சென்று வாங்கி வருகிறேன்."


  ஏந்திழை அம்மையார் கூறியதும், மதுரா உடனே குளத்தினை திரும்பிப் பார்த்து, சுற்றும் முற்றும் குகையினில் தேடினாள். மித்ரன் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு

பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டாள்.


    "கணவன் சென்று விட்டானே என்று ஏக்க பெருமூச்சு விடாது, நிம்மதி பெருமூச்சினை வெளியிடுகிறாயே? மதுரா என்னே உன் பதி பக்தி!"


  "நீ இன்னும் வெளியே  செல்லவில்லையா? இங்குதான் இருகின்றாயா?"


  "என்னை இங்கிருந்து அனுப்புவதிலேயே குறியாக இரு. சரி என்னை காண நாளை ஏரிக்கரைக்கு வருகின்றாயா?"


    "நான் எதற்காக ஏரி கரைக்கு வர வேண்டும்?"


  "நான் சொல்வதை புரிந்து கொள் மதுரா, உன்னிடம் நான் மனம் விட்டு நிறைய விஷயங்களைப் பற்றி பேச வேண்டும்."


  "அன்னை எனக்கான பயிற்சிகளை ஆரம்பித்து விட்டார். அதனால் அவரை விட்டு என்னால் எங்கேயும் செல்ல முடியாது."


  "சரி அப்படி என்றால் நான் இங்கு வந்து விடுகிறேன்."


    "ஐயோ தீரா ஏன் தான் என்னை இப்படி படுத்தி எடுக்கின்றாய், நிச்சயமாக ஏரிக்கரைக்கு வர முயற்சி செய்கிறேன் என்னை நம்பு. அன்னை வந்து கொண்டிருக்கிறார், தயவு செய்து இங்கிருந்து சென்று விடு தீரா."


  அவள் பதட்டமாக குகை வாசலை பார்த்துக்கொண்டே மித்ரனிடம் கூற,


  "மதுரா உனக்காக வாழ்க்கை முழுவதும் கூட நான் காத்திருக்க தயார். ஆனால் நாளை முன்பகல் வேளையில் என்னை நீ சந்திக்க தவறினால், நாளை மாலையே உன்னை காண நான் தீர்த்த குளத்திற்கு வந்து விடுவேன்."


  அவனது வார்த்தை ஜாலத்தில், அவளின் சிந்தனைகள் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கும்போதே, அவளை இறுக கட்டி அணைத்து விட்டு, குளத்து நீரினுள் பாய்ந்திருந்தான் மித்ரன்.


    நடந்ததை அவள் உணரும் முன்பே அவன் சென்றிருந்தான்.


   ஏந்திழை அம்மையார் நிறைய முறை அழைத்தும் மதுரா பதில் பேசாது, பிரம்மை பிடித்தவள் போல் நின்று கொண்டிருப்பதை கண்டு பயந்து போன அவர், தன் கையில் இருந்த கொற்றவை தேவியின் பிரசாதத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்து விட்டார்.


  இங்கு ஒருத்தியை வேப்பிலை அடிக்கும் நிலைக்கு உள்ளாக்கி விட்டு ஏரிக்கரையில் சந்தோஷமாக நீரில் இருந்து எழுந்தான் மித்ரன்.


   மித்ரன் சென்று வெகுநேரமாகியதால் பயந்து போன ரகுநந்தன், யாரிடம் கூறுவது என்று தெரியாமல், பிரதீபனை ஏரிக்கரைக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.


  சரியாக அந்த நேரம் தான் மித்ரனும் நீரில் இருந்து எழுந்து வந்தான். அவனை அங்கு கண்டு அதிர்ந்த ரகுநந்தன்,


  "நீ எப்படி ஏரி நீருக்குள் இருந்து வருகிறாய் மித்ரா?"


  "அறிவு கெட்டவனே, ஏரிக்குள் குதித்தவன் ஏரி நீரிலிருந்து வராமல், கொற்றவை தேவியின் தீர்த்த குளத்தில் இருந்தா வர முடியும்?"


    "இருவரும் சேர்ந்து மூச்சை அடக்கும் பயிற்சி மேற்கொண்டோமே, என்னை இங்கு ஏரியில் தனியாக விட்டுவிட்டு நீ எங்கடா சென்றாய்?"


பிரதீபன் ரகுநந்தனை பார்த்து முறைக்க,


    "ஐயோ இல்லை பிரதீபா, நான் வெகு நேரம் இந்த ஏரி நீருக்குள் உள்நீச்சல் அடித்து  இவனை தேடினேன். எங்குமே  இவனை காணவில்லை. அதனால் தான் உன்னை அழைத்து வரலாம் என்று வந்தேன்."


  "இப்போது  உன் கண் முன்னே, அந்த ஏரிக்குள் இருந்து தானே அவன் வருகிறான்?"


    "ஆமாம் பிரதீபா, அதுதான் எப்படி என்று தெரியவில்லை."


    "என்னடா நடக்கின்றது இங்கு? எதற்காக பிரதீபனை அழைத்து வந்திருக்கிறாய்?"


    "நான் சொல்வது நிஜமடா, ஏரி நீரினுள் நான் வெகு நேரம் தேடினேன், உள் நீச்சல் அடித்துக் கூட, அனைத்து மூலையிலும் தேடினேன். மித்ரன் எங்குமே இல்லாத காரணத்தால் தான் அவசரமாக அரண்மனைக்கு வந்தேன்."


    "ஆமாம் அனாவசியமாக நீ அங்கு வந்து,  முக்கியமான அரச காரியங்களுக்காக, அரசரை பார்ப்பதற்காக காத்து கொண்டிருந்த என்னை, இங்கு இழுத்து வந்து விட்டாய்."


    "சரி விடு பிரதீபா, சிறுவன் ஏதோ தெரியாமல் இப்படி செய்து விட்டான். ஆமாம் அது என்ன முக்கியமான அரசாங்க காரியம்? ஏதாவது போர் அறிகுறியா? இல்லை உளவாளிகள் யாராவது  சிக்கியிருக்கிறார்களா?"


    "இல்லை மித்ரா கொற்றவை தேவி திருவிழா நெருங்குகிறது அல்லவா, அதில் கலந்து கொள்ள அனுமதி கேட்டு, ரத்னபுரி அரசரிடம் இருந்து  ஓலை வந்ததுள்ளது. அத்தோடு அவருக்கு மோகனாவை பார்க்க வேண்டும் போல உள்ளதாம், அவளையும் உடனே அனுப்பி வைக்குமாறு கூறியிருக்கிறார்."


    இதைக் கேட்டதும் ரகுநந்தனும் மித்ரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


சில நாட்களாக மோகனாவை கண்காணித்ததில் அவளின் அந்தரங்க சேவகி, அடிக்கடி யாரும் அறியாமல், யாரையோ சென்று சந்தித்து வருவதை தெரிந்து கொண்டனர். 


  அவள் சந்திப்பது இரத்தினபுரியை சேர்ந்த வியாபாரி வேடம் தரித்த, உளவாளி என்றும் அறிந்து கொண்டனர். இவை அனைத்தையும் அறிந்தும் நேரடியாக அவனைப் பிடித்து விசாரிக்காமல், அவனது வீட்டிலேயே மகிழபுரியை சேர்ந்த ஒருவனை ரத்னபுரியை சேர்ந்தவன் என்று கூற வைத்து, வேலைக்கு அமர்த்தினர்.


      அந்த மகழபுரியை சேர்ந்த வேலையால் கூட, நேற்றுதான்  பௌர்ணமி பூஜை, மோகனா என்று அவர்கள் ஏதோ பேசிக் கொண்டதாக கூறினான். மோகனாவின் சேவகையான  யோகினி அந்த உளவாளியிடம் ஒரு ஓலையை கொடுத்து இதில் உள்ள திட்டத்தை அப்படியே செயல்படுத்துமாறு மோகனா உத்தரவிட்டிருப்பதாக  கூறினான்.

No comments:

Post a Comment