Search This Blog

Followers

Powered By Blogger

Saturday, July 12, 2025

மன்னவரே 59


 

              அத்தியாயம் 59 

  

        மித்ரன் கைகளை கட்டிக்கொண்டு தலையை சாய்த்து, கண்களில் குறும்பு பார்வையோடு அவளை நோக்கி,


   "மதுரா..." என்று அழைத்திட


  கற்றை மீசையுடன் அடர்த்தியான  தலைமுடியானது நீரினில் நனைந்தும் அடங்க மறுத்து, காற்றில் அலைபாய, அந்த சின்ன கண்ணனை போல் கண்களில் குறும்பு மின்ன, கம்பீர தோற்றத்துடன் நிற்கும் ஆண்மகனை கண்டு, அவள் இது தனது தீரனா என்று  ஆச்சரியத்தில் மகிழ்ச்சியோடு கண்களை விரித்தாள்.


    அவள் கண்களில் தோன்றிய மகிழ்ச்சி ஒரு நொடி தான். அடுத்த நொடியே நிதர்சனத்தை உணர்ந்து, தன் அன்னையைப் பற்றி நினைத்து, அவசரமாக குகை வாசலை நோக்கினாள்.


    சிறுவயதில் ஓடியாடியது சரிதான், ஆனால் இப்போது வளர்ந்த பிறகு அவனுடன் எவ்வாறு பழக முடியும். விவரம் தெரிந்த பிறகும் இதைத் தொடரத்தான் முடியுமா என்ன? தான் ஒரு காட்டில் வசிக்கும் பெண், அவனோ ஒரு போர் வீரனின் மகன். அத்தோடு தன்னை முழுமையாக கொற்றவை தேவிக்கு அர்ப்பணிக்க உள்ள நிலையில் இது சாத்தியமா, என்று ஒரு மனது அடித்துக் கொண்டது.


  தன் முகத்தை கோபமாக மாற்றிக் கொண்டு,


    "யாரைய்யா நீ? இங்கு மதுரா என்று யாரும் இல்லை. அனுமதி இன்றி இங்கு நுழைவது குற்றமாகும். முதலில் இந்த இடத்தை விட்டு செல்."


    அவளின் முக மாறுதலை அறியாதவனா அவன்? அவள் கண்களில் ஒரு நொடி தோன்றிய மகிழ்ச்சியே அவள் மனதில் உள்ள உண்மையை உரைத்தது, இன்னும் தன்னை மறவாமல் இருக்கும் அந்த உண்மையை வெளிப்படுத்தியது.


    "ஓஹோ...உனக்கு நான் யார் என்று தெரியாது அப்படித்தானே?"


  "ஆமாம் முதலில் இவ்விடத்தை விட்டு செல். என் அன்னை வரும் நேரம் ஆகிவிட்டது. அவர் கண்ணில் பட்டால் அவரின் கோபத்துக்கு ஆளாவாய்."


      "பிறகு எதற்காக நான் வரவில்லை என்று சற்று நேரத்துக்கு முன், இந்த குளத்தினில் தெரிந்த உன் பிம்பத்தை பார்த்து, புலம்பிக் கொண்டிருந்தாய் மதுரா?"


    " அது...நான் இங்கு ஏதோ புலம்பிக் கொண்டிருந்தேன், வேறு ஏதோ யோசனையில் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தேன். அதெல்லாம் உனக்கு எதற்கு? அத்துடன் நான் ஒன்றும் உனது மதுரா அல்ல புரிந்ததா? உன்னை செல் என்றால் செல். எதற்காக வீணாக என்னோடு விவாதம் செய்து கொண்டிருக்கிறாய், முன்பின் முகமறியா பெண்ணுடன் வீண் வாதம் புரிவதுதான் தங்களுக்கு வழக்கமா? இதுதான் உங்கள் முறையான செயலா?"


  "முகமறியாத பெண்ணா? யாரது...? நான் என் மனைவியுடன் அல்லவா பேசிக் கொண்டிருக்கிறேன்."


    "என்ன மனைவியா?"


    "ஆமாம் பின்பு குருகுலத்திற்கு செல்ல இருந்த என்னை, வேறு யாருடனாவது நான் பழகி விடுவேனோ என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து, என்னை இந்த கொற்றவை தேவியின் சிலை முன்பு இழுத்து வந்து, என் கைகளால் இந்த நீரை எடுத்து சாட்சியாக வைத்து, என் கைகளால் குங்குமத்தை வாங்கிக் கொண்டு, உன்னை திருமணம் செய்து கொள்ள வைத்தாய் தானே?"


    "என்ன உளறுகிறாய்? நான் எப்போது அப்படி எல்லாம் செய்தேன், நீதானே என்னை இழுத்துக் கொண்டு வந்து இவ்வாறெல்லாம் செய்தாய்"


  மித்ரன் தன் தலையை சாய்த்து அவளை குறு குறுவென்று பார்த்துக் கொண்டே, உதட்டினில் குறும்பு சிரிப்பு ஒன்றை உதிர்க்க, அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது. தனது வாயாலேயே இப்படி உளறிக் கொட்டி விட்டோமே என்று நினைத்து, திரு திருவென்று விழித்தாள்.


அவள் கோபமாக மித்ரனை பார்த்து முறைக்க, அவன் சிரித்துக் கொண்டே மதுராவை பார்த்து உரைத்தான்.


  "செய்தது அனைத்தும் நான் தான். ஆனால்  நமக்கு கந்தர்வ மணம் (திருமணம்) நடந்தது உண்மை."


      மதுராவிற்க்கு தலைசுற்றியது, அவன் என்ன கூறுகிறான்? எங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா?


  "தீரா என்ன இது விளையாட்டு?"


    "எனது பெயரை உனது இனிய குரலில் கேட்டு எவ்வளவு வருடங்கள் ஆகி விட்டது மதுரா. எனை மறந்தாயோ என் செல்ல மணவாட்டியே?"


  "போதும் தீரா நிறுத்து. எதற்காக இப்படி எல்லாம் கூறி கொண்டிருக்கிறாய் நீ? பிறப்பால் இந்த கொற்றவை தேவியால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான். இப்படி எல்லாம் அபத்தமாக கூறி எனக்கும் எமது குலத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தாதே தீரா, சென்றுவிடு இங்கிருந்து."


    "அபத்தமா எது அபத்தம்? நமக்கு  நடந்த திருமணத்தைப் பற்றி கூறுவது அபத்தமா உனக்கு? சரி அன்று நான் குருகுலம் செல்வதற்காக கிளம்பும்போது நீ என்ன செய்து என்னை அனுப்பி வைத்தாய் என்று ஞாபகம் இருக்கிறதா உனக்கு? உமது குலத்தில் மனைவி கணவரை எவ்வாறு வழி அனுப்பி வைப்பாரோ அதேபோன்று தான் எனக்கு மாலை அணிவித்து, திலகம் இட்டு அனுப்பி வைத்தாய் ஞாபகம் இருக்கின்றதா உனக்கு?"


    மதுராவிற்கு அன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தும், காட்சிகளாக கண்களில் உலா வரத் தொடங்கின. மனதிற்கு இதமாக இருந்தாலும் அறிவு இதனை தவறென்று உணர்த்தியது. விழிகளில் தழும்பிய நீரானது கரையை உடைக்க காத்துக் கிடக்க, கஷ்டப்பட்டு அதை கண்களுக்குள்ளேயே அடக்கியவள், மித்ரனை பார்த்து தெளிவாக பேச தொடங்கினாள்.


  "தீரா வீண் விவாதம் வேண்டாம் இத்தோடு இதை விட்டுவிடு. அன்னை வரும் நேரமாயிற்று இங்கிருந்து முதலில் வெளியே செல்."


  "ஓ...அப்படியா வரட்டும் எனது மாமியார், அவரிடமே நானே நியாயம் கேட்கிறேன். இவ்வளவு வருடங்கள் கழித்து ஆசையாக மனைவியை காண வந்தால், என்னை வெளியே போ என்று துரத்தி அடிக்கிறாள். இதுதான் தாங்கள் பெண்ணை வளர்த்த முறையா என்று, அவரிடம் நானே கேட்கிறேன்."

 

  குகைக்கு வெளியே செம்பாவின் பிளிறள் சத்தத்தோடு ஏந்திழை அம்மையாரின் குரலும் கேட்டது. மதுரா மித்ரனை நோக்கி கைகூப்பி கெஞ்சினாள்.


    "தீரா நான் சொல்வதை கேளேன். தயவு செய்து இங்கிருந்து சென்று விடு. அன்னை உன்னை கண்டால் என் மீது கோபம் கொள்வார். வீண் பிரச்சனைகள் ஏற்படும். அவர் வருவதற்குள் இங்கிருந்து சென்று விடு."


  "நான் இங்கிருந்து நிச்சயம் செல்ல வேண்டுமா?"


   "ஆமாம் ஆமாம் தாமதிக்காமல் உடனே செல்."


  "சரி சரி உனது கொஞ்சல் மொழிகள் இல்லை என்றாலும், இந்த நீல நயனங்களின் கெஞ்சல் மொழிக்காக செல்கிறேன். ஆனால் அதற்கு முன் நீ ஒன்று செய்ய வேண்டுமே?"


  "என்ன செய்ய வேண்டும் தீரா? சீக்கிரம் சொல், அன்னையின் குரல் குகை வாசலில் கேட்கின்றது."


  "எங்கே சிரித்துக் கொண்டே என்னை பார்த்து, சென்று வாருங்கள் பிராண நாதா என்று கூறு பார்க்கலாம்."

No comments:

Post a Comment