அத்தியாயம் 57
"தாயே என்ன கூறுகிறீர்கள்? எனது மகனுக்கு திருமணம் முடிந்து விட்டதா?"
ஏந்திழை அம்மையார் மித்ரனை பார்த்துவிட்டு, மகாராணியாரை நோக்கி ஆம் என்று தலை அசைத்தார்.
மித்ரனது திருமணம் யாருடன் நடந்திருக்கும்? ஒருவேளை மோகனாவுடனா? ஐயோ அப்படி என்றால் இனி இந்த ராஜ்யத்தின் நிலைமை என்னவாகும்?
"உன் மனதின் குழப்பம் உன் முகத்திலேயே தெரிகிறது. நான் ஒன்று மட்டும் கூறுகிறேன், உன் குழப்பத்தை நீக்குவதற்காக, உன் குலமகள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல. ஏன் அரசு குடும்பத்தில் இருந்து தான் உனக்கு மருமகள் வர வேண்டும் என்று நினைக்கின்றாயா? அல்லது உறவுக்குள்ளே மருமகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றாயா?"
"அப்படி எல்லாம் இல்லை தாயே எனக்கு உறவுகளை விட, இந்நாட்டு மக்களின் பாதுகாப்பே முக்கியம். ஒரு மகாராணியாக இதுவே எனது கடமையுமாகும். இதனால் ராஜ்யத்தில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு விடுமோ என்றுதான் அஞ்சுகிறேன்."
"என் அருள் பெற்ற திருமகளை தான், உன் குடும்பத்திற்கு, குலமகளாக அனுப்பியுள்ளேன். நான் உன்னிடம் இதை கூறுவதற்கும் காரணம் உள்ளது மகளே, விரைவில் இந்த மகிழபுரி கெட்ட சக்திகளின் பிடியில் அகப்பட போகின்றது. அன்று என்னால் கூட உதவ முடியாத சூழ்நிலை வரும்."
"தாயே, தங்களை விட்டால் எங்களுக்கு வேறு கதி ஏது? தாங்களே இவ்வாறு கூறலாமா?"
"விதி பயனை அனுபவித்து தானே ஆக வேண்டும். அப்போது நீ அவளுக்கு துணையாக நிற்க வேண்டும். அதற்காகவே உன்னிடம் இது பற்றி கூறிக் கொண்டிருக்கிறேன்.
பயம் கொள்ளாதே மகளே, உன் மருமகள் தான் இந்த ராஜ்ய மக்களின் வாழ்வை காப்பாற்றப் போகின்றாள். நீ கூறிய அந்த கெட்ட சக்திகளிடம் இருந்து, இந்த ராஜ்யத்தையும் உன் மகனையும் காப்பாற்றுவது அவள் பொறுப்பு."
ஏந்திழை அம்மையார் தன் கண்களை மூடி சில மந்திரங்களை கூறினார். அவர் உடல் அதிர்வடைய, தன் மூடிய வலது கையை மகாராணி முன்பு நீட்டி விரித்தார்.
அவர் கைகளில் இரண்டு நீல கற்கள் இருந்தது.
"மகளே இந்த இரு கற்களையும் பொன்னால் ஆன காப்பில் பதித்து, அரண்மனையில் உள்ள பூஜை அறையில் வைத்து, தினமும் இதற்கு பூஜை செய்து வா.
இந்நாட்டில் கெட்ட சக்திகளின் கை ஓங்கும் போது, உன் குலமகளின் கைகளில் இதை சேர்ப்பிக்க வேண்டியது உனது பொறுப்பு."
மகாராணியார் தன் கைகளால் அந்த கற்களை எடுத்தவுடன், ஏந்திழை அம்மையார் அப்படியே மயங்கிச் சரிந்தார்.
ஒரு சில சமயம் ஏந்திழை அம்மையார் குறி சொல்லும் போது அருள் அதிகமாகி, இவ்வாறு மயங்கி விழுவதுண்டு. நாலைந்து பெண்கள் வந்து அவர் கீழே விழாமல் தாங்கிக் கொண்டனர்.
குறி சொல்லும் போது ஏந்திழை அம்மையார், தனித்தனியாக குறி கேட்பவருக்கு மட்டும் கேட்குமாறு தான் குறி சொல்லுவார். அதனால் மகாராணிக்கு அவர் கொடுத்த கற்களை பற்றியும், அவரிடம் பேசிய விஷயங்கள் பற்றியும், யாருக்கும் தெரியவில்லை.
மகாராணியார் யாரும் அறியா வண்ணம், அந்த கற்களை தன்னுடன் மறைத்து வைத்துக் கொண்டார்.
அரசு குடும்பத்தார் அரண்மனையை நோக்கி புறப்பட, ஏந்திழை அம்மையாரை மலைவாழ் மக்கள் அவரின் குடிலுக்கு தூக்கிச் சென்றனர்.
மித்ரன் தான் மதுராவை பார்க்க முடியாத காரணத்தால், காட்டினையே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே, குதிரையில் சென்று கொண்டிருந்தான்.
"ஒருவன் வானத்தையே வெறித்த பார்வை பார்த்து கொண்டு வருகிறான். இன்னொருவனோ திரும்பித் திரும்பி காட்டினைப் பார்த்து கொண்டே வருகிறான். என்ன தானடா ஆயிற்று உங்களுக்கு? மித்ரா அவன் தான் காதல் பற்றிய சோகத்தில் இருக்கிறான் என்றால், உனக்கு என்ன ஆயிற்று? எதற்காக காட்டையை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு வருகின்றாய்."
"பிரதீபா அது கொற்றவை தேவி இன்னும் என் கண்களிலேயே உள்ளார். அதுதான் அவரை இனி எப்போது காண்பேனோ என்று எண்ணியவாரே, திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே வருகிறேன். ஆமாம் ரகுநந்தா, உனக்கென்ன காதல் பற்றிய கவலை?"
"அதை என்னிடம் கேள் மித்ரா, இந்த வீர புருஷருக்கு ஒரு பெண்ணிடம் சென்று தைரியமாக பேசக்கூட துணிவில்லை. இன்று ரஞ்சனி அணிந்திருந்த ஆபரணங்களும் உடைகளும் இவன் ஆசை ஆசையாக சிறுவயதில் வாங்கி கொடுத்ததாம்."
"அப்படியா! அதற்கு சந்தோசம் தானே பட வேண்டும்."
"முழுதாக கேளடா, இவனும் அந்த சந்தோஷத்தில் தான், அவளிடம் பேச்சு கொடுக்க அருகில் நெருங்கி இருக்கிறான். மோகனாவை பார்த்து விட்டு, அப்படியே ரஞ்சனியை பார்த்தும் பார்க்காதது போல் வேறு திசையில் திரும்பி விட்டான்."
"உனக்கு ஏனடா மோகனாவைக் கண்டு இவ்வளவு பயம்? அவள் இருந்தால் என்ன? நீ போய் உன் அத்தை மகளிடம் பேச வேண்டியது தானே?"
"முதலிலேயே உன் தங்கைக்கு என்னை கண்டாலே ஆகாது. அதனாலேயே ரஞ்சனியும் என்னுடன் பேச வருவதில்லை. அதுவும் இன்று நடந்த நிகழ்வில் அவளிடம் நெருங்கவே பயமாக உள்ளது."
"என்ன கூறுகிறாய்? என்ன நிகழ்வு?"
மித்ரன் திரும்பி ரகுநந்தனை முறைக்க,
"அது வேறொன்றுமில்லை அது...வந்து...உன் தங்கைக்கு ஏற்கெனவே என்னை கண்டால் ஆகாது, இன்று வேறு ஏதோ உடல் உபாதை காரணமாக முகத்தை விரைப்பாகவே வைத்துக் கொண்டு சுற்றுகிறாள். இந்த நேரத்தில் அவளிடம் சென்று பேசி நான் வாங்கி கொட்டிக் கொள்ள வேண்டுமா? அதனால் தான் திரும்பி வந்து விட்டேன்.”
"உன் அத்தை மகளிடம் பேசவே உனக்கு துணிவில்லை? ஆனால் எங்களிடம் மட்டும் வண்டி வண்டியாக பேசு."
"என்ன செய்வது பிரதீபா எல்லோருக்கும் உன்னை போலவே அத்தை மகள் அமைவாளா? என்ன ஒரு வெட்கம்! மித்ரா கண்டாயா உன் தங்கை பிரதீபனைக் கண்டு நானிக் கொண்டு நின்றதை?"
"அடேய் உதை வாங்கப் போகின்றாய் அவள் குழந்தையடா."
"இப்படியே கூறிக் கொண்டிரு, ஒரு நாள் அந்த குழந்தைக்கு தான் உன்னை திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள்!"
பிரதீபனும் ரகுநந்தனும் கைகலப்பில் இறங்க, மித்ரன் பேசி அவர்களை பிரித்து விட்டு, அவர்களை அடக்கி, அரண்மனைக்கு கூட்டி சென்றான்.
மித்ரன் அரண்மனைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக அரசரிடம் அனுமதி பெற்று, கோட்டை காவல் மற்றும் படைப்பிரிவுகளின் மேற்பார்வை போன்ற அனைத்து பொறுப்பையும் அவன் ஏற்றுக் கொண்டான்.
கோட்டை பாதுகாப்புக்கு பிரதீபனையும், படைத்தலைவனாக ரகுநந்தனையும் நியமித்தான்.
இனி புதிதாக ராஜ்ஜியத்தில் நுழைவோரையும் ஏற்கனவே வெளி ராஜ்ஜியத்தில் இருந்து வந்து இங்கு தங்கி உள்ளோரையும், முறையான அனுமதியை பெற்றுள்ளனரா? என்று கண்காணிக்க ஆட்களை நியமித்தான்.
ஒரு வழியாக கோட்டையை அவனுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகுதான், மதுராவை இன்றாவது காண வேண்டும் என்று ஏரி கரையை நோக்கி பயணத்தை தொடங்கி இருக்கிறான்.
No comments:
Post a Comment