Search This Blog

Followers

Powered By Blogger

Wednesday, July 9, 2025

மன்னவரே 56


 

            அத்தியாயம் 56


  மோகனாவின் இந்த ரூபத்தைக் கண்டு நண்பர்கள் இருவரும் அதிர்ந்து நின்றனர். ரகுநந்தன் ஏதோ பேச வாய் எடுக்க, அவனது வாயை பொத்தி இழுத்துக் கொண்டு மறைவினில் ஒதுங்கிக் நின்றான் மித்ரன்.


  மோகனாவிற்கும் சற்றுமுன் நடந்த சம்பவங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக மித்ரனுக்கு தோன்றியது. அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டுமானால் சற்று காலம் அவள் அறியாமல், அவளை பின்தொடர்ந்து தான் ஆக வேண்டும் என்று முடிவெடுத்தான்.


  குடிலினுள் மதுரா நல்ல உறக்கத்தில் இருந்ததால், வெளியே நடந்த நிகழ்வுகள் எதுவுமே அவளுக்கு தெரியவில்லை.


அந்த யானையைக் கண்டு ஒரு ஏளன சிரிப்பு ஒன்றை உதிர்த்த மோகனா,


  "முட்டாள் யானையே, இனி ஒரு முறை என்னை எதிர்க்கத் துணிந்தால், உன் உயிரை இழப்பாய். இந்த மோகனாவை கண்டு பிளிறிக் கொண்டா வருகிறாய், ஜாக்கிரதை."


  தூரத்தில் ரஞ்சனி இவளின் பெயரைக் கூறி, தேடி கொண்டிருப்பதை கண்டு அவளை நோக்கிச் சென்றாள்.


  "மித்ரா இவள் ஏரிக்கரை பிசாசு அல்லடா, கொள்ளிவாய் பிசாசு. சிறிது நேரத்திலேயே அவ்வளவு பெரிய யானையை மந்திரம் கூறி சாய்த்து விட்டாளே!."


    மித்ரன் அந்த யானையை நோக்கி சென்றான், குருகுலத்தில் கற்ற மருத்துவ பயிற்சியை வைத்து அதன் கண்களை திறந்து சோதித்தான்.


  அங்கு நின்று கொண்டிருந்த ரகுநந்தனிடம் சில பச்சிலைகளின் பெயரைக் கூறி, பறித்து வருமாறு கூறினான்.


அவன் எடுத்து வந்ததும் அதன் சாறினை பிழிந்து தும்பிக்கையில் சிறிது விட்டு விட்டு, அதன் வாயில் பிழிந்து விட்டான்.


      தன்னுடன் என்றுமே இருக்கும் கொற்றவை தேவியின் பிரசாதத்தை எடுத்து, அந்த யானைக்கு வைத்து விட்டான்.


    அதன் பிறகு தான் செம்பா சிறிது சிறிதாக கண்களைத் திறந்தது. தன்னைக் காப்பாற்றிய மித்ரனின் கைகளை தன் தும்பிக்கையால் இறுக்கமாக பிடித்துக் கொண்டது.


      "பயந்து விட்டாயா நண்பா? ஒன்றுமில்லை சிறிது நேரம் ஓய்வெடுத்தால், உன் உடல் வலியும் சரியாகிவிடும்…"


  "மித்ரா நாம் உடனே மோகனாவை பற்றி அரசரிடம் சென்று கூறியாக வேண்டும். அவள் அரண்மனையில் இருந்தால் மற்றவர்களுக்கு தான் ஆபத்து."


    "பொறு நந்தா ஆதாரம் இல்லாமல் அவளைப் பற்றி எவ்வாறு நாம் அரசரிடம் சென்று முறையிடுவது? முதலில் அவள் எதற்காக இப்படி நடந்து கொண்டால்? ஏன் இப்படி இருக்கிறாள்? என்று கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு என்னவோ இன்று நடந்த சம்பவங்களுக்கும் அவளுக்கும் கூட ஏதோ சம்பந்தம் இருக்கும் என்று தோன்றுகிறது."


  "அப்படியும் இருக்குமோ அய்யய்யோ எனது ரஞ்சனி எந்நேரமும் அவளுடன் தானே சுற்றிக் கொண்டிருக்கிறாள்.


  அவளையும் ஒருவேளை இதே போன்று மாற்றி விடுவாளோ? உன் அத்தை மகள் ஏனடா இவ்வாறு நடந்து கொள்கிறாள்? தயவுசெய்து இனி என் அத்தை மகளுடன் அவள் சேர்ந்து சுற்றுவதை நிறுத்தச் சொல்லேன்."


  "நான் போய் கேட்டு வரவா? அறிவு கெட்டவனே ரஞ்சனியும் எனக்கு அத்தை மகள் தானே, முதலில் இதில் அவள் பங்கு என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும். சரி வா கோயிலை நோக்கி செல்லலாம், பிறகு இதைப் பற்றி பேசிக்கொள்ளலாம். ஆனால் இந்த விஷயம் எதுவும் பிரதீபனுக்கு தெரிய வேண்டாம். ஆதாரத்தை சேகரித்து விட்ட பிறகு அவனிடம் கூறிக் கொள்ளலாம்."


  அவர்கள் கோயிலை நெருங்கும் போது பூஜைகள் முடிந்து குறி செல்லும் நிகழ்ச்சி ஆரம்பமாகி இருந்தது. குங்குமம் மற்றும் சந்தனத்தால் வரைந்த சக்கரங்களின் நடுவில், மஞ்சள் பூசிய முகமும் நெற்றி நிறைய பொட்டுமாக அருள் வந்து அமர்ந்திருந்தார் ஏந்திழை அம்மையார்.


  மோகனா தனக்கு ஏதோ உடல் உபாதை என்று கூறி ரஞ்சனையுடன் கிளம்பி விட்டாளாம், அவளின் தாயார் மகாராணியாரிடம் கூறிக் கொண்டிருந்தார்.


  மகாராணிக்கும் அவள் இவ்விடத்தை விட்டு சென்றது நிம்மதியாகத்தான் இருந்தது. எப்படியும் கோயிலுக்கு அவள் சரியான நேரத்திற்கு வர மாட்டாள் என்று நினைத்திருந்தார். அதுபோலத்தான் நடந்தது. ஆனால் இங்கு நடந்த பிரச்சனைகளால் பூஜை சற்று தாமதமாக நடந்தது, அதனால் குறி சொல்லும் நிகழ்ச்சியும் ஆரம்பம் ஆவதற்கு சற்று தாமதமானது


  எங்கே அவளின் முன்னே மித்திரனின் திருமணத்தைப் பற்றி குறி கேட்க வேண்டி வருமோ என்று வருத்தப்பட்டார். ஆனால் அவள் சென்றது ஒரு விதமான நிம்மதியான உணர்வை ஏற்படுத்தியது.


  முதலில் அரசர் சென்று ஏந்திழை அம்மையாரை வணங்கி விட்டு, ராஜ்யத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்.


    "உன் எதிரியை அருகிலேயே வைத்துக்கொண்டு என்னிடம் வந்து கேட்கின்றாயே? ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். நாட்டில் உள்ள மக்கள் மட்டுமல்ல, இந்த காட்டில் வாழும் மக்கள் அனைவருமே என் பிள்ளைகள் தான். அவர்களுக்கு என்றுமே உன்னால் தீங்கு ஏற்படக்கூடாது புரிந்ததா?"


"புரிந்தது தாயே, எதிரிகளின் சூழ்ச்சியை பற்றி அறியாமல், இவர்கள்தான் அவ்வாறு செய்தார்கள் என்று எண்ணி விட்டேன். என்னை மன்னித்தருளுங்கள் தாயே. இனி ஒரு போதும் தீர விசாரிக்காமல் இதுபோன்று தவறான முடிவை எடுக்க மாட்டேன்."


    "உமது ராஜ்யத்தில் எதிரிகளோடு மாந்திரீகர்களும் கலந்துள்ளனர். அவர்களை உடனடியாக கண்டறிந்து வெளியேற்றவில்லை என்றால் ராஜ்யத்தை ஆபத்து சூழும்.


    உறவு என்று எண்ணாமல் எதிரியாய் பார்த்தால் இந்த ராஜ்யத்தில் அமைதி நிலவும். இல்லை என்றால்..."


       "தாயே?"


    "கலங்க வேண்டாம் மன்னா இனிவரும் பிரச்சனைகளை எல்லாம்  உன் மகன் பார்த்துக்கொள்வான். நீ நாட்டு மக்களுக்கு தீங்கு விளைவிப்போரை உறவாக எண்ணாமல் எதிரியாக மட்டும் பார்ப்பாயாக."


    அரசரின் சகோதரிகள் ஒவ்வொருவராக வந்து தங்கள் பிள்ளைகளின் திருமணம் பற்றி கேட்க, காலத்தின் தீர்ப்புப்படி நடக்கும் என்று அனைவருக்கும் ஒன்று போலவே கூறினார்.


    அடுத்ததாக மகாராணியார் சென்று ஏந்திழை அம்மையாரின் முன்பு வணங்கி நின்றார்.


    "தாயே சில நாட்களாகவே என் மனதில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. என் மகனை ஒரு கெட்ட சக்தி நெருங்கி வருவது போலவே தோன்றுகிறது. அவனின் திருமணம் பற்றி கேட்க விளைகிறேன்.


    அது நல்லபடியாக அவன் மனம் போல் முடிந்திடுமா? அந்த திருமணத்தால் இந்நாட்டு பிரஜைகளுக்கு எந்த ஆபத்தும் நெருங்காதே?"


    தனது உதட்டினில் புன்னகையை படரவிட்ட ஏந்திழை அம்மையார், மகாராணியை நோக்கி சற்று குனிந்து மெதுவாக பேசத் தொடங்கினார்.


  "ஏற்கனவே திருமணம் ஆன உன் பிள்ளைக்கு மறுமணம் செய்து வைப்பதற்காக கேட்கின்றாயா? அல்லது நடந்த திருமணத்தால் ஏற்பட போகும் விளைவுகளை பற்றி கேட்கிறாயா?"


    மகாராணியார் அதிர்ச்சியுடன் தனது மகனை பார்த்துவிட்டு ஏந்திழை அம்மையாரை நோக்கி வினவினார்,


  "தாயே என்ன கூறுகிறீர்கள்? என் மகனுக்கு திருமணம் முடித்து விட்டதா?"

No comments:

Post a Comment