Search This Blog

Followers

Powered By Blogger

Tuesday, July 8, 2025

மன்னவரே 55


 

              அத்தியாயம் 55


மகாராணியார் தமது மகனுக்கு ஆரத்தி எடுத்து அன்புடன் வரவேற்றார். பல வருடங்கள் கழித்து காணும் தன் மகனை உச்சி முகர்ந்து ஆனந்தம் கொண்டார்.


  மித்ரன் அங்கங்கு சிதறி கிடக்கும் பொருட்களை பார்த்து என்ன நடந்தது என்று அவன் அன்னையிடம் வினவ, அவர் கூறியதை கேட்டு அதிர்ந்தனர் நண்பர்கள் மூவரும். 


    மித்ரனுக்கு குழப்பமாக இருந்தது எதற்காக இரண்டு இடங்களிலும் தமது குடும்பம் தாக்கப்பட வேண்டும்? என்று யோசிக்க தொடங்கினான். தமது ராஜ்ஜியத்தில் படைகளுக்கு இடையே  உள்ள புல்லுருவிகளை முதலில் களைய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.


  ரஞ்சனியும் மோகனாவும் பல்லக்கில் வந்து இறங்கினார். மோகனாவின் முகம் சிவந்திருந்தது. அவளால் என்றுமே கொற்றவைக் கோயிலை பிரச்சினையின்றி நெருங்க முடிந்ததில்லை.


  காட்டினுள்ளிருந்து எந்த செய்தியும் வராமல் இருக்கும்போதே அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவள் வந்து இறங்கும்போது மித்திரனை கண்டதால் இரண்டு திட்டங்களுமே தோல்வியை தழுவியதால்  அவளுக்கு அதிக கோபம் தோன்றியது.


  அதைவிட கொற்றவை தேவி கோயிலை நெருங்கும் போது அவள் உடலில் ஏற்படும் அதிர்வினால் உடலானது கொதிக்க ஆரம்பித்தது.


    இந்த வெப்பமானது அவளது மேனியை சுட்டு, நெருப்பில் இட்டது போல் துடிக்க வைத்தது. அதை தவிர்ப்பதற்காகவே இவள் அந்த மாந்திரீக மையை உபயோகித்துக் கொண்டிருக்கிறாள். கொற்றவை தேவியின் பிரசாதங்களை கூட இந்த காரணத்தால் தான் அவள் தவிர்த்து வருகிறாள்.


  மோகனாவை கண்டவுடன் மகாராணியாரின் முகம் சட்டென சுருங்கியது, அதை மித்திரனும் கவனித்தான்.


    மோகனா மித்ரனை நெருங்கும் முன்பே, மித்ரனை அழைத்துக் கொண்டு கொற்றவை தேவி கோவிலினுள் மகாராணியார் நுழைந்தார்.


      மோகனாவிற்கு தன் உடல் எரிச்சலை விட, தாரகை தேவி தன்னை கண்டவுடன் மித்திரனை அழைத்துக் கொண்டு கொற்றவை தேவி கோயிலுக்குள் நுழைந்தது ஒருவித எரிச்சலை ஏற்படுத்தியது.


  முதலில் இந்த கிழவிக்கு ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் என் அத்தானுடன் நான் சேர்ந்து வாழ இவள் ஒரு காலமும் விடமாட்டாள்.


      அவளின் மனக்கோபம் முகத்தில் தெரிய, அவளது முகம் விகாரமாக தோன்றியது. ரஞ்சனி அவளது கைகளை பற்றிய பிறகுதான் சுய உணர்வுக்கு வந்தவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.


  கோயிலினுள் நுழைந்த பிறகு தான், மதுரவாணியும் ஏந்திழை அம்மையாரும் அங்கு இல்லை என்பதை கவனித்து, தமது மகளிடம் வினவினார்.

 

    மதுராவின் பெயரை கேட்டதுமே மித்ரனுக்கு ஒரு பக்கம் சந்தோஷமும் ஒரு பக்கம் பயமும் தோன்றியது. தனது கண்களால் சுற்றி உள்ளவர்களை ஆராய்ந்தான்.


    நல்ல வேலையாக அவள் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, அவர் யாரைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று தன் அன்னையிடம் வினவினான்.


  தாரகை தேவியும் தாக்க வந்த படை வீரர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிய அந்த பெண்ணை பற்றி கூறினார்.


  மித்ரனுக்கு இப்போதே தனது மதுராவை சென்று காண வேண்டும் போல் இதயம் துடித்தது. அதே நேரம் வெளியே அரசர் வரும் அறிவிப்பு கேட்டது.


  அப்போதுதான் மித்ரன் நினைவு வந்தவனாக அரசரைக் காண வேகமாக வெளியே சென்றான்.


  கோபமாக உள்ளே நுழைய இருந்த அரசரைத் தடுத்து, இங்கு நடந்தவைகளையும், தான் யூகித்த விசயங்களையும் பற்றி அவரிடம் எடுத்துரைத்தான்.


    மோகனாவும் அங்குதான் நின்று மித்ரன் கூறியதை கேட்டுக் கொண்டிருந்தாள். தமது படைவீரர்களின் அறிவாற்றலை எண்ணி மனம் குமுறினாள். தமது திட்டத்தை சரியாக செயல்படுத்தாத தன் தந்தையையும் சிற்றப்பாவையும் எண்ணி கோபமுற்றாள்.


  ஏந்திழை அம்மையார் வருவதைக் கண்டு, மோகனா தன் அன்னையுடன் ஒதுங்கி நின்று விட்டாள்.


   அரசருடன் சேர்ந்து அரசு குடும்பத்தினர் அனைவரும் கோவிலினுள் செல்ல மோகனா வேண்டா வெறுப்பாக நுழைந்தால். 


  உள்ளே நுழைந்த மோகனாவினால் அங்கே இருக்க முடியவில்லை. யாரும் அறியா வண்ணம் கோயில் மண்டபத்தில் இருந்து வெளியேறினாள்.


கோயிலை விட்டு சற்று தூரம் வந்த பிறகுதான் அவளால் மூச்சையே நன்றாக விட முடிந்தது.


  மோகனாவைப் போலவே இன்னொரு ஜீவனும் கோயிலில் இருந்து வெளியேற தவித்துக் கொண்டிருந்து, அது நம் மித்ரன்தான். சரியான நேரம் பார்த்து அங்கிருந்து வெளியே வந்து, மலைவாழ் மக்கள் குடியிருக்கும் குடிலை நோக்கி சென்றான்.


  குடில்களுக்கு அருகே வந்த மித்ரனுக்கு, மதுராவின் வீடு எங்குள்ளது என்று தெரியவில்லை.


    அங்கு ஒரு குடிலின் முன்பு படுத்திருந்த செம்பாவை கண்டு, மனதில் ஏதோ ஒரு உந்துதல் தோன்ற, அதனை நோக்கி செல்ல நினைக்கையில் அவன் தோள் மீது ஒரு கரம் படிந்தது.


  அதிர்ந்து திரும்பிய மித்ரனின் முன்னால் ரகுநந்தன் நின்று கொண்டிருந்தான்.


  "பெரு மதிப்புக்குரிய இளவரசர் அவர்களே, எங்கே இவ்வளவு அவசரமாக செல்கிறீர்கள் என்று அடியேன் தெரிந்து கொள்ளலாமா?"


  "ம்ம்ம், ஏரிக்கரை பிசாசை பார்க்க செல்கிறேன். துணைக்கு வருகின்றாயா?"


        "அடடா என்ன இளவரசே இது? ஆயிரம் தான் இருந்தாலும் தங்களின் அத்தை மகளை பிசாசு என்று கூறலாமா? அதுவும் மகிழபுரியின் எதிர்கால மகாராணியாரை பற்றி  தாங்கள் இப்படி ஒரு வார்த்தை கூறலாமா?"


  "என்னடா உளறிக் கொண்டிருக்கின்றாய், நீ யாரைப் பற்றி  கூற வருகிறாய்? சிறிது காற்று வாங்கலாம் என்று இங்கு வந்தேன், அது ஒரு குற்றமா?


    உடனே வால் பிடித்தது போல் பின்னாலேயே வந்து விட்டாயா? குருகுலத்தில் தான் உனது தொல்லை தாங்க முடியவில்லை என்றால், அரண்மனைக்கு திரும்பிய பிறகும் கூட ஏனடா என்னை படுத்தி எடுக்கின்றாய்?"


  "அடடா இளவரசர் இப்படி எல்லாம் பேசலாமா? நான் தங்களின் உயிர் நண்பன் மட்டும் அல்ல, மகாராணியார் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட தங்களின் மெய் காப்பாளனும் கூட, உங்களை விட்டு அணு அளவும் பிரிய மாட்டேன்.

 

    தாங்கள் தேடி வந்த காற்று அதோ அந்த யானை படுத்திருக்கும் குடிலுக்கு பக்கத்து குடிலில் தான் நின்று கொண்டிருக்கிறது. நான் வேண்டும் என்றால் இங்கேயே நிற்கிறேன், தாங்கள் சென்று சிறிது காற்றுடன் அளவளாவி வாருங்கள். ஆனால் ஜாக்கிரதை இளவரசே, அது பார்ப்பதற்கு தான் தென்றல், ஆனால் நிஜத்தில் அது சூறாவளி. தங்களையும் அதனோடு சேர்த்து இழுத்துக் கொண்டு சென்று விடும்."


    என்ன இவன் உளறிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே திரும்பிய மித்ரனின் கண்களில் மோகனாபட்டாள்.


    கெட்ட சக்திகளை மனிதர்களை விட விலங்குகளும் பறவைகளும் நன்கு உணர்ந்து கொள்ளும் தன்மையை பெற்றுள்ளது.


    மோகனாவை கண்டவுடன் செம்பா பிளிற தொடங்கினான். ஏற்கனவே உடல் எரிச்சலால் அவதிப்பட்டு கொண்டிருப்பவள், யானையின் பிளிறலை கண்டு கோபம் கொண்டு, தன் மடியில் வைத்துள்ள மூலிகை பொடியை எடுத்து சில மந்திரங்கள் கூறி அதனை நோக்கி வீசினால். அடுத்த நொடியே செம்பா மூர்ச்சையாகி மண்ணில் விழுந்தது.

No comments:

Post a Comment