அத்தியாயம் 53
மகிழபுரியில் உள்ள கொற்றவை என்னும் பெண் சக்தியை எதிர்க்க காலக்கோடனால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் தான் மோகனா.
காலக்கோடனுக்கான பௌர்ணமி பூஜையை அவனை வணங்கும் மக்களால், கொற்றவை தேவியின் திருவிழாவிற்கு முன்பு வரும் பௌர்ணமியில் நடத்தப்பட்டு வருகிறது. மோகனா இதுவரை எட்டு பூஜைகளில் முழுமையாக பங்கேற்று உள்ளாள்.
முதன் முதலில் அந்த பூஜையை காணும் போது சற்று மிரண்டு தான் போனாள். ரத்த குவியல்களுக்கு நடுவே கருப்பு உடையுடன் இருந்த குரு பாலர்கள் மந்திரம் கூறிட, அந்த மந்திரங்கள் மூளைக்குள் புகுந்து ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தியது.
அவளது 16 வது வயதில் காலக்கோடனின் உத்தரவுப்படி மோகனா தேர்ந்தெடுக்கப்பட்டதால், அதன் பிறகு வந்த வேள்விகளை அவளே தலைமை ஏற்று நடத்தினாள்.
பார்த்திபேந்திரன் தனது மூத்த தங்கை மேனகாவிற்கு தான் வாழ்க்கை இப்படி அமைந்து விட்டது. அவளின் மகளான மோகனாவிற்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
தனது மகன் மித்ரனுக்கே மோகனாவை திருமணம் செய்து வைத்து, அவளை இந்த நாட்டின் வருங்கால மகாராணியாக்க ஆசை கொண்டார். அவர் இது பற்றி தன் மனைவியான தாரகை தேவியிடம் பகிர்ந்து கொண்டார்.
"பிரபோ, திருமணம் என்பது இரு மனங்களும் விரும்பி இணைய வேண்டியது. அவர்கள் இருவருக்கும் பிடித்திருந்தால், அவர்களுக்கு குறிப்பிட்ட வயது வந்த பிறகு, நாம் இதைப் பற்றி பேசலாம். நாமாகவே இதைப்பற்றி பேசி அவர்கள் மனதில் ஆசையை தோற்றுவிக்க வேண்டாம். அந்த கொற்றவை தேவியின் அருள் இருந்தால், தங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்."
மன்னருக்கும் இதுவே சரி என்று பட, தனது மனதில் தோன்றிய எண்ணத்தை, அதன் பிறகு யாருக்கும் வெளிபடுத்தவில்லை.
தாரகை தேவிக்கு தான் கடந்த சில நாட்களாகவே மோகனாவின் நடவெடிக்கைகள் குறித்து மனதில் குழப்பங்கள் எழுந்து கொண்டிருந்தது.
கொற்றவை தேவியின் கோயிலுக்கு செல்வதையே அவள் அடியோடு விட்டுவிட்டால். அத்தோடு தேவியின் பிரசாதங்களையும் ஏற்பதில்லை.
ஒருமுறை அவளின் அறைக்குள் தாரகை சென்றபோது, ஒருவகையான கருப்பு மையை கண்டார். அது மாந்திரீகர்கள் உபயோகிக்கும் மை. அதை இவள் அறையில் கண்டபோது அதிர்ந்து தான் போனார். சில நாட்களாக அவளின் நடவடிக்கைகளிலும் சில மாற்றங்களை கண்டதால், அவளை கண்காணிக்க ஆரம்பித்தார்.
மகிழபுரி ராஜ்யத்தில் விஜய பூபதியின் நடமாட்டம் இருப்பதாக அரசர் ஒருமுறை கூறியிருந்தார். நம் நாட்டில் உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி அவன் நிச்சயம் நடமாட முடியாது, ராஜ்ஜியத்தில் ஏதோ குழப்பம் சூழ்ந்துள்ளதாக அரசர் கூறிக் கொண்டிருந்தார்.
ஏனோ இந்த விஷயத்தில் மோகனாவின் பங்கு இருக்குமோ என்று தாரகை தேவிக்கு சந்தேகம் எழுந்தது. இந்த கருப்பு மையை கூட ஒரு சமயம் விஜய பூபதி திருமணம் ஆன புதிதில் மேனகாவுடன் இங்கு அரண்மனைக்கு வந்தபோது அவர் உபயோகித்ததை கண்டிருக்கிறார்.
அரசரின் மனதில் மித்ரனுக்கு மோகனாவை திருமணம் செய்து வைக்கும் எண்ணம் இருந்ததை வெளிப்படுத்திய போது, இவருக்கு வருங்காலத்தை எண்ணி அச்சமாகத்தான் இருந்தது.
அரசரிடம் இது பற்றி விரிவாக கூறவும் அவருக்கு மனம் வரவில்லை அதனால் அரசாங்க ஜோதிடரை அழைத்து மோகனாவின் ஜாதகத்தை காண்பித்தால் ஏதாவது வழி பிறக்கும் என்று எண்ணினார் ஆனால் அவர் எண்ணியதற்கு மாறாக தான் ஜோதிடர் கூறினார்
இது அசுர ஜாதகம் என்றும் இந்த ஜாதகக்காரரால் பல உயிர்கள் அநியாயமாக போகும் என்றும், ஜோதிடர் கூறியதை கேட்டு, மகாராணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
அதற்குள் இளவரசர் குருகுலத்தில் பயிற்சி முடிந்து நாடு திரும்பும் நாளும் வந்தது. மனக் குழப்பத்திலிருந்து தாரகை தேவி தமக்கு வழி கிடைக்க வேண்டும் என்று கொற்றவை தேவியை வேண்டி, இளவரசருக்காக விசேஷ பூஜை நடத்தினார். அது மட்டுமல்லாது ஏந்திழை அம்மையாரிடம் இது பற்றி குறி கேட்பதற்காகவும் இங்கு வந்திருந்தார்.
இப்படி வந்த இடத்தில் நாட்டு மக்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் இடையே, சண்டை மூழும் என்று அவர் எண்ணவே இல்லை.
தனது மகளுடனும் நாத்தனார்களுடனும், காட்டினுள் இந்த சண்டைக்கு இடையே மாட்டிக் கொண்டார்.
அதைவிட அவர்களை பாதுகாக்க வேண்டிய படை வீரர்களே, இவர்களைக் கொல்ல ஆயுதங்களை ஏந்தி அருகில் வர, பெண்கள் அனைவரும் அச்சம் கொண்டனர். கவிதாயினி அழவேத் தொடங்கி விட்டாள்.
இரண்டு மூன்று வீரர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ஆயுதங்களை ஓங்கிவர, தன் மகளை இறுகப்பற்றிக் கொண்டு கண்களை மூடியவர், படைவீரர்களின் அலறல் சத்தத்தில் தான் கண்களைத் திறந்தார்.
நீலவிழி கொண்ட ஒரு கன்னிப் பெண் யானை மீது பவனி வந்து, அந்த படை வீரர்களை தாக்கிக் கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் படைவீரர்களின் எண்ணிக்கை அதிகமாக தன் கையில் இருந்த அம்புகளை, மழை போன்று அவர்களை நோக்கி தொடுக்க தொடங்கினாள்.
ஒரு புறம் அவளது யானையும் மறுபுறம் அவளும் அவர்களை சுற்றி நின்று கொண்டு, அவர்களை தாக்க வரும் படைவீரர்களிடமிருந்து பாதுகாத்தனர்.
கைகலப்பில் ஈடுபட்டிருந்த இந்நாட்டு மக்களும், மலைவாழ் மக்களும் இந்த காட்சியை கண்டு, தம் குல பெண்களை காப்பாற்றிட பதறி ஓடி வந்தனர்.
நாட்டு மக்கள் தமது மகாராணியாரையும் அவர் குடும்பத்தையும் காப்பாற்ற முயல, மலைவாழ் மக்கள் தமது கன்னி தெய்வமாக போற்றும் வாணியை காப்பாற்ற, அவர்களால் முடிந்த அளவு படைவீரர்களுடன் போராடினர்.
ஒரு கட்டத்துக்கு மேல் படைவீரர்களாக வேசம் பூண்ட ரத்தினபுரி வீரர்கள் அனைவரும் சிதறி ஓட, அவர்களை துரத்திக் கொண்டு போக நினைத்த வாணியின் கையை பற்றி நிறுத்தினார் ஏந்திழை அம்மையார்.
"தாயே என்ன செய்கிறீர்கள்? விடுங்கள் என்னை, நான் அவர்களை பிடித்தே ஆக வேண்டும். என்ன தைரியம் இருந்தால் நமது காட்டினுள் நுழைந்து கலகம் செய்ய துணிவார்கள்."
"வாணி எதற்காக என் பேச்சை மீறி நீ வெளியே வந்தாய்? நான்தான் உன்னிடம் கூறியிருக்கிறேன் அல்லவா?"
"தாயே நமது மக்களுக்கும் தங்களுக்கும் ஏதோ ஆபத்து வருவது போல என் மனதில் தோன்றி கொண்டே இருந்தது. அதற்கு தகுந்தாற்போல் பறவைகளும் ஆபத்துக் காலத்தை குறிக்கும் ஒலியை எழுப்பியது. அதனால் தான் சற்றும் தாமதிக்காமல் உங்கள் பேச்சை மீறி இங்கு வந்தேன்."
ஏந்திழை அம்மையாருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தங்களைக் காப்பாற்றுவதற்காக வெளியில் வந்த தம் மகளுக்கு, அரசு குடும்பத்தாரால் ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று அவர் அஞ்சினார்.
இங்கு இப்படி இருக்க, அங்கு இளவரசரும் அரசரும், காட்டுவாசிகள் போல் வேடம் தரித்த ரத்னபுரி வீரர்களிடம் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment