அத்தியாயம் 52
மோகனாவும் ரஞ்சனியும் அரண்மனையில் இருந்து புறப்பட தொடங்கும் போது, மோகனாவின் சேவகியான யோகினி, அவளை நோக்கி அவசரமாக ஓடி வந்தால்.
மோகனா அவளை பார்த்துவிட்டு சிறிது யோசித்தவாறே, அவசரமாக பல்லக்கை நிறுத்துமாறு கூறினாள். ரஞ்சனியிடம் திரும்பி, தான் இப்போது வந்து விடுவதாக கூறிவிட்டு யோகினியை நோக்கிச் சென்றாள்.
ரத்னபுரியை சேர்ந்த யோகினி என்ற ஒரு பெண்ணை, ஆதரவற்றவள் என்று கூறி தனது சேவகியாக நியமித்திருந்தாள் மோகனா.
அவள் மூலமாகத்தான் மோகனா, தன் தந்தை விஜய பூபதியை சந்தித்து வந்தாள்.
யோகினியை கேள்வியாக நோக்கியவள், அவள் ஆம் என்று தலையசைத்ததும், வேகமாக தனது அறையை நோக்கிச் சென்றாள். யோகினி கதவை மூடியதும், அவசரமாக நிலை கண்ணாடியை தள்ளிவிட்டு, அதற்கு பின்புறம் இருந்த கதவைத் திறந்து, உள்ளே பிரவேசித்தாள் மோகனா.
அது ஒரு ரகசிய சுரங்கப்பாதை. சிறிது படிக்கட்டுகளை கடந்து சமதள பரப்பை அடையும் போது, அங்கு விஜய பூபதி நின்று கொண்டிருந்தார்.
"தந்தையே, தாங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நான் சொன்ன வேலை என்ன ஆனது?"
"மகளே நீ கூறி, நான் எதையாவது மறுத்து பேசி இருக்கின்றேனா? ஏற்கனவே நமது ஆட்களை இந்நாட்டு மக்கள் போன்று உடையுடன் காட்டினுள் அனுப்பி விட்டேன். இந்நேரம் அங்கு பிரச்சினை தொடங்கி இருக்கும். நான் வந்தது இன்னொரு முக்கியமான விஷயம் சொல்வதற்காக தான்.
இளவரசர் வரும் வழியில் அவரை நிறுத்தி வைப்பதற்காக, திட்டம் தீட்டி இருந்தோம் இல்லையா?”
"ஆமாம்."
"நாகேந்திரன் திடீரென்று அந்தத் திட்டத்தை மாற்றி விட்டான். அரசரையும் உடன் வரும் இளவரசரையும் தாக்க விரைந்து கொண்டிருக்கின்றனர், காட்டுவாசிகள் போல் வேஷம் தரித்த நமது படை வீரர்கள்."
மோகனா அதிக கோபத்துடன் கத்த தொடங்கினால் தன் தந்தையை பார்த்து,
"என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் உமது நண்பர். சொந்தம் என்று நினைத்து நான் அமைதியாக சென்றால், என்னை கிள்ளுக்கீரை என்று நினைத்து விட்டாரோ? இல்லை, காலகோடரின் முழு அருளை பெற்ற என்னையே பகைத்துக் கொள்ள துணிந்து விட்டாரா? இனி அடுத்து பௌர்ணமி பூஜை எப்படி நடை பெறுகின்றது என்று பார்க்கிறேன். என் அத்தானுக்கு மட்டும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், உங்கள் நண்பரது மரணம் என் கையால் தான் நிகழும்"
"மோகனா அவசரப்பட்டு வார்த்தையை விடாதே மகளே. எனக்கு உன்னை பற்றி தெரியாதா? அல்லது உன் அத்தான் தான் உனது உயிர் என்று எனக்கு தெரியாதா? அரசரை கொல்லத்தான் ஆட்களை அனுப்பியுள்ளோம். ஒரு வேலை அரசர் கொல்லப்பட்டால் அடுத்து மித்ரன் அரசன் ஆவான். அதற்கு அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும், அதனால் தான் இந்த ஏற்பாட்டுக்கு நானும் சம்மதித்தேன்.
ஆமாம் நீ எதற்காக மகாராணியை இன்றே கொன்று விட வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறாய்? ஒருவேளை இதுதான் காரணமோ?"
"இல்லை தந்தையே அதற்கு வேறு காரணம் உள்ளது. மகாராணிக்கு என் மீது சந்தேகம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்."
"சந்தேகமா?"
"ஆம் தந்தையே, சில நாட்களாகவே அவர் என்னை சந்தேக கண் கொண்டு தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். எனக்கு தெரியாமல் புதிய பணியாளர்களை அமர்த்தி, என் அறையை சோதனை இட்டுக் கொண்டிருக்கிறார்."
"ஒரு முறை கொற்றவையின் பிரசாதத்தை எனக்கு வழங்க வந்தார். நான் அதை தட்டி விட்டு விட்டேன், அதிலிருந்து தான் என்னை சந்தேகக் கண் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல, என் ஜாதகத்தையும் அரசாங்க ஜோதிடரிடம் கொடுத்து பார்த்திருப்பார் போல.
அவர் உயிருடன் இருந்தால் இனி நமக்குத்தான் பாதிப்பு. அதனால்தான் நமது வீரர்களை இந்நாட்டு படை வீரர் போல அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தி, அதில் அவரை கொல்லுமாறு கூறினேன்.
இதன் மூலம் நமக்கு இரண்டு லாபம் தந்தையே, ஒன்று அந்த மகாராணியின் மரணம். மற்றொன்று, அரசருக்கு இதன் மூலம், காட்டுவாசிகளின் மீது இருந்த நன்மதிப்பு குறைந்து, பகை ஏற்படும்."
விஜய பூபதி அண்டை மாநில அரசர்களின் உதவியை நாடிக் கொண்டிருக்கும்போது, மோகனா சத்தம் இல்லாமல் இன்னொரு வேலையை செய்து கொண்டிருந்தாள். தனது ரத்னபுரியை சேர்ந்த ஆட்களை மகிழபுரியின் படைகளில் பிறருக்கு சந்தேகம் வராதவாரே சேர்த்துக் கொண்டிருந்தாள்.
அதுமட்டுமல்லாமல் அந்தக் காட்டுவாசிகளில், ஆசைக்கு மயங்கும் ஒருவனை பிடித்து நமது திட்டத்துக்கு துணையாக இருக்க, ஏற்பாடு செய்யுமாறு தன் தந்தையிடம் கூறியிருந்தால். இப்போது அவர்களை வைத்து தான், இந்த நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்துள்ளாள்.
கொற்றவைக் கோயிலில் அலங்கார தோரணங்கள் விமர்சையாக இருந்தது. பல வருடங்கள் கழித்து வரப்போகும் தமது இளவரசரை காண மக்களும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
மேளதாளங்களுடன் மங்கள இசையும் இசைக்கப்பட்டு கொண்டிருந்தன.
குகைக்கோயிலில் அமர்ந்திருந்த மதுராவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை. ஏனோ அலைபாய்ந்து கொண்டே இருந்தது. அது தீரனை வெகு காலத்திற்குப் பிறகு பார்க்க போகும் ஆசையாலா? அல்லது தன் நெருங்கிய உறவுகளுக்கு ஏதேனும் ஆபத்தா? என்று அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை.
காட்டு விலங்குகளின் தோழியான அவளுக்கு, பறவைகளின் வித்தியாசமான சத்தம் கேட்டது. அது ஆபத்தை குறிக்கும் ஒலி. எனவே சற்றும் தாமதிக்காமல் தமது குடிலை நோக்கி செல்ல முடிவெடுத்தாள்.
குகையில் இருந்து வெளியே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, சத்தமாக காட்டினை நோக்கி செம்பா என்று அழைத்தாள்.
அவள் அழைத்த இரண்டாவது நிமிடம், ஒரு யானை காட்டினில் இருந்து இவளை நோக்கி ஓடி வந்தது.
அவள் அதனைப் பார்த்து இரண்டு கைகளையும் தூக்கிக் கொள்ள, அந்த யானை தன் தும்பிக்கையால் அவளின் இடுப்பினை பிடித்து தூக்கி, தன் மீது அமர வைத்துக் கொண்டது.
"செம்பா உடனே குடிலை நோக்கி வேகமாக செல்.ஏனோ மனதில் தவறு நடக்க போவதாக தோன்றுகிறது."
அவள் குடிலை நெருங்கிக் கொண்டிருக்கும் போது, சச்சரவு சத்தம் காதை பிளந்தது. அது மக்கள் ஒருவருக்கொருவர் அடித்து சண்டையிட்டு, போர்கருவிகளுடன் மோதிக் கொள்ளும் சத்தம் தான்.
நாட்டு மக்களுக்கும் தமது மலைவாழ் மக்களுக்கும் இடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்தது. அதை விளக்க எண்ணி அரச குடும்பத்தின் பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் போராடிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் அந்த கைகலப்பு பெரிய சண்டையாக உருவெடுத்தது.
சிறிது தூரம் தள்ளி மதுராவின் அன்னை தமது மலைவாழ் மக்களிடம் அமைதியாக இருக்குமாறு கூறிக் கொண்டிருந்தார்.
அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அரசு குல பெண்களை தாக்க, தூரத்திலிருந்து இரண்டு மூன்று படை வீரர்கள் பதுங்கி பதுங்கி வந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment