Search This Blog

Followers

Powered By Blogger

Thursday, July 3, 2025

மன்னவரே 51


 

              அத்தியாயம் 51


    அரண்மனையின் அந்தப்புரத்தில் உடலெங்கும் ஆபரணங்கள் பூட்டி, அலங்கார சுரூபிணியாக கண்ணாடி முன்பு நின்று கொண்டிருந்தால் மோகனா.


    சாதாரண நாட்களிலேயே நிலை கண்ணாடியை விட்டு நகராதவள், இன்று வேறு அவளின் மனம் கவர்ந்த மன்னவன் வரும் நாள், ஒப்பனையை அவ்வளவு சீக்கிரம் முடித்து விடுவாளா என்ன?


    காலையிலிருந்து ஒப்பனை இடுவதும் அதனை கலைப்பதுமாக ஐந்து ஆறு முறை ஆகிவிட்டது.

      மோகனாவின் மஞ்சத்தில் கன்னத்திற்கு கையினை தாங்கி, ரஞ்சனி அமர்ந்து, பல மணி நேரங்கள் ஆயிற்று.


        ரஞ்சனிக்கு அரண்மனை பணியாளர்கள், மோகனாவிற்கு வழங்கும் பயம் கலந்த மரியாதையை காணும் போது ஆச்சரியமாக இருக்கும்.  பணியாளர்களை தனது பார்வையிலேயே ஆட்டி வைப்பவள் மோகனா.


    இப்போது கூட அவள் ஆங்காங்கே  வீசி உள்ள ஆடைகளையும் ஆபரணங்களையும் எடுத்து வைத்துக் கொண்டே இருக்கிறார்கள், முகத்தில் சிறு சுனக்கம் கூட இல்லாது.


      ரஞ்சனிக்கு பல வருடங்கள் கழித்து தனது அத்தானை காண போகும் ஆசை இருந்தாலும், அதை மோகனாவின் முன் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.


    சிறுவயதில் இருந்தே தன்னை எப்போதும் தாங்கும், அத்தானை ரஞ்சனிக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் மோகனாவின் தோழியாக ஆன பிறகு, அவனை பார்ப்பதை கூட தவிர்த்து விட்டாள்.


    மோகனாவிற்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால், அதை அப்படியே ஒதுக்கி விட வேண்டும். இல்லையென்றால், தானாக அது நம் கையை விட்டுப் போகும்படி செய்து விடுவாள். 


    அதற்கு பயந்தே ரகுநந்தனை அவள் நேரடியாக, ஒரு பார்வை கூட பார்ப்பதில்லை. ரஞ்சனியின் அத்தை மகனாகவே இருந்தாலும் அவனின் தந்தை ஒரு போர் வீரர் ஆதலால் மோகனாவை பொறுத்தவரை அவன் ஒரு சேவகன் மட்டுமே ஆவான்.


  இன்று அவள் அத்தான், அவளுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த, நகைகளையும் பட்டாடைகளையும் தான் உடுத்தி இருந்தால். இதன் மூலம், தனது மனதை அவனுக்கு வெளிப்படுத்த நினைத்திருந்தாள்.


பெரியவர்கள் எல்லோரும் எப்போதோ கொற்றவை தேவி கோயிலுக்கு சென்று விட்டனர். ஆனால் மோகனாவோ இன்னும் தனது அலங்காரங்களை முடித்த பாடாக தெரியவில்லை.


  மோகனாவிற்கு அந்தக் காட்டு தேவியின் கோயிலுக்கு செல்வது என்றாலே பிடிப்பதில்லை. அந்த காட்டுவாசிகளின் தெய்வத்தை நாம் ஏன் வணங்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் இருந்தது. அவளின் இந்த எண்ணத்திற்கு வித்திட்டவர் அவளின் தந்தை தான். 


    தன் ஆசைத் தந்தை தங்களை விட்டு பிரிவதற்கு காரணமான அந்த காட்டுவாசிகளின் இருப்பிடத்திற்கு, தான் செல்வதா? என்ற எண்ணமே அவளை அங்கு போகவிடாமல் தடுப்பது.


    தன் மகளை சந்திக்கும் போதெல்லாம், தான் வணங்கும் தெய்வமான காலகோடனின் அருமை பெருமைகளை விஜய பூபதி பேசாத நாளே இல்லை. அந்த தெய்வத்தால் தான், நான் இன்று உயிருடன் உன்னிடம் நின்று பேசிக் கொண்டிருக்கின்றேன் என்று தன் அன்பு மகளிடம் கூறுவான்.


  வருங்காலத்தில் நீ இந்த மகிழபுரியின் மகாராணியாக ஆகும்போது, இந்த காட்டுவாசிகளின் குலதெய்வமான கொற்றவையின் கோயிலை இடித்து தரைமட்டம் ஆக்கி விட்டு, அதன் மீதே நம் தெய்வத்துக்கு கோயில் கட்ட வேண்டும் என்று வாக்குறுதி கூட தன் மகள் மோகனாவிடம் வாங்கினான்


    மித்ரன் குருகுலத்திற்கு செல்லும் முன் அவனுடன் இருப்பதற்காகவே அந்த கோயிலுக்கு சென்று வந்தவள். அவன் குருகுலம் சென்றதும் ஏதோ ஒரு காரணத்தை கூறி அந்த காட்டுக் கோயிலுக்கு செல்வதையே தவிர்த்து வந்தாள்.


    இப்போது கூட பெரியவர்களுடன் செல்லாமல் சிறிது நேரம் தாழ்த்தி சென்றால், மித்ரன் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன் அங்கு தான் சென்று விடலாம். அதனால் காட்டுவாசிகளின் இருப்பிடத்தில், தான் போய் நேரம் செலவழிக்க வேண்டிவராது என்று நினைத்தாள்.


  நிலைகண்ணாடியில் தன்னை  பார்த்து கொண்டிருந்த மோகனாவிற்கு இந்த ஆடைக்கு ஏற்ற அணிகலன்கள் இவையல்ல என்று தோன்றிட, அதை கழட்டி எறிய வந்தவளின் கையை, வந்து இறுக பற்றி கொண்டால் ரஞ்சனி.


      "அடி மோகனா, மறுபடியும் முதலில் இருந்தா? பெரியவர்கள் எல்லோரும் சென்று வெகு நேரமாகி விட்டது. இதற்கு மேலும் நீ காலதாமதம் செய்தால், நீ சென்று உன் அத்தானை வரவேற்க முடியாது? ஏனெனில் அவர் நமக்கு முன்பே கோயிலை அடந்து விடுவார். பிறகு உன் அத்தானுக்கு வெற்றி திலகம் இட்டு வரவேற்க வேண்டும் என்ற உனது கனவு கனவாகவே போய்விடும்."


  "இல்லையடி ரஞ்சி இந்த பட்டாடைகளுக்கு சரியான இணையாக, இந்த ஆபரணங்கள் சேரவில்லை. அதுதான் கழட்ட முனைந்தேன்."


    "இந்த வெண்பட்டாடைகளுக்கு ரத்தின ஆபரணங்கள் அழகாகத்தான் உள்ளது. அத்தானை பார்க்கும் ஆவலில் உன் முகம் ஜொலிக்கும் ஜொலிப்பிற்கு அது ஈடாக தெரியவில்லை அவ்வளவுதான்."


      "அப்படியா கூறுகிறாய் ரஞ்சி!"


      "அப்படித்தான் கூறுகிறேன் எனது அருமை மோகன சுந்தரியே இப்போதாவது கிளம்புவோமா? இதற்கு மேல் தாமதித்தால் பெரியோர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் செல்லலாமா?"


  "ம்ம்ம் சரி சரி கிளம்புவோம்."


தன் துரு துரு பேச்சாலும் குறும்பு பார்வையாலும் காட்டில் வாழும் மனிதர்களை மட்டுமல்லாமல் அங்குள்ள மிருகங்களையும் வசீகரிக்கும், தன் பதினாறு வயது செல்ல மகளைதான், இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார், ஏந்திழை அம்மையார்.

        இவள் வளர வளர ஏந்திழை அம்மையாருக்கு மனதில் எச்சரிக்கை உணர்வும் அதிகமானது. எக்காரணம் கொண்டும் தன் மகள், அந்த அரசு குடும்பத்தாரின் பார்வையில் பட்டுவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தார்.


  ஆனால் அவரின் செல்ல மகள் தன் ஐந்து வயதிலேயே அதற்கு அச்சாரம் போட்டு விட்டால் என்பதை பாவம் அந்த தாயார் அறியவில்லை.


    "அன்னையே இப்போது எதற்காக என்னை குகை கோயிலுக்கு கூட்டி செல்கின்றீர்கள்?"


      "மகளே வாணி, அரச குடும்பத்தினர் இன்று கொற்றவை தேவி கோயிலுக்கு வருகை புரிகின்றனர். அதனால்தான் உன்னை குகை கோயிலுக்கு கூட்டி செல்கிறேன்."


    "அவர்கள் எதற்காக இப்போது வருகிறார்கள் தாயே? கொற்றவை திருவிழா நடைபெறுவதற்கு தான் இன்னும் நாட்கள் உள்ளனவே?"


  "இளவரசர் குருகுலத்தில் இருந்து இன்று நாடு திரும்புகிறார். அவருக்காக விஷேச பூஜையினை ஏற்பாடு செய்துள்ளனர்."


      மதுராவிற்கு தன் சிறுவயது உற்ற தோழனான தீராவின் நினைவுதான் வந்தது.


  சிறுவயதில் தன் கிராம மக்கள் தன்னை தெய்வமாக எண்ணி எட்டி நிறுத்த, விளையாட யாருமே இல்லாது தனித்து இருந்தபோது, தன்னை தனிமையில் இருந்து விடுவிக்க, தோழனாக வந்த தீராவை மதுராவிற்கு மிகவும் பிடிக்கும்.


  இளவரசன் வருகிறான் என்றால், அப்போது தன் தீராவும் திரும்ப வருகிறானா!!! மதுராவின் உள்ளம் குதூகளிக்க தொடங்கி விட்டது.

No comments:

Post a Comment