அத்தியாயம் 50
"மதுரா மதுரா உன்னால் மட்டும் தான், இப்படி எல்லாம் யோசிக்க முடியும்.
எப்போதும் இளவரசனுடன் இருக்கும் எனக்கு, போர் பயிற்சி முக்கியம் அல்லவா, பிறகு எப்படி ஆபத்து வந்தால் எதிரிகளை தாக்கி அழிப்பது."
"ஏன், உன் இளவரசனுக்கு சண்டை போட கூட தெரியாதா?"
"தெரியும் தான், ஒருவேளை என்னை தாக்க வந்தால், எதிர்த்து போரிட எனக்கு பயிற்சி வேண்டுமல்லவா."
"உன் தந்தை ஒரு போர் வீரர் என்று தானே கூறினாய், அவரிடம் நீ பயிற்சி எடுத்துக் கொள்ளலாமே?"
"முறையான பயிற்சியை குருகுலத்தில் தான் கற்றுக் கொடுப்பார்கள்."
"என்னவோ போ, நான் வில் வித்தையை என் அன்னையிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறேன்."
"ஒரு சில வருடங்கள் தான், பயிற்சி முடிந்ததும் உன்னை காண ஓடி வந்து விடுகிறேன். என்னை நம்பு மதுரா."
"போ தீரா, இதைப்போலத்தான் அன்றும், என்னை தினமும் காண வருகிறேன் என்று வாக்களித்தாய். இப்போது... இந்த வாக்குறுதி. இது எத்தனை நாளைக்கு?
இன்று அரசர் மகனுக்காக என்னை விட்டு போகிறேன் என்கிறாய், நாளை அரசர் மகளுக்காகவா? உன்னை நான் நம்பமாட்டேன் தீரா. நீ செல்லும் இடத்தில் யாராவது புதிதாக உன்னுடன் விளையாட வந்தால், நீ என்னை மறந்து விடுவாய். உன்னை காணாமல் நான் எப்படி இருப்பேன்."
அவள் அவன் மீது கோபம் கொண்டு, முகத்தினை திருப்பிக் கொள்ள,
"மதுரா என்னை பார், என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?"
"ம்ம்ம் ரொம்ப."
இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு அவள் கூற,
"உன் அன்னை என்னுடன் பேச வேண்டாம் என்று கூறினால் என்ன செய்வாய்."
"ம்ம்ம் என் அன்னையின் பேச்சை மீற முடியாதே?"
மித்ரன் ஒரு முடிவுடன் மதுராவை அழைத்து கொண்டு தீர்த்த குளத்தின் வழியே கொற்றவை தேவியின் குகை கோயிலுக்கு சென்றான். மதுராவை விட்டுக் கொடுக்க அவன் தயாராக இல்லை.
அந்த தாயின் பாதம் தழுவி ஓடிக்கொண்டிருந்த நீரை கைகளில் எடுத்தவன்,
"இந்த கொற்றவை தாய் சாட்சியாக சொல்கிறேன், இந்த ஜென்மம் மட்டும் அல்ல, இனி எந்த ஜென்மம் எடுத்தாலும், உன்னை விட்டு நீங்க மாட்டேன், என் உயிர் விடும் காலம் வரை உன்னோடு தான் இருப்பேன் இது சத்தியம். அந்த நீரை அவள் கைகளில் கொடுத்தவன், அங்கிருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் இட்டான்."
அவன் அன்னை ஒரு முறை கந்தர்வமணம் (திருமணம்) பற்றி கூறி இருந்தார். அதைத்தான் செய்து கொண்டிருந்தான்.
(எந்த ஜென்மம் எடுத்தாலும் மணப்பெணுக்கே தெரியாமல், அவளை திருமணம் செய்து கொள்ளவதையே வழக்கமாக வைத்திருப்பான் போல!!!)
"அதுதான் நான் உனக்கு சத்தியமே செய்து கொடுத்து விட்டேனே. இனியாவது என்னை சிரித்துக் கொண்டே, வாழ்த்தி வழி அனுப்பி வைப்பாயா?"
மதுராவின் குலத்தில், ஆண்கள் வேட்டைக்கு கிளம்பும்போதோ எங்காவது வெளியூர் செல்லும் போதோ பெண்கள், அவர்களுக்கு மாலை அணிவித்து திலகம் இட்டு அனுப்பி வைப்பதை பார்த்திருக்கிறாள்.
அதையே அவளும் மித்ரனுக்கு செய்தால். அங்கிருந்த மலர்களை தொடுத்து அவனுக்கு அணிவித்தவள், வெற்றி திலகத்தை அவன் நெற்றியிலிட்டாள்.
ஆனால் அவள் அறியாத ஒன்று, இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் மனைவி தன் கணவனுக்கு செய்வது என்று.
ஒரு வழியாக அவளிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு, அரண்மனைக்கு வந்து சேர்ந்தவன், தன் நண்பர்களிடம் அவர்களின் அபிப்பிராயத்தை பற்றி கேட்க மறக்கவில்லை.
"என்னடா உளறல் இது? யாருக்காவது குருகுல பயிற்சி பிடிக்காமல் போகுமா? நாளை அதிகாலையிலேயே நாம் குருகுலத்தில் இருந்தாக வேண்டும். இப்போது வந்து இப்படி ஏதேதோ பேசி கொண்டிருக்கிறாய்.
ஏரிக்கரை பக்கம் அதிகமாக சுத்தாதே என்று சொன்னால் கேட்கிறாயா? என் அன்னை கூட கூறியுள்ளார் அங்கு மோகினி பிசாசு நடமாட்டம் அதிகமாக உள்ளதாம்."
"அரண்மனைக்குள் இருக்கும் உன் தங்கைக்கு, ஏரிகரை மோகினியே தேவலாம் என்று நினைத்து விட்டான் போல, அதனால்தான் எந்நேரமும் ஏரிக்கரையையே சுற்றி கொண்டிருக்கிறான்."
"அவளை இழுக்காமல் உனக்கு நாளே முடிவடையாதாடா?"
"உன் தங்கை தனியாக சுற்றினால், நான் ஏனடா அவளை பிடித்து இழுக்க போகிறேன். எந்நேரமும் என் மாமன் மகளையும் அல்லவா சேர்த்துக் கொண்டு சுற்றித் திரிகிறாள். நாளை குருகுலத்திற்கு சென்ற பிறகு எத்தனை வருடங்கள் கழித்து இனி அவளை காணப்போகிறேனோ தெரியவில்லை? கடைசியாக ஒரு முறை பார்த்து விடலாம் என்று போனால் விடுகிறாளா உன் தங்கை."
பிரதீபன் தலையில் அடித்துக் கொண்டான். அடுத்த நாள் நண்பர்கள் மூவரும் குருகுலத்திற்கு கிளம்ப, மோகனாவை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.
மித்ரனின் நிழலாக என்றும் அவன் பின்னே சுற்றிக் கொண்டிருப்பவள், பல வருடங்கள் அவனை விட்டு பிரிந்திருக்க வேண்டும் என்று கூறினால் சும்மா இருப்பாளா என்ன? அழுது பெரிய ஆர்ப்பாட்டமே பண்ணிவிட்டாள்.
அவளை ஒரு வழியாக சமாதானப்படுத்தி, அரசர் இவர்களை குருகுலத்திற்கு அழைத்துச் சென்று விட்டு வந்தார்.
விஜய பூபதி தன்னால் முடிந்த அளவு பிரச்சனைகளை மகிழபுரிக்கு கொடுத்துக் கொண்டே இருந்தான். மகிழபுரிக்கு கீழ் இருக்கும் சிற்றரசர்களை குழப்பி, அடிக்கடி பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.
பார்த்திபேந்திரருற்கு தெரியாமல் அண்டை தேச மன்னர்களிடம் ஆதரவு திரட்டி கொண்டிருந்தான்.
வருடங்கள் பல உருண்டோடின, நண்பர்கள் குருகுல வாசம் முடிந்து வரும் நாளும் வந்தது.
அரசர் தன் பரிவாரங்களோடு அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார்.
மித்ரன் மகிழபுரி ராஜ்ஜியம் திரும்பியதும், முதல் வேலையாக மதுராவை எப்படியாவது சந்தித்தாக வேண்டும் என்று நினைத்தான்.
அரண்மனையில் இருந்து எப்படி வெளியேறுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான், தமது பரிவாரங்கள் அனைத்தும் அரண்மனையை நோக்கி செல்லாமல் காட்டை நோக்கி செல்வதை கவனித்தான்.
அருகில் வந்து கொண்டிருந்த வீரர்களிடம் விசாரிக்க, கொற்றவை தேவி கோயிலில் விசேஷ பூஜை ஏற்பாடாகி உள்ளதால் கோயிலுக்கு போய்க்கொண்டிருப்பதாக கூறினார்கள்.
அவன் உள்ளம் குதூகளிக்க தொடங்கியது. எப்படியும் மதுராவின் அன்னை, அரசு குடும்பத்தாரின் வருகையால் அவளை குகை கோயிலுக்கு அழைத்து சென்று விட்டு வந்திருப்பார். யாருக்கும் தெரியாமல், எப்படியாவது தீர்த்து குளத்தின் வழியே சென்று அவளை பார்த்து வரவேண்டும் என்று முடிவெடுத்தான்.
ஆனால் அவன் செல்ல ராட்சசி, அவள் அன்னையின் பேச்சு கேட்காமல், தனிமையை வெறுத்து, வெளியே சுற்றுவாள் என்பதை, ஏனோ மறந்து போனான்.
No comments:
Post a Comment