அத்தியாயம் 49
மதுரவாணி, மித்ரன் குளத்தினில் இருந்து எழ முடியாது, மூழ்கி விட்டதாக எண்ணி, அவனின் தலை முடியை பிடித்துக் கொண்டு நீந்தி, சற்று தூரம் தள்ளி மேலே வந்தாள்.
அவளின் பின்னே மகுடிக்கி மயங்கிய பாம்பாக நீந்தி வந்த மித்ரன், குளத்தை விட்டு வெளியேறியதும்தான் சுயத்துக்கு வந்தான், இருக்கும் இடத்தை சுற்றிப் பார்த்தான்.
அது அவன் விழுந்த அல்லி மலர் குளம் அல்ல, ஒரு குகை போன்ற அமைப்பில் இருந்தது. குளத்திற்கு சற்று தள்ளி கொற்றவை தேவியின் செம்பவள சிலை இருந்தது. அதனை கண்ட மித்ரன் கைகள் கூப்பி, வணங்கி நின்றான்.
"ஆமாம் யார் நீ? தீர்த்த குளத்தினுள் என்ன செய்து கொண்டிருந்தாய்? அங்குள்ள அல்லி மலர்களை கண்டபோது தெரியவில்லையா? அதில் இருக்கும் ஆபத்து."
"யாராவது தெரிந்தே அல்லிமலர் சூழ்ந்த குளத்தில் விழுவார்களா? அந்த வழியாக சென்று கொண்டிருக்கும்போது கால் தவறி விழுந்து விட்டேன். ஆமாம் நாம் இங்கு எப்படி வந்தோம்."
"சுரங்கப்பாதை வழியாக தான் உன்னை இங்கு இழுத்து வந்தேன். அங்கேயே உன்னை மேலே ஏற்றி இருந்தால், நான் அங்கு வந்தது என் தாய்க்கு தெரிந்து மிகவும் கோபப்படுவார்."
"எதற்காக கோபப்படுவார்?"
"அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரின் கண்களிலும் நான் விழுந்து விடக்கூடாது என்று தான், ஒவ்வொரு முறை கொற்றவைத் திருவிழாவின் போதும், என்னை இங்கு அழைத்து வந்து விட்டு விடுவார். அவர்கள் அங்கிருந்து சென்ற பின் தான் என்னை குடிலுக்கே அழைத்துச் செல்வார். உன் பெயர் என்ன? நீ அரசு குடும்பத்தைச் சேர்ந்தவனா?"
"இல்லையே இல்லவே இல்லை, இந்நாட்டு போர் வீரரின் மகன் நான். என் பெயர் தேவேந்திரன்."
"என்ன பெயர் இது? உன் பெயர் என் வாயிலேயே நுழையவில்லை. வேண்டுமென்றால் உன்னை தீரா என்று அழைக்கட்டுமா?"
"உன் இஷ்டப்படி எப்படி வேண்டும் என்றாலும் கூப்பிடு. ஆமாம் உன் பெயர் என்ன?"
"வாணி மதுர வாணி. என் அன்னை என்னை வாணி என்று தான் அழைப்பார்."
"நான் உன்னை மதுரா என்று அழைக்கட்டுமா?"
"ஆஹா இந்த பெயர் நன்றாக உள்ளது. அப்படியே கூப்பிடு தீரா."
"ஆமாம் நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எவ்வாறு அந்த குளத்திற்கு வந்தாய்?"
"எனக்கு இங்கு தனியாக இருக்கவே பிடிக்கவில்லை. இந்தக் குளத்திலிருந்து பிரியும் இரண்டு சுரங்கப்பாதைகளில் ஒன்று கொற்றவை தேவி கோயில் குளத்திற்கும், மற்றொன்று காட்டிற்கு வெளியே உள்ள ஏரிக்கும் செல்லும். அதன் மூலம் என் அன்னைக்கு தெரியாமல் வெளியிடங்களுக்கு சென்று வருவேன்.
அவ்வாறு இன்று செல்லும் போது தான், நீ அந்த குளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பதை கண்டேன்."
"ஏரியை ஒட்டி சுரங்கப்பாதையா? நான் இதுவரை கண்டதே இல்லையே?"
"காட்டை ஒட்டி இருக்கும், நீர் பகுதிகளை நெருங்கி சென்று பார்த்திருக்க மாட்டாய் அல்லவா, அதனால் அங்குள்ள சுரங்க வழி உனக்கு தெரிய வாய்பில்லை."
"ஓஹோ சரி... இந்த குகையில் இருந்து வெளியே செல்ல இது மட்டும் தான் வழியா?"
"ஏன் தீரா? என்னை விட்டு, இங்கிருந்து செல்ல போகின்றாயா? இன்றாவது என்னுடன் விளையாட ஆள் வந்ததாக நினைத்து மகிழ்ந்தேன்."
"மதுரா இதோ என்னை பார், இனி தினமும் உன்னை சந்திக்க வருகிறேன். உன்னுடன் சேர்ந்து விளையாடுவேன் சரியா. இது போல முகத்தை கலக்கத்துடன் வைத்துக் கொள்ளாதே புரிந்ததா."
"நிஜமாகவா? நீ என்னை சந்திக்க தினமும் வருவாயா? என்னை ஏமாற்றி விட மாட்டாயே?"
"நிச்சயமாக என் உயிர் உள்ளவரை என்றுமே உன்னை ஏமாற்ற மாட்டேன் மதுரா."
வேந்தன் தினமும் காட்டுக்கு வெளியே உள்ள ஏரி வழியே நீந்தி வந்து, கொற்றவை தேவி கோயிலுக்கு பின்புறம் இருக்கும் தீர்த்த குளத்தில், மதுராவை சந்தித்துக் கொண்டிருந்தான்.
வெளியுலகம் என்றால் என்ன என்றே அறியாத சிறு பெண்ணுக்கு, தான் கண்டு வந்தவைகள் பற்றியும், கேட்டு தெரிந்து கொண்டவை பற்றியும் விரிவாக எடுத்துரைப்பான்.
இப்படியே அவர்களது நட்பும் வளர்ந்து கொண்டே போனது. அரண்மனையிலிருந்து திடீரென்று மாயமாகும் மித்ரன், எங்கு செல்கிறான் என்பதை அறிய மோகனா பலமுறை முயற்சி செய்தால் ஆனால் கண்டுபிடிக்க தான் முடியவில்லை.
விஜய பூபதி ஓரிரு முறை தனது ஆசை மகள் மோகனாவை சந்திக்க வந்தான். வந்தவன் தனது பாசத்தை அவள் மீது கொட்டியதோடு அல்லாமல், மகிழபுரியின் மீது தான் கொண்டிருந்த பழி வெறியையும் சேர்த்தே அவளிடம் கூறி, அந்தப் பிஞ்சு மனதில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சினை விதைத்து கொண்டிருந்தான்.
ஒரு வருடம் கழித்து இளவரசரோடு அவரின் நண்பர்களையும் ஆயுதப் பயிற்சிக்காக குருகுலம் அனுப்ப ஏற்பாடு ஆனது.
அன்று வெகு நேரத்திற்குப் பிறகு மித்ரன் மதுராவை காண வந்திருந்தான். மதுராவிடம், இளவரசருக்கு துணையாக தானும் குருகுலம் செல்ல போவதாக கூற, மதுரா அழத் தொடங்கி விட்டாள்.
"அந்த இளவரசர் என்ன சிறு குழந்தையா? அவனுக்கு துணையாக நீ போக வேண்டுமா? நான் போக மாட்டேன் என்று நீ சொல்ல வேண்டியது தானே. எனக்கு கொடுத்த வாக்கை, நீ மறந்துவிட்டாய் பார்த்தாயா?"
"மதுரா நீ கூறுகிற படி எல்லாம், அரச கட்டளையை மீறி பேச முடியாது"
"ஏன்? தலையை கொய்ந்து விடுவார்களா என்ன?"
மித்ரன் சிரித்துக்கொண்டே ஆமாம் என்று தலையாட்டினான்.
"அதனால் தான் என் அன்னை அரச குடும்பத்தாரின் பார்வையில் இருந்து, என்னை தள்ளி இருக்க சொல்கிறாரா?
இளவரசனுக்கு தோழனாக இருந்தால் அவர்களும், அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் உடன் செல்ல வேண்டுமா என்ன? அவர்களுக்கென்று தனியாக விருப்பம் எல்லாம் இருக்க கூடாதா?"
இதற்கு தான் என்ன பதில் கூற, என்று தெரியாமல் மித்ரன் முழித்தான். அரண்மனை திரும்பிய பிறகு தன் நண்பர்களிடம், அவர்களுக்கு இதில் விருப்பமா என்று கேட்க வேண்டும் என்று, தனக்குள்ளே கூறிக் கொண்டான்.
"இளவரசன் நாளை மன்னரானால் இவர்களையும் அவனுடன் மன்னராக்கி ஒரே அரச பீடத்தில் அமர வைப்பார்களா என்ன?"
அவள் கூறியதை கற்பனை செய்து பார்த்தவன், சத்தமாக சிரிக்க தொடங்கி விட்டான்.
No comments:
Post a Comment