அத்தியாயம் 76
ஒரு பூவனத்தில் மித்ரனது தோளில் சாய்ந்து கொண்டு மதுரா கதை பேசிக் கொண்டிருந்தாள். அப்போது, திடீரென்று கருப்புநிற புகை அவனை சூழ்ந்து, அவளிடம் இருந்து பிரித்து இழுத்துச் செல்வது போல பிம்பம் தோன்றியது.
மித்ரனது கைகளைப் பிடித்து மதுரா தன்னோடு இழுத்துக்கொள்ள முயற்சி செய்ய, அந்தக் கருப்பு நிற பிம்பம் இவளை தூக்கி வீசியது. அவளின் கண் முன்பே மித்ரனின் உடலை கொஞ்சம் கொஞ்சமாக அந்த கருநிற புகை சூழ்ந்து, மொத்தமாக அவனை உள்ளே இழுத்துக் கொண்டது.
மதுரா அழுது கொண்டே தீரா என்று உரக்க கூறி அழைத்துக் கொண்டு அவனை நோக்கி செல்ல, அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த தூரம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
ஒரு கட்டத்தில் அவன் முழுமையாக அந்த இடத்தில் இருந்து வெளியேறி இருந்தான். அவள் பதறி எழுந்து அமர்ந்த போது தான் தெரிந்தது, அது கனவு என்று. ஆனால் கண்களில் இன்னும் நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. இவளது சத்தத்தை கேட்டு எழுந்த ஏந்திழை அம்மையார் இவள் இருக்கும் கோலத்தைப் பார்த்து, அவள் அருகினில் பதறி ஓடி வந்தார்.
"வாணி என்ன ஆயிற்று? ஏதாவது கெட்ட சொப்பனம் கண்டாயா? ஒன்றுமில்லை...ஒன்றுமில்லை… முதலில் நீ அழுவதை நிறுத்து, அம்மா நான் இருக்கிறேன் அல்லவா, நான் சொல்வதைக் கேள், முதலில் அழுவதை நிறுத்து வாணி."
ஏந்திழை அம்மையார் கொற்றவை தேவியின் பிரசாதத்தை அவள் நெற்றியில் இட்டு, அவளை தன்னோடு அணைத்துக் கொண்டார். ஆனாலும் மதுராவின் கண்ணீர் நின்ற பாடில்லை. தேம்பிக் கொண்டே தன் அன்னையிடம் கனவில் தான் கண்டவற்றை விரிவாக கூறினாள்.
ஏந்திழை அம்மையாருக்கும் ஏனோ மனதிற்கு சங்கடமாக இருந்தது. இருந்தாலும் மதுராவை தேற்றி அவளை பூஜைக்காக மூலவர் சன்னிதிக்கு தயார்படுத்தி அனுப்பி வைத்தவர். இங்கு கொற்றவை தேவியின் முன்பு நின்று, கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்தார்.
தாயே என் மகளின் வாழ்க்கையை காப்பாற்று, அவர்கள் இன்னும் வாழ்வை தொடங்கவே இல்லை, அதற்குள் முடித்து வைத்து விடாதே தாயே, உன்னை நம்பித்தான் அவளை அவ்வளவு பெரிய இடத்தில் வாழ வைக்க முடிவு செய்தேன். அவளின் நல்வாழ்க்கைக்கு நீயே துணை.
ஏதோ கெட்ட சக்திகள் ஊருக்குள் அட்டகாசம் செய்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன், சீக்கிரம் நீ மீண்டு வர வேண்டும் தாயே, அந்த கெட்ட சக்திகளை அழித்து, மக்களின் வாழ்வை நலம் பெற வைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டார்.
மதுராவிற்கு ஏனோ இன்று மனம் தெளிவாகவே இல்லை. ஏதோ ஒரு தவறு நடக்கப் போவதாகவே மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது.
கொற்றவை அன்னையை நோக்கி கைகூப்பி, கண்களை மூடி மனதில் வேண்ட தொடங்கினாள்.
"தாயே இது என்ன மாதிரியான உணர்வு என்று என்னால் உணர முடியவில்லை. ஆனால் ஏதோ கெட்டது நடக்க போவதாகவே என் உள் மனம் உரைக்கின்றது. அதுவும் அவர் என்னை விட்டுப் விலகி செல்வது போல, இன்று அதிகாலை நான் கண்ட கனவு, ஏனோ என் மனதை கொய்வது போல் உள்ளது. அவரை எந்த தீங்கும் நெருங்காமல் பத்திரமாக காத்தருள வேண்டும் அம்மா. உன்னையே நம்பி இருக்கும் இந்த பிள்ளையை காப்பாற்று தாயே."
அவள் யாருக்காக வேண்டிக் கொண்டு இருந்தாளோ, அவனே அந்த குளத்தில் இருந்து இவள் அறியாமல் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
மதுராவிற்கு வந்த அதே கனவு மித்ரனுக்கும் வந்தது. அவன் பதறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்த பிறகு, இன்று எப்படியாவது மதுராவை பார்த்தே தீர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். திடீரென்று தனது அறையின் கதவு தட்டப்பட்டதும் என்ன ஏது என்று வந்து பார்க்க, அப்போதுதான் காவலர்கள் மேனகா தேவிக்கு நடந்ததை அவனிடம் கூறினார்.
மித்ரன் நடந்த சம்பவங்களால், நாட்டினுள் ஏற்பட்ட பிரச்சனைகளை ஒரு வழியாக தீர்வுக்கு கொண்டு வந்திருந்தான். மதுரா குங்கும பூஜை செய்ய எப்படியும் மூலவர் சன்னிதிக்கு செல்வாள் என்று அவனுக்கு நன்றாக தெரியும். ஒருவேளை ஏந்திழை அம்மையார் மதுராவுடன் இருந்தால், தூரத்தில் இருந்தாவது அவளை பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் திடீரென்று தனது அத்தையான மேனகாதேவிக்கு உடல்நிலை சரியில்லாது போன காரணத்தால், அவளை பகல் பொழுதில் சென்று சந்திக்க முடியவில்லை. இருந்தாலும் அவளை இன்று எப்படியாவது சந்தித்தே தீர வேண்டும் என்று அந்த கடும் குளிரிலும் உறை பனியை கூட கண்டு அஞ்சாமல், குளிர்ந்த நீரில் தனது ஆசை மனைவியைக் காண நீந்தி வந்திருக்கிறான்.
ஒருவேளை ஏந்திழை அம்மையார் தன்னை கண்டு விட்டாள், தான் இங்கு வருவதை நினைத்து கோபப்பட கூடும் என்று நினைத்து தான், மறைந்திருந்து மதுராவை கண்காணிக்க தொடங்கினான். ஆனால் அவள் மட்டும் இங்கு தனியாக அமர்ந்திருப்பதை கண்ட பிறகுமா இவ்வாறு மறைந்திருப்பான்? உடனே அவள் முன்பு பிரசன்னம் ஆகிவிட்டான்.
மதுரா தனது கண்களைத் திறந்ததும் தனக்கு எதிரே தெரிந்த மித்ரனது திருமுகத்தை கண்டு இமைக்க மறந்தால். எங்கே இமைகளை சிமிட்டினாள் அவனது உருவம் மறைந்து விடுமோ என்று நினைத்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மனதில் உண்டான கலக்கம் அப்போது சரியாக அந்த நேரத்தில் ஞாபகத்திற்கு வர, அவளது கண்களில் நீர் சூழ்ந்தது, அது அவளது கண்கள் என்னும் அணையினை உடைத்துக் கொண்டு வெளியேறும் போது, மித்திரன் தனது கைகளால் அதைத் துடைத்தெரிந்தான்.
அந்த கைகளை தனது இரு கரங்களாலும் பிடித்துக் கொண்ட மதுரா, தனது நெற்றியில் வைத்துக் கொண்டு குலுங்கி அழ தொடங்கினாள்.
"எனை மறந்து போவாயா தீரா? என்னை விட்டுச் சென்று விடுவாயா?"
தன் காதலியின் கண்களில் தூசு பட்டாலே தாங்காதவன், அவள் கதறி அழுவதை தாங்கிக்கொள்வானா என்ன? உடனே பாய்ந்து, அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
"இறப்பிலும் உன்னை பிரியேன் பிரியசகி. இப்படிப்பட்ட வார்த்தைகளை கூறி என்னை வதைக்காதே மதுரா. நான் என்றும் உனது தீரன் மட்டுமே."
அவளைத் தன்னில் இருந்து பிரித்து, தனது கழுத்தில், பிறந்தது முதல் என்றும் ஒட்டியே இருக்கும், தனது குடும்ப சங்கிலியை கழட்டி அவளது பொற்கழுத்தில் மாலையாக இட்டவன்,
"மதுரா, இப்பிறவியில் மட்டுமல்ல, இனி நான் எடுக்கும் அத்தனை பிறவியிலும் இந்த தீரன் உனக்கு மட்டுமே சொந்தமானவன்."
அவன் கூறியவற்றை கேட்டு கனிந்திருந்த அவளது காதல் முகம், நிதர்சனத்தை உணர்ந்து கோபத்தில் மாறத் தொடங்கியது.
தனது தோளினை அணைத்திருந்த அவனது கைகளை உதறியவள்,
"நீ...நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்?"
இவள் கேட்ட கேள்வியில் மித்ரனின் முகம் போன போக்கை கண்டு, அந்த கொற்றவை தேவி கூட சிரித்திருப்பாரோ!!!!
No comments:
Post a Comment