அத்தியாயம் 102
"எதுவானாலும் நீ என்கிட்டயே கேட்கலாம் தீபா, ஏன்னா நான் தான் சந்துருவை அப்படி சொல்ல சொன்னேன்.எதுக்கு இந்த மொறைப்பு?..... அப்படி என்ன நான் பெருசா பொய் சொல்லிட்டேன்? நான் ஐசியூல சீரியஸா படுத்துட்டு இருக்கறதாவா சொன்னேன்? ஆபத்து கட்டத்தை தாண்டிட்டதா தானே சொல்லி இருக்கேன். அதோட எனக்கு காயம்ப் பட்டிருக்கிறது உண்மைதானே, எனக்கு என் மது வேணும்,அவளை என்னோடவே வெச்சுக்க எனக்கு வேற வழி தெரியல, நீயே கேட்ட இல்ல அவ பேசினதை,..... என்னை விட்டுட்டு போறேன்னு சொல்றா டா........, அவ இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது, அவளை விட்டு பிரிய கூடாதுன்னு தான், அவளை அப்படி அவசர அவசரமா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தேன், இப்போ மது என்னை விட்டுட்டு போறேன்னு சொல்லும் போது, என்னால தாங்கிக்க முடியல டா மச்சான்,....... உடம்புல இருந்து உயிரை அப்படியே உருவி எடுக்கிற மாதிரி வலிக்குது டா தீபா."
"டேய் என்னடா இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கே?"
"வேற என்ன சொல்ல சொல்றே? என்னால கண்டிப்பா மது இல்லாமல் வாழ முடியாது, அது ஏன்னு எனக்கே தெரியல, ஏதோ ஒரு பந்தம், அவளை கூடவே வச்சுக்கணும்னு தோணுது. அவ இல்லாட்டி நான் இல்லைன்கிறது, என் மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சு. எனக்கு என்னோட மதுரா வேணும், அதுக்காக நான் எந்த ஒரு எல்லைக்கும் போவேன்."
வேந்தனின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வெளியேறியது.
"தீபா நாங்க ஒன்னும் பொய் சொல்லல, அவனுக்கு காயம் பட்டிருக்கிறது உண்மைதான், அதுவும் ஆழமா.... அதோட இப்பதான் ஆபரேஷன் முடிஞ்சிருக்கு, எவ்வளவு பெரிய ஸ்டிச்சர்ஸ் போட்டு இருக்கு தெரியுமா உனக்கு?.... இவன் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி கொஞ்சம் பாடியை ஸ்ட்ராங்கா வெச்சிருந்ததால தான், ஏதோ இந்த அளவுக்கு தெளிவா பேசறான், இல்லாட்டி அளவுக்கு அதிகமா அவ்வளவு ரத்தம் உடம்புல இருந்து வெளியே போனதுக்கு, இவன் எப்பவோ மயக்கம் போட்டு விழுந்திப்பான், நாங்க ஒன்னும் குடும்பத்துல இருக்கவங்க எல்லார்கிட்டயும், இவன் ரொம்ப சீரியஸா இருக்கான்னு பொய் சொல்லலையே, அவன் ஆபத்து கட்டத்தை தாண்டிட்டான் ஆனாலும் இன்னும் கண் விழிக்கவில்லைன்னு மட்டும் தானே சொல்லி இருக்கோம்."
"எல்லாம் சரி தான்டா, ஆனா எதுக்காக இந்த பொய்? ஏற்கனவே இவன் மதுக்கிட்ட உண்மையை மறைச்சதால தான் இவ்வளவு பிரச்சனை, மறுபடியும் இவன் இப்படி நடந்துக்கிறது நல்லா இல்ல சந்துரு, அந்த பொண்ணு ரொம்ப பாவம் டா. இவன் மறுபடியும் இப்படி நடந்துக்கிறது அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா, அந்த பொண்ணு மனசொடைஞ்சு போயிடும் டா."
"தீபா நான் மதுவை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்கே தெரியும், அவ மனசு நோகும்படி நடக்க எனக்கு மட்டும் என்ன ஆசையா?.....ஒன்னு மட்டும் உறுதியா சொல்றேன் டா, அவ என்னோட இல்லன்னா அவளாலயும் சந்தோசமா இருக்க முடியாது டா, எனக்கு நல்லா தெரியும் டா, என் மதுவோட மனசு புல்லா நான் மட்டும் தான் இருக்கேன், எங்க இரண்டு பேராளையும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்கவே முடியாது ."
"டேய் நீ தான் அந்த பொண்ணை லவ் பண்ணினே,ஆனா அந்த பொண்ணு உன்னை லவ் பண்ணதா சொல்லவே இல்லையே, அதுமட்டுமா கல்யாணமான அன்னைக்கே உன்கிட்ட, அந்த பொண்ணு டைவர்ஸ் நோட்டீஸ் நீட்டினதா சொன்னயே?"
"ஆமா,..... ஆனா எனக்கு கண்டிப்பா தெரியும் அவ மனசுல நான் தான் இருக்கேன், நீ வேணா பாரு அவளால என்னை இங்க தனியா விட்டுட்டு போக முடியாது, கண்டிப்பா திரும்ப வருவா."
அவன் சொன்னது போலவே சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட, உடனே அவசரமாக படுத்துக்கொண்ட வேந்தன், மருத்துவ உபகரணங்களை, சந்துருவின் உதவியோடு மாட்டிக் கொண்டான்.
மூர்த்தி சென்று கதவை திறக்க, வெளியே மூர்த்தியின் மனைவி கோதாவரி, மயங்கிய நிலையில் இருந்த மதுவை தாங்கி பிடித்தபடி நின்று கொண்டிருந்தால். மதுவின் கைகளில் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது,
அவளை அந்த நிலையில் கண்டதும், நண்பர்கள் அனைவருக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. சந்துரு தான் முதலில் வேகமாக ஓடி வந்தான், கண்மூடி படுத்திருந்த வேந்தனுக்கு மது நின்று கொண்டிருந்த நிலை தெரியவில்லை.
"சிஸ்டர் என்னாச்சு மதுவுக்கு? ஏன் அவங்க கை எல்லாம் ஒரே ரத்தமா இருக்கு? நீங்க முதல்ல உள்ள வாங்க, டேய் என்ன எல்லாரும் அப்படியே நிக்கிறீங்க?... முதல்ல சிஸ்டரை பெட்ல படுக்க வைங்க."
சந்துருவின் வார்த்தையை கேட்டதும் கண்களை திறந்த வேந்தன், ஏறிக்கொண்டிருந்த டிரிப்ஸ் ஊசியை கழட்டி வீசிவிட்டு, மதுவிடம் பாய்ந்தோடி வந்தான். மதுவை தனது கைகளில் அள்ளி கொண்டவன், அவளை சத்தமாக பெயர் சொல்லி அழைத்த படியே, தூக்கி வந்து மெத்தையில் படுக்க வைத்தவன். அவளது வலது கையில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை கண்டு,
"ஐயோ ரத்தம் எவ்வளவு போயிருக்கு? ஐயோ மதுரா ஆபத்து இருக்கறது தெரிஞ்சும், உன்னை தனியா விட்டுடனே, எல்லாம் அந்த மினிஸ்டரோட வேலையா தான் இருக்கும், என்னை காயப்படுத்தனும்னு நினைச்சு உன்னை இப்படி பண்ணிட்டானே,நான் என்ன பண்ணுவேன், டேய் சந்துரு சீக்கிரமா வந்து பாரு டா,காயம் எவ்வளவு பெருசா இருக்குன்னு தெரியலயே, ரத்தம் வேற அதிகமா போயிருக்கும் போல, ஏன்டா அங்கயே நின்னுட்டு இருக்க, சீக்கிரமா வந்து மதுவை செக் பண்ணு, ஐயோ மதுரா என்னை கண் திறந்து பாரேன் ப்ளீஸ் என்னை தனியா விட்டுட்டு போயிடாதே மதும்மா,... நீ இல்லாத வாழ்க்கை எனக்கும் கிடையாது, என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போய்விடு, மதுரா நான் பேசறது உனக்கு கேக்குதா? உன்னோட தீரன் பேசுறேன், கண்ணை திறந்து பாரும்மா மதுராஆஆஆ.."
தனது கைகள் நடுங்க அவளது கையில் வழியும் ரத்தத்தை வேந்தன் தொட முனையும் போது, அவன் கைகளை தடுத்து பிடித்த மது, கண்களை திறந்து வேந்தனை நேர் விழி கொண்டு நோக்கினால்.
ஆம் மது தனது கைகளில் குங்கும கரைச்சலைக் கொட்டி கொண்டு, வேந்தனின் வாய்மொழியாகவே அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் இவ்வாறெல்லாம் நடித்தால்.
இவ்வளவு நேரமும் அவன் தனக்காக தவித்த தவிப்பை கண்களை மூடியபடியே கண்டவள், ஒரு கட்டத்திற்கு மேல் அவன் அழுவதை கண்டு பொறுக்க முடியாமல் தான், கண் விழித்து விட்டால்.
மதுவை பெரியவர்கள் தன்னுடன் வருமாறு கூறிய போது, அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு, கடைசியாக அவனது கைகளை கோர்த்த போது, மதுவின் மீது இருந்த நேசத்தால் வேந்தன், தான் மயக்கத்தில் நடித்துக் கொண்டிருப்பதைக் கூட மறந்து, அவள் கை விரல்களோடு தனது விரல்களை பின்னிக் கொண்டான். அப்போதே அவளுக்கு லேசாக சந்தேகம் துளித்து விட்டது, அதனால் தான் அவனை உற்று நோக்கி விட்டுச் சென்றாள். பெரியவர்களை முன்னாள் செல்ல சொல்லிவிட்டு, கோதாவரியுடன், வேந்தனது அறையை நோக்கி வந்தாள்.
சரியாக அந்த நேரத்தில் தான் தீபன் வேந்தனிடம் தனது கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான். அவன் கூறிய அனைத்தையும் கேட்டவளுக்கு, அவன் தன்னிடம் பொய் சொன்னதற்காக அவன் மீது கோபம் வராமல், மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்தது.
எதற்காக அவன் தன் மீது இவ்வளவு காதலை வைத்திருக்கிறான் என்று அவளுக்கு புரியவே இல்லை, தன் மீது இவ்வளவு காதலா?... என்று மனதிற்குள் மகிழ்ந்தாலும், ஒரு பக்கம் சிறிய சோகமும் மனதில் இலையோடிக் கொண்டு தான் இருந்தது.
மது நண்பர்கள் பேசிக் கொண்ட அனைத்தையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள், வேந்தன் கூறியது போல அவளாலும் வேந்தனை விட்டு தள்ளி இருக்க முடியும் என்று தோன்றவில்லை. அந்த ஒரு மணி நேரத்தில் எப்படி எல்லாம் பதறிவிட்டாள், அதுவும் அவனது ரத்தத்தை தனது கைகளில் பார்த்த போது,..... அப்பப்பா தன் உயிரே போனது போல அல்லவா இருந்தது.
எப்படி அவனக்கு தன் மீது இவ்வளவு காதல் வந்தது?.... அவன் மீது தான் கொண்ட காதலை, தானே அறியாத போது, எவ்வாறு தன் மனதிற்குள் இருந்த நேசத்தை, அவன் அறிந்து கொண்டான்?.... மாயக்கள்ளன் தான்.
தற்போதும் கூட தன்னை ஏமாற்றத்தானே முயற்ச்சிக்கின்றான், தன்னிடம் உண்மையை கூறாமல் இருப்பதை கண்டு, அவளுக்கு சிறு கோபம் தலை தூக்கியது. அவன் வாயாலேயே இந்த நாடகத்தை கலைக்க வேண்டும் என்பதற்காகத்தான், ரிசப்ஷனில் இருந்த குங்குமத்தில் சிறிது நீரை விட்டு, தனது கைகளில் ஊற்றிக் கொண்டவள், கோதாவரியிடம் தான் சொல்வதை மட்டும் கேட்குமாறு, இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருந்தாள். ஆனால் ஒரு கட்டத்தில் வேந்தன் மனம் நொந்து புலம்புவதை கேட்க முடியாமல் தான், கண் விழித்து இப்படி வேந்தனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
கோதாவரி எப்போதோ அங்கிருந்து அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு கதவை சாத்தி விட்டாள். வெளியே வந்தவர்களிடம் கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் இடையில் நாம் நிற்பது அவ்வளவு நல்லதல்ல என்று கூறி, மூர்த்தியுடன் வந்து வெளியே உள்ள சேரில் அமர்ந்து கொண்டாள், தற்போது உள்ளே வேந்தன் தான் மதுவிடம் என்ன கூறுவது என்று தெரியாமல், தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தான்.
கைகளை கட்டிக் கொண்டு குறுகுறு விழியோடு வேந்தனை பார்த்துக் கொண்டிருந்த மதுராவிற்கு, வேந்தனை பார்த்தால், தவறு செய்துவிட்டு தாயிடம் மன்னிப்பு கேட்கும் குழந்தையைப் போலத்தான் அவன் முகம் தோன்றியது. அள்ளி அணைக்கத் துடித்த கைகளை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு, பேசுவதற்காக தொண்டையை செறுமினால், ஆனால் அதற்குள் வேந்தனே பேசத் தொடங்கி விட்டான்.
"என்னை.... என்னை மன்னிச்சிடு மதுரா, நான் திரும்பவும் அதே தப்பை பண்ணிட்டேன்,.... ப்ளீஸ் நீ என்னை விட்டு பிரிஞ்சு போகாதே, அப்படி ஏதாவது நடந்திடுமோன்னு தான் நான் இப்படி எல்லாம் பண்ணினேன். என்னை புரிஞ்சுக்கோ மதுரா,...."
அப்போதும் மதுரா கைகளை கட்டியபடி, வாய் திறக்காமல் அவனையே பார்த்துக் கொண்டு இருக்க,ஒரு பெருமூச்சை வெளியே விட்ட வேந்தன்,
"புரியிது மதுரா, கட்டாயப்படுத்தி யார் மேலையும் காதலை வர வைக்க முடியாது, நான் உன் மனசுல இருக்கேன்னு நினைச்சேன்,..... அப்படி இல்லைன்னும் போது என்ன செய்ய?.... நீ என்னை விட்டு போகலாம் மதுரா, நானே நேரடியா நம்ம குடும்பத்துல இருக்கறவங்க கிட்ட பேசறேன், நான் செஞ்ச எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்றேன், ஆனா சந்துரு , லாவண்யாவோட பேரு மட்டும் எந்த பிரச்சனைலயும் வெளியே வராமல் பாத்துக்கோ. நீ சொன்னபடி நான் உன்னை விட்டு போயிடுறேன், கண்டிப்பா இனி உன்னை நான் தொந்தரவும் பண்ண மாட்டேன் மதுரா."
கடைசி வார்த்தையை கூறும்போது வேந்தனது குரல் துக்கத்தால் கமறியது. இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று பேசிக் கொண்டிருந்தவனை இறுக்கமாக கட்டிக் கொண்டு, பேசிக்கொண்டே சென்ற வேந்தனது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்தாள் மதுரா.
முதலில் அதிர்ந்து போய் நின்ற வேந்தன் சில நிமிடங்களிலேயே அவளது செயலை தனது கைகளில் எடுத்து கொண்டு , அவளை தீவிரமாக அனுகத் தொடங்கினான். அவனது தீவிரத்தை தாங்கி கொள்ள முடியாது, கைகளால் மது அவனை தள்ள, மூச்சுக்காற்றுக்காக அவள் போராடுவதை உணர்ந்து, அவள் இதழ்களை தன் இதழ் சிறையிலிருந்து விடுவித்தான்.
"நீ கடைசி வரைக்கும் திருந்த மாட்ட டா கேடி கேடி ."
என்ற படி அடிக்க வந்தவளது கைகளை சேர்த்து பிடித்தவன், அவளை சுற்றி விட்டு, அவளது தோள்வளைவில் முகம் பதித்து கொண்டான்.
"எப்படி டி கண்டு பிடிச்சே?"
"நான் இங்க இருந்து போகும்போது உன் கை விரலை பிடிச்சுட்டு இருந்தேனே! அப்போ நீ மயக்கத்துல நடிச்சிட்டு இருக்கிறதை மறந்து, என் கையோட சேர்த்து அழுத்தம் கொடுக்கும் போதே தெரிஞ்சு போச்சு, நீ கேடி வேலை பாத்துட்டு இருக்கேன்னு. அதனால தான் வீட்ல இருக்கவங்க எல்லாரையும் அனுப்பி வச்சிட்டு, அண்ணி கூட திரும்ப ரூமுக்கு வந்தேன். அப்போ வழக்கம்போல உன் வாயாலயே நடந்த அத்தனையையும் தெளிவா கேட்டாச்சு."
அவளது தோள்பட்டையில் தனது மூக்கை வைத்து உரசியவன்,
"சாரி மதுரா ஒவ்வொரு தடவையும் நான் உன்கிட்ட இப்படி தான் நடந்துக்குறேன், ஆனா என்னால நீ இல்லாம இருக்க முடியாது டி."
"ஓ எம்டீ சார்க்கு எம்மேல எப்போ இருந்து இவ்வளவு லவ் ம்ம்ம்?"
"அதுதான் எனக்கும் தெரியலையே? எப்படி இருந்த என்னை, இப்படி காதல் பைத்தியம் புடிச்சு சுத்த வெச்சுட்டே,....
எனை மறந்து போவாயோ என் கண்மணியே?"
உயிர் பிரியும் வேளையிலும்
உம்மை மறவேன் எம் மன்னவரே....
"அடேய் உங்க காதல் காவியத்தை கொஞ்சம் வீட்டுல போய் பேசேன் டா, கதவு சாத்திட்டு டாக்டர் போலீஸோட வெளியே நிக்கிறதால, வர்றவன் போறவன் எல்லாம் ஒரு மாதிரி பாத்துட்டு போறான்."
மூர்த்தியின் குரல் கேட்டு, மது அவசரமாக வேந்தனிடம் இருந்து விலக,
"இவனுங்களையெல்லாம் கூட வெச்சுகிட்டு.... கட்டின பொண்டாட்டியவே லவ் பண்ண விட மாட்டேங்குறானுங்க. உள்ள வந்து தொலைங்கடா என் உயிர் எடுக்கும் தோழர்களா."
உள்ளே வந்த சந்துருவிடம் மது வேந்தனின் உடல் நலத்தை பற்றி விசாரித்து, அவனை எப்போது வீட்டிற்கு கூட்டி செல்லலாம் என்று கேட்க,
"அவன் நல்லாதாம்மா இருக்கான், ஸ்டிச்சஸ் போட்டிருக்க இடத்துல மட்டும் தண்ணி படாம பார்த்துக்கனும், ரொம்ப ஸ்டெய்ன் பண்ணி எதையும் கொஞ்ச நாளைக்கு தூக்க கூடாது. நீ இப்பவே கூட வீட்டுக்கு கூட்டிட்டு போலாம், அவனை கொஞ்ச நாள் வீட்ல ரெஸ்ட்ல இருக்கற மாதிரி பார்த்துக்கம்மா, இல்லாட்டி வேலை இருக்குன்னு வெளியே கிளம்பிடுவான்."
"சரிங்கண்ணா நான் பார்த்துக்கறேன், கவிகிட்ட சொல்லி இரண்டு பேர்க்கும் வீட்ல இருந்து டிரஸ் கொண்டு வர சொல்லறேன், ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்கறோம்."
வீட்டில் இருப்பவர்களிடம் தாங்கள் வருவதாக கூறியவள், மருத்துவமனையிலிருந்து வேந்தனை நேராக கோவிலுக்குத் தான் அழைத்துச் சென்றாள்.
மாலைவேளையில் அவ்வளவாக கூட்டம் இல்லை, இரவை நெருங்கும் நேரத்தில் தான் திருவிழா கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் தான் அவனை இப்போது அழைத்து வந்திருந்தாள்.
அழகு நாச்சி அம்மையிடம் உளமார மன உருகி வேண்டி கொண்டவள், வேந்தனது கைகளாலேயே குங்குமத்தை தனது நெற்றி வகிட்டில் இட்டுக் கொண்டால்.
மோகினி பள்ளத்தின் அருகில் வந்த போது, குருந்த மரத்திற்கு அடியில் புதிதாக செய்யப்பட்ட, குலதேவியின் கைகூப்பிய நிலையில் அமர்ந்திருந்த சிலையை கண்டவுடன், ஏனோ தன்னிச்சையாக மதுவின் கை விரல்கள், வேந்தனது கை விரல்களை கோர்த்துக் கொண்டது.
வேந்தனுக்கும் அதே நிலை தான் போல, மதுராவின் கைவிரல்களை கோர்த்துக் கொண்டவன், எப்பிறவியிலும் இவளை பிரியாத வரம் வேண்டுமென்று மனமார வேண்டிக் கொண்டான். அவர்களது வேண்டுதலுக்கு செவி சாய்த்தது போல குருந்த மரத்திலிருந்த மலர்கள், அழகாக அவர்கள் மீது மலர் மழையாக பொழிந்து தங்களது வாழ்த்துக்களை கூறியது. நாமும் அவர்களை வாழ்த்தி விடை பெறுவோம்.
அன்புடன்,
சரண்யா சதீஷ்குமார்.
No comments:
Post a Comment