Search This Blog

Followers

Powered By Blogger

Tuesday, July 29, 2025

மன்னவரே 72


 

             அத்தியாயம் 72


    குடிலுக்கு வெளியே ஒற்றர் தலைவன் அரசரிடம் மகிழபுரியில் தற்போது உள்ள நிலைமையினை பற்றி எடுத்து கூறிக் கொண்டிருக்க, குடிலின் உள்ளே மதுரா மித்ரனை கோபத்தோடு திட்டிக் கொண்டிருந்தாள்.


      மித்ரன் அவளிடம் தான் ஒரு போர்வீரரின் மகன் என்று கூறி இருந்தான். அவனின் தாய் தந்தை தற்போது இங்கு இல்லாத காரணத்தால் அரசரும் அரசியாரும் அந்த இடத்தில்  இருந்து தங்களின் திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால், சாந்தகுரு அடிகளார் மித்ரனை இளவரசே என்று அழைத்த போதுதான் அவனின் உண்மையான நிலையினை புரிந்து கொண்டால்.


சிவனடியார் அங்கிருந்து கிளம்பும்போது வாசல் வரை அனைவரும் சென்று அவரை வழி அனுப்பி வைக்க செல்ல, இதை தனக்கு கிடைத்த வாய்ப்பாக எண்ணி மதுராவிடம் பேசுவதற்காக குடிலின் உள்ளேயே மித்ரன் நின்று கொண்டான். ஆனால் அனைவரும் வெளியேறிய பிறகு, மதுரா அனல் பறக்க பார்வை ஒன்றை அவனை நோக்கி வீச, அவன் சிந்தனை ரேகையோடு குழப்பமாக அவளை பார்த்து நின்றான்.


      அவள் அரசரையும் மகாராணியையும் கண்களால் சுட்டிக்காட்டிய போதுதான் அவனுக்கு நினைவு வந்தது, அவளிடமிருந்து தப்பிக்க எண்ணி, அங்கிருந்து செல்லலாம் என்று அவன் திரும்ப முனைகையில் அவள் ஆரம்பித்து விட்டால்.


  "இளவரசருக்கு என்ன அவசரமோ?"


  "மதுரா நான் சொல்வதைக் கேள், நான் எதற்காக அப்படி கூறினேன் என்றால்..."


  "போதும், இதற்கு மேலும் தங்கள் கூறும் பொய்களை என்னை நம்பச் சொல்கிறீர்களா? இன்னும் எத்தனை பெண்களிடம் என்னிடம் கூறியது போலவே பொய்களை அடுக்கி உள்ளீர்கள்?"


  "போதும் மதுரா நிறுத்து, என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?"


  "இருந்தது, சற்று நேரத்திற்கு முன்பு வரை, ஆனால் எப்போது தாங்கள் இத்தனை வருடங்களாக என்னிடம் உண்மையை மறைத்து பழகி வந்துள்ளீர்கள் என்று தெரிந்ததோ, அந்த நொடியில், தங்கள் மீது நான் கொண்ட நம்பிக்கை, பொடி பொடியாக போய்விட்டது."


    அதற்குள் குடிலுக்கு வெளியே ஏதோ சலசலப்பு கேட்க, இருவரும் குடிலுக்கு வெளியே வந்தனர். ரஞ்சனியும் ரகுநந்தனும் காட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் மித்ரன் வேகமாக அங்கிருந்து கிளம்பினான்.ஒருமுறை திரும்பி தனது மனையாளின் நீல நயனங்களை கண்டவன், ஒரு தலையசைப்போடு அவளிடம் விடை பெற்று கொண்டு, குதிரையை தட்டிவிட்டு வேகமெடுத்து விரைவாக செல்ல தொடங்கினான். படைவீரர்கள் மேனகா தேவியை பல்லக்கில் தூக்கிக் கொள்ள அரசரும் மகாராணியும் கூட ஏந்திழை அம்மையாரிடமும் மதுராவிடமும் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். 


  ரகுநந்தன் ரஞ்சனியுடன் குதிரையில் வேகமாக மகிழபுரியை நோக்கி சென்று கொண்டிருந்தான்.  தனது குடும்பத்தாரை நினைத்து ரஞ்சனி அழுது கொண்டே இருந்தாள்.ரகுநந்தனும் மனதில் உள்ள கவலையை அவளிடம் காட்டாமல், அவளுக்கு ஆறுதல் மொழி கூறியபடியே குதிரையை விரட்டிக் கொண்டிருந்தான். 


    அவர்கள் குருந்தங்காட்டை கடந்த சில மணி துளிகளில், குதிரையின் கால் இழுத்து கட்டப்பட்ட கயிறால் தட்டப்பட்டு, குதிரையின் மேலிருந்த இவர்கள் தலைக்குப்புற விழுந்தனர்.


  இருபதுக்கும் மேற்பட்ட போர் வீரர்கள் ரகுநந்தனை சூழ்ந்து கொள்ள, ரஞ்சனியை நோக்கி சென்ற மோகனா  அவளினுள் நுழைய முயல, ரஞ்சனியின் கைகளில் கட்டி இருந்த தாயத்தின் காரணமாக தூக்கி வீசப்பட்டால். மோகனா ரஞ்சனியின் உடலினுள் நுழைந்த பிறகு மட்டுமே, அவளது மாந்திரீக சத்திகள் அனைத்தும் அவளை வந்து அடையும். அதுவரை அவள் வெறும் ஏவல் ஆன்மா மட்டுமே, அதனால் எதையாவது செய்து ரஞ்சனியின் உடலினுள் நுழைய நினைத்தால்.


  ரகுநந்தன் அங்கு படை வீரர்களிடம் போராடிக் கொண்டிருக்க, ரஞ்சனி தன்னை நோக்கி  வந்த கரும்புகையை கண்டு மிரண்டு போய் கத்த தொடங்கினாள்.


      "என் தோழியே என்னைக் கண்டு என்ன பயம் உனக்கு? நான் தான் உன் மோகனா வந்திருக்கிறேன், என் உயிரை அநியாயமாக பறித்து விட்டார்கள். என் சோகத்தை உன்னிடம் கூறி உன்னை கட்டிக்கொண்டு கதறி அழ எண்ணுகிறேன். உன் கையில் உள்ள தாயத்து அதை தடுக்கின்றது. அதை அவிழ்த்து எறிந்து விட்டு உன் தோழியை அரவணைத்து ஆறுதல் கூற மாட்டாயா? அதோ ரகு நந்தனிடம் போரிட்டு கொண்டிருப்பவர்கள் எதிரி நாட்டுப் படைகள். அவனால் சமாளிக்க முடியாமல் திணறுவதை பார், நீ என்னை கட்டிக் கொண்டாள் நான் உன் உடலினுள் புகுந்து, அவர்களை எதிர்த்து ரகுநந்தனை காப்பாற்றுவேன். உடனே அந்த தாயத்தை கழட்டி எறி தோழி."


  அங்கு சண்டையிட்டுக் கொண்டே இங்கு ரஞ்சனியையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்த ரகுநந்தன் சத்தமாக கத்தத் தொடங்கினான்.


      "ரஞ்சி வேண்டாம், அந்த தாயத்தை கழட்டி விடாதே, அவள் மாயாஜாலக்காரி உன் உடலினுள் புகுந்து கொள்ள தந்திரமாக பேசி, உன்னை மூளைச்சலவை செய்கிறாள். நம்பாதே அவளை, இவர்கள் எல்லாம் அவளின் ரத்னபுரியைச் சேர்ந்த படைகள் தான்."


  "ரஞ்சனி நான் அப்படியெல்லாம் செய்வேனா? என்னை பற்றி உனக்குத் தெரியாதா? நான் அப்படியெல்லாம் செய்யக் கூடியவளா? உனது தோழியின் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?"


    "மோகனா அவர் சொல்வதும் உண்மைதான். நான்தான் என் காதுகளால் கேட்டேனே, அங்கு அந்த பெண்ணை பலி கொடுக்க, உனது ஆட்களின் மூலம் அவளை தூக்கி  சென்றதை தான் நான் பார்த்தேனே, ஏன் மோகனா? ஏன் இவ்வாறு மாறிவிட்டாய்? எதற்காக இதெல்லாம் செய்கிறாய் மோகனா? நீ செய்த தவறை உணர்ந்து, கொற்றவை தேவியின் பாதக்கமலங்களை சரணடைந்து விடு, அந்த அன்னை உன் ஆன்மாவிற்கு அமைதி கொடுப்பார்."


  ரஞ்சனி கூறியதைக் கேட்டு ஒரு கேலியான சிரிப்பை உதிர்த்த மோகனா, 


  "அந்தக் கொற்றவை என் ஆன்மாவிற்கு அமைதி கொடுக்கப் போகிறாளா?ஹா ஹா ஹா பைத்தியக்காரி, நான் செய்த வேலையால்தான் அந்த கொற்றவை மந்திர கட்டுப்பாட்டில் உள்ளாள் அது தெரியுமா உனக்கு? உன்னிடம் பேசி இனி பயனில்லை, அப்பா ம்ம்ம்."


  மோகனா உத்தரவிட்ட மறு நொடி ரகுநந்தனை தாக்கிக் கொண்டிருந்தவர்கள் அவன் மீது மூர்க்கமாக ஆயுதங்களை உபயோகிக்க தொடங்கினர். அருகில் உள்ள புதரினில் இருந்து வந்த பத்து பேர் கொண்ட குழு, அவனை சுற்றி வளைத்து கை கால்களை பிடித்துக் கொண்டு, அவனை சித்தரவதை செய்ய ஆரம்பித்தது. ரகுநந்தனால் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் போராட முடியவில்லை, அவன் உடலில் உள்ள சக்தி எல்லாம் வடிய தொடங்கியது. 


  "ரஞ்சனி இப்போது அந்த தாயத்தை கழட்டி எறிகின்றாயா? அல்லது உனது அத்தானின் கைகால்களை பிய்த்து எறியட்டுமா?"


  "ரஞ்சி வேண்டாம், எனக்காக அந்த தாயத்தை கழட்டி எறிந்து விடாதே, அவள் மீண்டும் வந்து விட்டால் இந்த நாட்டு மக்களை எல்லாம் அழித்து விடுவாள், என் ஒருவனுக்காக நீ இதை செய்தால் அவர்களின் எதிர்கால வாழ்வே நாசமாகிவிடும்."


  "இல்லை அத்தான், எனக்கு அவர்களை விட நீங்கள் தான் முக்கியம்."


  என்று கூறிக்கொண்டே தன் கையில் உள்ள தாயத்தை கழட்டி எறிந்தால் ரஞ்சனி. அவள் தூக்கி வீசிய அடுத்த நிமிடம், மோகனா அவள் உடலினுள் நுழைந்து கொண்டாள். ரஞ்சனியின் ஆன்மா அவளது உடலை விட்டு வெளியேறி விட்டது. ரஞ்சனியின் கண்கள் திறந்த போது அவளின் கருவிழிகள் சிவப்பு நிறமாக மின்னியது. அதைக் கண்டு ஓடி வந்த ரகுநந்தனை மோகனா ஒரு பார்வை பார்க்க, கை கால்கள் முறுக்கிக் கொள்ள மூர்ச்சையாகி மண்ணில் விழுந்து விட்டான்.


  "மகளே மோகனா, இவனை இங்கேயே கொன்று புதைத்து விடலாமா?"


  "இல்லை தந்தையே இவன் நமக்கு உபயோகப்படுவான். ஒருவேளை ரஞ்சனி இந்த உடலுக்குள் திரும்பவும் வந்துவிட்டாள், அவளை பயமுறுத்துவதற்காகவாவது, இவன் உயிரோடு இருக்க வேண்டும். இவனை நமது இடத்திற்க்கு இழுத்துச் செல்லுங்கள்."

No comments:

Post a Comment