அத்தியாயம் 28
மது நேரத்திலேயே அலுவலகம் செல்ல வேண்டும் என்று கூறியதால், அவளை எழுப்ப வந்த அவளின் தாய் லட்சுமி, இவள் அலறியதைக் கண்டு ஐந்து அடி தள்ளிப் போய் விழுந்தார்.
தன் தாய் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து, மது எழுந்து வந்து அவரை தூக்க, அவர் அவளை கன்னத்தில் ஒரு இடி இடித்து விட்டு,
"எதுக்குடி இந்தக் கத்து கத்துன? ஆபீஸ்க்கு நீ இன்னைக்கு நேரத்துல போகணும்னு சொன்னதால தானே உன்னை எழுப்ப வந்தேன். அதுக்கு எதுக்குடி இப்படி கத்தற?"
திரு திருவென முழித்த மது,
"அது...அது...அதிகாலையில இப்படி கத்துனா அஷ்டலட்சுமிகளும் நம்ம வீடு தேடி வரும்னு சொல்லி கேள்விப்பட்டம்மா அது தான் கத்திப் பார்த்தேன்."
இந்த வாய்க்காகவே சில பல கோட்டுகளை, பரிசாக தன் தலையில் பெற்றுக்கொண்டு, குளியலறைக்குள் புகுந்தால் மது,
நீர்திவளைகள் தன் தலை மீது விழும் போது, கனவுகள் அனைத்தும் கலைந்து போனது போன்று ஒரு உணர்வு இருந்தது மதுவிற்கு, எவ்வளவு முயன்றும் நினைவலைகளை அவளால் மீட்டெடுக்க முடியவில்லை.
தலையினை உலுக்கி கொண்டு நிகழ்காலத்தோடு ஒன்றிட எண்ணினால்.
இன்று வினு அதிகாலையிலேயே, மதுவின் வீட்டிற்கு கிளம்பி வந்து விட்டாள்.
அரக்க பறக்க ரெடியாகி வந்த மது, அம்மாவின் திட்டுகளோடு, அவர் தந்த உணவையும் மென்று முழுங்கி விட்டு, வினுவுடன் வேந்தனின் அலுவலகம் நோக்கி புறப்பட்டாள்.
"அடுத்தவங்களுக்கு பிரச்சனை கொடுத்து, வேடிக்கை பார்க்கிற உன்னையே, அந்த ஓனர் இப்படி அரக்க பறக்க ரெடியாக வைச்சுட்டாரே இதுக்காகவே அவர பாராட்டியாகனும்."
"அதிக சந்தோஷம் கொள்ளாதீர்கள் மன்னா, என்னை இப்படி உருண்டோட வைத்த குற்றத்திற்காகவே, நான் அந்த ஆபீஸிலிருந்து வெளி வருவதற்குள், உங்கள் ஓனரின் ரத்த அழுத்தத்தை எகிற செய்து, அவரை தலை தலையாய் அடித்து கொள்ளும்படி செய்கிறேனா இல்லையா என்று பாருங்கள்."
"அட என் மங்குனி அமைச்சரே, ஏற்கனவே தாங்கள் நன்றாக...செய்த செயலுக்காகத்தான் தற்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம்."
"அதனால் தங்கள் திருவாயை மூடிக்கொண்டு, குரங்கு சேட்டை எதுவும் செய்யாமல் இருந்தாலே நல்லது."
மது வினுவை முறைத்து கொண்டே பார்ப்போம் பார்ப்போம் என்றிட,
"அதுதானே தாங்கள் திருந்தி விட்டால் இந்த பூமி சுற்றுவதை நிறுத்தி விடாதா என்ன? அப்பறம் இந்த உலகம் என்ன ஆவது இந்த உலகில் வாழும் ஜீவராசிகளின் கதி என்ன ஆவது?"
"போதும் டி உன் புது ஒனரை, சரி சரி நம்ம...நம்ம புது ஒனரை நான் எதுவும் செய்யல சரியா."
அவர்கள் அலுவலகம் வந்து சேர்ந்த போது, அந்த ஆபீஸை சேர்ந்த பியூன் மட்டுமே அங்கு இருந்தார். அவர் அவர்களிடம் வந்து,
“சார் கொடுக்கச் சொன்னார்.”
என்று ஒரு கோப்பினை கொடுத்துவிட்டு,
“இதுல நீங்க பாக்க வேண்டிய வொர்க்கும், ஏதாவது சந்தேகம்னா கேக்குறதுக்கு சாரோட போன் நம்பரும், இருக்கிறதாக சொல்ல சொன்னார்.”
என்று கூறிச் சென்றார்.
அவர் கொடுத்து சென்ற கோப்பினை திறந்துப் பார்த்த வினு விழி விரித்து நிற்க, அவள் அவ்வாறு நிற்பதைக் கண்டு அப்படி என்னவா இருக்கும் என்று அதனை வாங்கிப் பார்த்த மதுவின் கண்களில் சிகப்பு நிறம் ஏறியது.
வினுவோ கோப்பினில் உள்ளவற்றை படித்துவிட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
மது தன் கையில் இருந்த கோப்பினால் அவளின் தலையில் அடித்து விட்டு, கோப்பினில் இருந்த வேந்தனின் அலைபேசி எண்ணிற்கு அழைத்தாள்.
ஆனால் அவனோ இவள் அழைப்பை ஏற்காமல், மதுவின் ரத்த அழுத்தத்தை எகிற செய்து கொண்டிருந்தான்.
"அடேய், என் உசுர எடுக்கவே பொறந்தவனே, போனை எடுத்து தொலையேன்டா."
இங்கு இவளை ஹைப்பிச்சில் கத்த வைத்த வேந்தனோ, அங்கு அவளின் வீட்டுக் கதவை தட்டிக் கொண்டிருந்தான்.
ஆஸ்பத்திரியில் உள்ள பூவுப்பாட்டியை சென்று காண, தயாராகி கொண்டிருந்த சிவராமன் குடும்பத்தார் வாசலில் அரவம் கேட்கவும், யார் என்று சென்று பார்த்தனர்.
முதலில் வேந்தனைக் கண்டு யார் என்று அடையாளம் தெரியாமல் லட்சுமியம்மா விசாரிக்க அவன்,
"என்னை உங்களுக்கு தெரியாது, ஆனால் இவங்களை உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்."
என்று தனக்குப் பின் நின்றிருந்த பூவுப்பாட்டியையும் வடிவுப்பாட்டியையும் காட்டினான்.
தன் அத்தையை கண்டு, இது பிரம்மை தானோ என்று அதிர்ந்து நின்ற லட்சுமி அம்மாவை, அமுதன் வந்து உலுக்கிய பிறகே சுயநினைவுக்கு வந்தார்.
பசுவைக் கண்ட கன்றாக, தனது வளர்ப்புத் தாயை கட்டிக்கொண்டு கதறி அழ தொடங்கி விட்டார் லட்சுமியம்மா.
"என் ராசாத்தி நாஞ்சாகறதுக்குள்ள உன்ன பாத்து மன்னிப்பு கேட்கணுமுன்னு நினைச்சேன் தாயி, என்னை மன்னிச்சிடும்மா."
"அச்சோ என்னத்தே இது, எதுக்கு இப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லறீங்க."
"இல்ல தாயி என்ற அண்ணன் சாகும்போது, உன்னை என் மகமாரி பாத்துக்குறேன்னு சொன்னேன், ஆனா அந்த வாக்குறுதியை என்னால காப்பாத்தவே முடியலயே."
"நீங்க வேற உங்க மகன் வேறயாத்தே, அவர் என்னை மகாராணி மாதிரி பார்த்துக்கிறாரு."
"அடி மகளே உங்க அத்தை கிட்ட இருந்து பார்வையை இங்கிட்டும் திருப்புடியம்மா, நானும் என் பேரனும் கூடத்தான் வந்திருக்கோம். எங்களை இப்படியே வாசலோட வழியனுப்பி வைச்சிடலாம்னு நினைச்சுட்டு இருக்கிறயா."
"அச்சோ வடிவுசித்தி அப்படியெல்லாம் இல்ல. உள்ளே வாங்க, இது உங்க வீடு வாங்க வாங்க. நாங்க எல்லோரும் அத்தையை பார்க்கலாம்னு தான் ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டு இருந்தோம்."
உள்ளே வந்தவர்களிடம் தன்மகன் கனியமுதனை அறிமுகம் செய்து வைத்தார்.
"எஞ்சாமி உன்ன பாக்குறதுக்கு, இந்த கிழவிக்கு இத்தனை வருஷம் ஆயிருக்கே. அப்படியே உருவத்துல எங்க அண்ணனை உரிச்சி வச்ச மாதிரி பிறந்திருக்கப்பு"
"உருவம் மட்டும் இல்லத்தே குணத்துலயும் அவன் உங்க அண்ணணை போலத்தான். அவந்தங்கச்சின்னா அவனுக்கு உசுரு. என்நேரமும் அவள வம்பு இழுத்திட்டே இருந்தாலும், அவ முகம் வாடக் கூட விடமாட்டான்."
அப்போதுதான் வேந்தனுக்கு மதுவின் ஞாபகம் வந்தது. தனது அலைபேசியை எடுத்து பார்த்தவன், அதில் பலமுறை இவனுக்கு மது அழைத்திருந்ததாக காண்பிக்க, எதற்காக அவள் அழைத்திருப்பாள் என்பதை புரிந்து கொண்ட வேந்தன், விஷமப் புன்னகையுடன் திரும்ப அவளுடைய அலைபேசிக்கு அழைத்தான்.
No comments:
Post a Comment