Search This Blog

Followers

Powered By Blogger

Tuesday, May 27, 2025

மன்னவரே 16


 

           அத்தியாயம் 16


  மூர்த்தி என்னதான் தன்னை தைரியமாக காட்டிக் கொண்டாலும், சுற்றி இருந்த இருள் அவன் இதயத்தின் சத்தத்தை, அவனுக்கே கேட்கும் அளவுக்கு பலமாக அடித்துக் கொண்டிருந்தது.


      "படுபாவிப் பயலுக, போன இடத்துல அங்கேயே செட்டில் ஆயிட்டானுங்களா?


      இப்படி என்ன இருட்டுல தனியா காவல் காக்க வச்சுட்டானுங்களே."


      சரசரவென்று தனக்கு பின்னே ஏதோ சத்தம் கேட்க பயத்தில் அவ்விடத்தை விட்டு ஓட தொடங்கினான்.


  மூர்த்தி தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்று விட்டு, நேராக தம் நண்பர்களை பார்க்க வேட்டியுடன் வந்திருந்தான்.


  வெற்றி ஏதோ அவசரம் என்று தொலைபேசியில் அழைக்க, இவனும் வேந்தனுடன் கிளம்பி விட்டான்.


    கல் தடுக்கி விழுந்து எழுந்த போது, தன் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தான்.


அடித்த காற்றில் வேட்டி பறந்து சென்று ஒரு மரத்தின் அடிக்கிளையில் சிக்கிக் கொண்டது.


          கிளையில் சிக்கிக்கொண்ட தனது வேட்டியை எடுக்க முயன்று கொண்டிருக்கும்போது, சிறிது சிறிதாக வெளிச்சம் பரவுவதை உணர்ந்தான்.


               சற்று முன் காட்டிலிருந்து வெளியேறியவர்களில் இருவர், தீப்பந்தத்துடனும் கை நிறைய பொருட்களுடனும், காட்டினை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.


         உடனே சட்டென்று மரத்துக்கு பின்னால் சென்று, மூர்த்தி ஒளிந்து கொண்டான்.


தீப்பந்தம் பிடித்துக் கொண்டு வந்தவன், மூர்த்தியின் வேட்டியை கண்டு, ஏதோ ஒரு வெள்ளையான உருவம் காற்றில் மிதந்து வருவதாக எண்ணி, பயந்து போய் அருகில் வருபவனிடம் காண்பித்தான்.


      "அய்யோ அண்ணே, அங்க பாருங்க ஏதோ வெள்ளையா ஒரு உருவம், காத்துல மிதந்துட்டு இருக்கு."


    இன்னொருவனும் அதனைக் கண்டு மிரண்டு தான் போனான்.


    மூர்த்திக்கு சட்டென்று ஒரு யோசனை மனதில் தோன்றியது. அதன்படி சத்தமாக சிரிக்கத் தொடங்கினான்.


        ஏற்கனவே அந்த வெள்ளை உருவத்தை கண்டு பயந்து போய் நின்றிருந்த இருவரும், இந்த சிரிப்பு சத்தத்தில் கையில் இருந்த பொருட்களை கீழே போட்டு விட்டு சுற்றிமுற்றி தேடினர்.


  "யா...யார்? யாரது?"


    மூர்த்தி தன் குரலை மாற்றி கொண்டு சத்தமாக பேச தொடங்கினான்.


      "அண்ணே.... என்ன தெரியலையா? நான் தான் மாரிரிரி."


        "மாரியா? நீ... நீ தான் செத்துப் போயிட்டியே?"


        "ஆமா நானே தான். என்ன மட்டும் அப்படியே தனியா விட்டுட்டுப் போய்டீங்களே, எப்பவும் உங்களோட தானே நான் இருப்பேன், அதான் இப்போ உங்கள தேடி வந்துட்டேன். 


    நான் சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா? எனக்கு ரொம்ப தாகமா இருக்கு கொஞ்சம் குடிக்க ரத்தம் கிடைக்குமா?"


        இவன் இப்படி கூறியதும் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு, வந்த பாதையிலேயே திரும்பி ஓட ஆரம்பித்தனர். 


    "அப்பாடா இனி கொஞ்ச நேரத்துக்கு இவனுங்க தொல்லை இல்லை. இவனுங்க போய் ஆளுங்களை கூட்டிகிட்டு திரும்ப வர்றதுக்குள்ள, எப்படியாச்சும் வேந்தனும் தீபனும் காட்டுக்குள் இருந்து வெளியே வந்திடனும்."


        காட்டினுள் தங்களுக்கு முன்னால் மலை போன்ற உருவம் கொண்டு, பூமி அதிர வேகமாக, நெருப்பினை நோக்கி ஓடிக் கொண்டிருந்த காட்டெருமைகளை தான், வேந்தனும் தீபனும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

      கூடாரத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மூவர் இவற்றைக் கண்டு, மற்றவர்களை நோக்கி கத்திக் கொண்டே ஓடினர்.


    "தீபா இதுதான் நமக்கு கிடைச்ச சரியான சந்தர்ப்பம், அந்த சுரங்கப்பாதை நோக்கி ஓடு சீக்கிரம்."


          வேந்தனுக்கு மனதின் உள்ளுணர்வில் ஏதோ உந்துதல்  போன்று தோன்ற, சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தான்.


          அங்கு காட்டு எருமைகளை பின்னிருந்து விரட்டிக் கொண்டே, ஒரு மான், நீலக் கண்களுடன் அவனைப் பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்தது.


      அதனை கண்டவுடன் பிரம்மை பிடித்தது போல வேந்தன் அசையாமல் நின்று விட்டான். அவன் மனதில் பல எண்ணங்களும் காட்சிகளும் மாறி மாறி வந்து போயின.


      அதன் கண்களில் இருந்தது ஏக்கமா! அல்லது மனதின் வலியா! என்று பிரித்தறிய வேந்தனால் முடியவில்லை.


      ஆனால், அதன் கண்கள் எனும் நீல நிற ஆழ்கடலுக்குள், மூழ்கிடவே வேந்தனின் மனம் விரும்பியது.


    அசையாது நிற்கும் தன் நண்பனை உலுக்கி, நிகழ்காலத்துக்கு கொண்டு வந்த தீபன், அவனை இழுத்துக்கொண்டு சுரங்க பாதையை நோக்கி ஓடினான்.


    "டேய் விடுடா, அந்த மான் அந்த மான்கிட்ட நான் போய் ஆகணும்."


      "லூசாடா நீ? அங்க எங்கடா மான் இருக்கு? காட்டெருமைங்க தான் கட்டுக்கடங்காம ஓடிக்கிட்டு இருக்கு. அதுக்குள்ள போய் சாக சொல்றியா?"


      "அங்க... அங்க உனக்கு ஏதும் தெரியலையா தீபா? அந்த மான் அந்த மான் உனக்கு தெரியலையா? அங்க அந்த மரத்துகிட்ட?"


        தீபன் நின்று திரும்பி பார்த்து,

          "அங்க ஒண்ணுமே இல்லயேடா. நாம இங்க இருந்து முதல்ல தப்பிச்சாகணும்."


        "இல்லடா நான் போய் ஆகணும் போயே ஆகணும்."


        தன் கையை உதறிவிட்டு செல்ல முயற்சித்தவனை தம் பலம் கொண்ட மட்டும், இழுத்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தீபன்.


          இவர்கள் சென்று அதிக நேரம் ஆனதால் வெற்றியும் அந்த சுரங்கப்பாதையின் எல்லையில் இருந்து, காட்டுக்குள் இருக்கும் மற்றொரு எல்லைக்கு இவர்களை தேடி வந்து விட்டான். 


          தூரத்திலிருந்தே தீபன் வேந்தனை இழுத்துக் கொண்டு வருவதை கண்டு, ஏதோ விபரீதம் என்று அறிந்து அங்கு விரைந்தான்.


        "என்னடா ஆச்சு? நீ ஏன் இவனை பிடிச்சு இழுத்துட்டு வர்றே?"


            "அவன் ஏதேதோ உளறிட்டு இருக்கான். முதல்ல இவனை புடி, நாம அவனுங்க வர்றதுக்குள்ள அவங்க கண்ணுல படாம இந்த காட்டுக்குள்ள இருந்து வெளியேறி ஆகணும்."


        இருவரும் சேர்ந்து வேந்தனை சுரங்கப்பாதை வழியே காட்டுக்கு வெளியில் கூட்டி வந்தனர்.


              வெளியே வந்த பிறகு தான் வேந்தனுக்கு, மனது ஒரு நிலை பட்டது.


          தான் ஏன் இவ்வாறு நடந்து கொண்டோம் என்று அவனுக்கே புரியவில்லை.


        மூர்த்தி அச்சுரங்கப்பாதையின் வாயிலில் நின்று கொண்டு இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தான். அவனது நிலையை கண்டதும் வெற்றியும் தீபனும் சிரிக்க தொடங்கி விட்டனர்.


        "என்ன கண்றாவி டா இது? உனக்கு வேட்டி கட்டினால் இந்த பட்டாபட்டி போடுற பழக்கம் எல்லாம் இல்லையா? இந்த கொடுமையெல்லாம் பாக்கணும்னு நம்ம தலையில எழுதி இருக்குது பாரு." 


    "டேய் நீங்க அப்புறமா புலம்புங்க, ஏற்கனவே காட்டுக்குள்ள வர இருந்த ரெண்டு பேரை, இப்பதான் விரட்டி விட்டிருக்கேன், முதல்ல அந்த மரத்தில் இருக்க என் வேட்டிய எடுத்துட்டு சீக்கிரம் இந்த இடத்தை காலி பண்ணலாம் வாங்க டா."


      அதற்குமேல் நண்பர்கள் நேரத்தை வீணடிக்கவில்லை, மறக்காமல் மூர்த்தியின் வேட்டியையும் எடுத்துக்கொண்டு தம் வாகனத்தை நோக்கி சென்றனர்.


      வேந்தனின் மௌனத்தை நண்பர்கள் யாரும் கலைக்கவில்லை. அவனின் மனக்குழப்பம்  முகத்தில் தெரிந்ததால், அவனே மீண்டு வரட்டும் என்று விட்டுவிட்டனர். 


  மூர்த்தி இது பற்றி கேட்க, பிறகு சொல்வதாக செய்கையால் கூறிவிட்டனர்.


    நண்பர்கள் நால்வரும் நேராக வெற்றியின் பண்ணை வீட்டுக்கு தான் சென்றனர்.


      தீபன் தன் கையில் உள்ள அந்த இரு காகிதங்களை பிரித்துப் பார்க்க, அதில் கொற்றவை தேவியின் சிலை செம்பளுப்பு நிறமாக மிளிர்ந்ததை கண்டான்.


"ஹேய் இது கொற்றவை தேவி சிலை தானே, ஆனா இது ஏன் வேற கலர்ல இருக்கு?"


  "நானும் அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கேன். இந்த மாதிரி சிலையை அங்க பார்த்த மாதிரியே ஞாபகம் இல்லையே. நம்ம நாச்சியம்மன் கோவிலில் தான் கொற்றவை தேவி சிலையோட போட்டோவும் கோவிலோட போட்டோவும் இருக்கே."


      வேந்தனின் முகம் இப்போது தெளிவாக இருந்ததை கவனித்த தீபன், அந்த இரு காகிதங்களையும் அவனிடம் நீட்டினான்.


      "நீ இதை பத்தி ஏதாச்சும் கேள்விப்பட்டிருக்கியா வேந்தா."


    அந்த புகைப்படத்தை கண்டவுடன் வேந்தனுக்கு இறந்த காலமானது ஒரு சுழல் போல், அவனை உள்ளே இழுப்பது போன்று இருந்தது.


    பல காட்சிகள் மனதினில் தோன்றி மூளைக்குச் செய்தி அனுப்ப, நிகழ் காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் இடையே உண்டான அழுத்தத்தை தாங்க முடியாமல், மயக்கமடைந்து கீழே விழுந்தான் வேந்தன்.

No comments:

Post a Comment